

சமூகத்தில் தொற்று நோய்கள், இயற்கை சீற்றங்கள் உள்ளிட்ட எந்த அசாதாரண நிகழ்வுகள் நடந்தாலும் தூய்மைப்பணியாளர்களுக்கு மட்டும் ஒய்வே கிடையாது.
அவர்களே உடனே பணிக்கு திரும்பி வந்துவிட வேண்டும். அதுவும் மாநகராட்சி தூய்மைப்பணியாளர்களுடைய அன்றாட பணி அளபரியது. தற்போது ‘கரோனா’ ஊரடங்கால் மக்கள் வீட்டிற்குள் முடங்கிப்போய் உள்ளார்கள்.
ஆனால், தூய்மைப்பணியாளர்கள் மட்டுமே வீடு வீடாக சென்று மக்கள் பயன்படுத்தும் பல்வேறு விதமான குப்பைகளை சேகரிக்கின்றனர். சாலைகளையும், வீதிகளையும் தூய்மைப்படுத்துகிறார்கள்.
பாதாள சாக்கடைகளை தூர்வாருகிறார்கள். மருத்துவமனைகளிலாவது மருத்துவப்பணியாளர்கள், போதிய பாதுகாப்பு உபகரணங்களுடன் நோயாளிகளை அணுகுகிறார்கள். அதனால் அவர்களுக்கு இந்த நோய் தொற்று பெரியளவில் வரவில்லை.
ஆனால், முகக்கவசம், கையுறை உள்ளிட்ட வேறு எவ்வித பாதுகாப்பு உபகரணங்களும் இல்லாமல் பணிபுரிந்த தூய்மைப்பணியாளர்கள் பலர், கரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சைப்பெற்றார்கள்.
கிராமப்புற தூய்மைப்பணியாளர்களுக்கு அந்த பாதுகாப்பு உபகரணங்கள் கூட வழங்கப்படவில்லை. அப்படியிருந்தும் தூய்மைப்பணியில் இருந்து பின்வாங்காமல் உயிரை பனையம் வைத்து பணிபுரிந்து கொண்டிருக்கிறார்கள்.
மதுரை மாநகராட்சியில் தற்போது ஒரளவு கட்டுக்குள் இருப்பதற்கு தூய்மைப்பணியாளர்களின் அன்றாட சுகாதாரப்பணி முக்கியத்துவம் வாய்ந்தது.
கரோனா பரவுவதை தடுக்கும் வகையில் அன்றாட சுகாதாரப்பணிகளுக்கு மத்தியில் ‘பவர் ஸ்பிரே’ மூலம் தினமும் 100 வார்டுகளில் ஒவ்வொரு வார்டுகளுக்கும் சென்று கிருமி நாசினி மருந்துகளும் அடிக்கின்றனர்.
மாநகராட்சியில் 18 லட்சம் மக்கள் வசிக்கின்றனர். 4 லட்சத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் உள்ளனர். அவர்கள் வசிக்கும் குடியிருப்புகள், வணிக வளாகங்கள் மற்றும் பொதுவெளிகளில் வாகனங்களில் சென்று தூய்மைப்பணியாளர்கள் கிருமி நாசினி அடிக்கின்றனர்.
‘கரோனா’ பரவிய கட்டுப்படுத்த பகுதிகளிலும் தூய்மைப்பணியாளர்கள் சென்று கிருமி நாசினி அடிப்பது மற்ற அன்றாட சுகாதாரப்பணிகளையும் செய்கின்றனர்.
தற்போது சுகாதாரப்பணி, கிருமிநாசினி பணிகள் மேற்கொள்வதற்கு ஒரு நாள் போதுமானதாக இல்லை என்பதால் இரவு வேளையிலும் தூய்மைப்பணியாளர்கள் பணிபுரிகின்றனர்.
அவர்கள் இரவு நேரங்களிலும் மக்கள் தூங்க செல்லும் நேரங்களில் தூய்மைப்பணியாளர்கள் மட்டும் வீட்டிற்கு செல்லாமல் வார்டுகள் தோறும் சென்று கிருமிநாசினி அடிக்கின்றனர்.
கரோனா ஒழிப்பு பணியில் ஈடுபட்டு வரும் தூய்மை பணியாளர்கள் இரவு பகல் பாராமல் கடுமையாக வேலை செய்து வருவதால் அவர்கள் சில நேரங்களில் பொது இடங்களில் கண் அசந்து தூங்கும் பரிதாபமும் நடக்கிறது.
வீட்டிற்குள் இருக்கும் மக்களுக்காக வெளியே பணிபுரியும் தூய்மைப்பணியாளர்கள் போற்றுதலுக்குரியவர்கள் என்பதால் அவர்களுக்கு தற்போது சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் கூடியுள்ளது.
ஆனால், அவர்களுக்கான வாழ்வாதாரப்பிரச்சனையான பணி நிரந்தரம், உழைப்புக்கேற்ற கூலி மட்டும் இன்னும் கைகூடவில்லை.
இந்த ‘கரோனா’ ஊரடங்கில் அவர்களுடைய பணியின் முக்கியத்துவத்தை உணர்ந்து ஒப்பந்த அடிப்படையில் மாநகராட்சி, நகராட்சி பேரூராட்சி, கிராம ஊராட்சிகள் மற்றும் அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் அவர்களை பணிநிரந்தரம் செய்து அவர்களுக்கு மற்ற அரசு பணியாளர்களை போல் சலுகைகளை வழங்க வழங்குவதே அவர்களுக்கு செய்யும் கவுரவமாக இருக்கும்.