Last Updated : 23 May, 2020 06:36 PM

 

Published : 23 May 2020 06:36 PM
Last Updated : 23 May 2020 06:36 PM

மன்னார் வளைகுடாவில் கடல் ஆமைகள் நடமாட்டம் அதிகரிப்பு: உலக கடல் ஆமைகள் தினத்தில் மகிழ்ச்சி தகவல்

தூத்துக்குடி

உலக கடல் ஆமைகள் தினம் இன்று (மே 23) கொண்டாடப்படும் நிலையில், கரோனா ஊரடங்கு காரணமாக மன்னார் வளைகுடா பகுதியில் மாசு குறைந்து கடல் ஆமைகள் நடமாட்டம் அதிகரித்திருப்பதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.

கடல் ஆமைகள் வேகமாக அழிந்து வரும் நிலையில், அவைகளை அழிவில் இருந்து பாதுகாக்க மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஆண்டு தோறும் மே 23-ம் தேதி உலக கடல் ஆமைகள் தினம் கடைபிடிக்கப்படுகிறது.

இந்த ஆண்டு கரோனா ஊரடங்கு காரணமாக உலக கடல் ஆமைகள் தின விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் ஏதும் நடைபெறவில்லை. அதேநேரத்தில் ஊரடங்கு காரணமாக கடலில் மாசு குறைந்து கடல் ஆமைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது.

இது குறித்து மன்னார் வளைகுடா கடல்வாழ் உயிர்கோள காப்பகத்தின் தூத்துக்குடி வனச்சரக அலுவலர் ரகுவரன் கூறியதாவது: கரோனா ஊரடங்கு காரணமாக மன்னார் வளைகுடா கடல் பகுதியில் மீன்பிடித்தல் உள்ளிட்ட நடவடிக்கைகள் குறைந்துள்ளன.

மேலும், கடற்கரைகளில் மக்கள் நடமாட்டம் இல்லை. இதனால் கடலில் மாசு, குறிப்பாக பிளாஸ்டிக் மாசு குறைந்துள்ளது. இதனால் கடல் ஆமைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது.

உலகில் உள்ள 7 வகை கடல் ஆமைகளில் சித்தாமை, அலுங்காமை, பெருந்தலை ஆமை, பச்சை ஆமை மற்றும் தோணி ஆமை ஆகிய 5 வகை ஆமைகள் மன்னார் வளைகுடா பகுதியில் காணப்படுகின்றன.

கடல் ஆமைகளை பொறுத்தவரை டிசம்பர் முதல் மார்ச் மாதம் வரை முட்டையிட கடற்கரைக்கு வரும். இம்முறை மன்னார் வளைகுடா கடற்கரை பகுதிகளில் சேகரிக்கப்பட்ட 1040 கடல் ஆமை முட்டைகள் கீழமுந்தல் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த செயற்கை பொறிப்பகத்தில் வைத்து குஞ்சு பொறிக்க வைக்கப்பட்டன. மொத்தம் 998 கடல் ஆமை குஞ்சுகள் வந்தன. அவைகள் கடந்த மார்ச் மாதம் கடலில் விடப்பட்டன.

தற்போது மீனவர்கள் மத்தியில் கடல் ஆமைகளை பாதுகாப்பது குறித்த விழிப்புணர்வு நல்ல முறையில் ஏற்பட்டுள்ளது. வலைகளில் கடல் ஆமைகள் சிக்கினால் கூட பாதுகாப்பாக விடுவித்து விடுகின்றனர்.

வனத்துறை சார்பில் கடல் ஆமைகளை பாதுகாப்பாக விடுவிக்கும் மீனவர்களை பாராட்டி கவுரவித்து பரிசுகளை வழங்கி வருகிறோம் என்றார் அவர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x