

மதுரையில் அரசுப் பேருந்து ஓட்டுநர் சக்திவேல், 49 நாட்களாக ஒரு நாள்கூட விடுமுறையே எடுக்காமல் பேருந்து ஓட்டியிருக்கிறார்.
"பொது முடக்க காலத்தில் அரசு மருத்துவர்களும், செவிலியர்களும் பணிக்குச் செல்ல, பேருந்து ஓட்ட யார் தயார்?" என்று போக்குவரத்துக் கழகம் கேட்டபோது வழக்கமாக அந்த வழித்தடத்தில் ஓட்டுகிற டிரைவர்களே தெறிந்து ஓடியபோது, "அந்த டவுன் பஸ்ஸை நான் ஓட்டுகிறேன் சார்" என்று முன்வந்தவர் திருநெல்வேலி பை பாஸ் ரைடர் பேருந்து ஓட்டுநரான சக்திவேல்.
இன்றுடன் அவர் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்குப் பேருந்து ஓட்ட ஆரம்பித்து 49 நாட்கள் ஆகின்றன. மருத்துவமனையில் மூன்று ஷிஃப்ட் வேலை பார்க்கும் மருத்துவர்கள், செவிலியர்களை மதுரையைச் சுற்றியுள்ள அவரவர் ஊருக்குச் சென்று அழைத்து வருவதுடன், மீண்டும் அவர்களது ஊருக்கே கொண்டு விடுவதுதான் இவரது வேலை. தினமும் காலை 5.30 மணி முதல் இரவு 9 மணி வரையில் பணி செய்கிறார் சக்திவேல். அவர் ஒரு நாள் கூட விடுப்பு எடுக்க முன் வரவில்லை. மாதத்தில் ஒரு நாளாவது வார விடுமுறை எடுக்க வேண்டாமா? என்று அதிகாரிகள் கடிந்துகொண்டதால் ஒரே ஒரு நாள் மட்டும் விடுப்பு எடுத்துள்ளார்.
இதுகுறித்து அவரிடம் கேட்டபோது, "ஒவ்வொரு டாக்டரும், நர்சும் என்னுடைய செல்போன் எண்ணை வாங்கி வைத்திருக்கிறார்கள். எப்படி ஸ்கூல் போற பிள்ளைங்க அவங்க வேன் டிரைவர்கிட்ட, எங்க வந்துட்டு இருக்கீங்கன்னு உரிமையா கேட்பாங்களோ, அதே மாதிரி அத்தனை மருத்துவப் பணியாளர்களும் உரிமையாக போனில் பேசுவார்கள். கொஞ்சம் முன்னப்பின்ன ஆனாலும் ஒருவர் விடுபடாமல் அத்தனை பேரையும் மருத்துவமனைக்கு அழைத்துவந்துவிடுவேன். ஒவ்வொரு டாக்டரோட வருகையையும் எதிர்பார்த்து எத்தனை ஆயிரம் நோயாளிகள் காத்திருக்கிறார்கள்? நான் விடுமுறை எடுத்தால் சின்னக் குழப்பம் வந்துவிடுமோ என்று பயம். அதனால்தான் லீவு எடுக்கவில்லை" என்றார்.
இதுவரையில் அரசு மருத்துவமனைகளுக்கு இலவசமாக இயக்கப்பட்ட பேருந்துகளில் டிக்கெட் போடச் சொல்லிவிட்டது அரசு. பணிக்கு வந்த, வராத அனைத்து போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கும் ஊதியமும் கொடுத்துவிட்டது அரசு. கரோனா காலத்தில் உயிரைப் பணயம் வைத்து மருத்துவர்களுக்காகப் பேருந்து ஓட்டிய ஊழியர்களுக்கு சிறப்பு ஊதியம், சுகாதாரத் துறையில் இருந்து வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.
"அவ்வாறு சிறப்பு ஊதியம் வழங்கப்பட்டால், முழு ஊதியத்தையும் கரோனா நிவாரணமாக அரசிடமே வழங்கிவிடுவேன். மனிதாபிமான முறையில்தான் பேருந்து ஓட்டினேனே தவிர, சிறப்பு ஊதியத்துக்காக இல்லை" என்று சிலிர்க்க வைக்கிறார் சக்திவேல்!