530 இலங்கை அகதிகள் குடும்பங்களுக்கு நிவாரணப் பொருட்கள்; நெகிழ்ந்து நன்றி தெரிவித்த மக்கள்! 

530 இலங்கை அகதிகள் குடும்பங்களுக்கு நிவாரணப் பொருட்கள்; நெகிழ்ந்து நன்றி தெரிவித்த மக்கள்! 
Updated on
2 min read

உலகையே உலுக்கிப் போட்டிருக்கிறது கரோனா. உலகம் முழுவதுமே ஊரடங்கு எனும் சொல் செயலாக வெளிப்பட்டுக் கொண்டிருக்கிறது. மக்கள், வாழ்க்கையையும் வாழ்வாதாரத்தையும் தொலைத்து, கைபிசைந்து தவித்து மருகிக் கொண்டிருக்கிறார்கள். இந்தத் தருணத்தில், நாளைய வாழ்க்கைக்கு நம்பிக்கையூட்டுகிற விதமாக, கை கொடுத்துக் கொண்டிருக்கின்றன தொண்டுநிறுவனங்கள் பலவும்!


‘காவல்துறை உங்கள் நண்பன்’ எனும் வார்த்தைக்கேற்ப, ஒருபக்கம் ஊரடங்குப் பணியிலும் இன்னொரு பக்கம் சேவையிலுமாக செயலாற்றி வருகின்றனர் காவல்துறையினர்.


காவல்துறையுடன் சக்தி ஃபவுண்டேஷன் அமைப்பும் இணைந்து அவ்வப்போது மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் உள்ளிட்ட உதவிகளைச் செய்து வருகிறது. சென்னைப் பெருநகர காவல் பகுதிக்குள் வாழும் இலங்கை தமிழ் அகதிகளின் குடும்பத்தை கருத்தில் கொண்ட சக்தி ஃபவுண்டேஷன் அமைப்பினர், மாநகரக் காவல்துறையினரின் பங்களிப்புடன், ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகள் அமைப்பின் ஒருங்கிணைப்புடன் (UNHCR) 530 இலங்கை தமிழ் அகதிகள் குடும்பங்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கினர்.


சென்னை வளசரவாக்கம் கல்யாணி திருமண மண்டபத்தில் காவல் துணை ஆணையர்கள் முன்னிலையில் கருணை மனதுடன் நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டன. நுங்கம்பாக்கம் மற்றும் வளசரவாக்கம் காவல் ஆய்வாளர்கள், முன்னின்று இந்த நிகழ்வுகளை நடத்தினர். சூளைமேடு மற்றும் வளசரவாக்கம் காவல் ஆய்வாளர்கள் முன்னின்று ஏற்பாடுகளைச் செய்தனர்.


முகாம்களில் வாழும் இலங்கை அகதிகளுக்கு தமிழ்நாடு அரசு எல்லாவித உதவிகளையும் தொடர்ந்து செய்துவருகிறது, அதேசமயம், இவ்வாறான உதவிகள் அகதிகள் முகாம்களுக்கு வெளியில் வாழும் இலங்கைத் தமிழர்களை மனதில் நினைத்து, அவர்களுக்கு உதவிக்கரம் நீட்டுவதும் நிவாரணப் பொருட்கள் வழங்குவதும் எல்லோராலும் பாராட்டப்பட்டது.


காவல்துறையின் இந்த அரிய சேவையையும் சக்தி ஃபவுண்டேஷனின் கரோனா கால தொடர் சேவைகளையும் இலங்கைத் தமிழ் அகதிகளும் அவர்களின் குடும்பத்தாரும் நெகிழ்ந்து பாராட்டினர். நெக்குருகி நன்றி தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in