Last Updated : 22 May, 2020 12:48 PM

Published : 22 May 2020 12:48 PM
Last Updated : 22 May 2020 12:48 PM

நாம் நோயுடன் போராட வேண்டும்; நோயாளிகளுடன் அல்ல!- புலம்பெயர் தமிழர்களை இம்சிக்கும் சொந்த ஊர்க்காரர்கள்

ஸ்ரீதர் தமிழன்

"இன்று முழு நாடும் கரோனா வைரஸ் அல்லது கோவிட்-19 உடன் போராடுகிறது. ஆனால், நினைவில் கொள்ளுங்கள்... நாம் நோயுடன் போராட வேண்டும். நோயாளிகளுடன் அல்ல. அவர்களுக்கு எதிராகப் பாகுபாடு காட்டாதீர்கள். அவர்களைக் கவனித்துக் கொள்ளுங்கள்" என்ற வசனத்தை தினமும் 20 முறையாவது அலைபேசி வழியாகக் கேட்கிறோம். ஆனால், இங்கே நடப்பது என்ன?

முதலில் உள்ளூர் முதியவர்களைத் தூண்டிவிட்டு, சீனாக்காரர்களை வண்டை வண்டையாகத் திட்டி வீடியோ போட்டோம். பிறகு முஸ்லிம்களால்தான் நோய் வந்தது என்றோம். இப்போது மகாராஷ்டிராவில் இருந்து வந்தவர்களால்தான் தமிழ்நாட்டில் நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக, சமூக ஊடகங்கள் தொடங்கி டீக்கடை வரையில் பேச ஆரம்பித்திருக்கிறோம். சும்மா போகிற போக்கில் இப்படி நாம் பேசுவதால், என்ன விளைவுகள் ஏற்படுகின்றன தெரியுமா?

நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர் உள்ளிட்ட தென்மாவட்டங்களில் மகாராஷ்டிரத்தில் இருந்து யார் வந்தாலும் அவர்களை வெறுத்து, ஒதுக்குகிற போக்கு அதிகரித்திருக்கிறது. நெல்லை மாவட்டம், பணங்குடி அருகே உள்ள வடக்கன்குளத்தைச் சேர்ந்த ஒரு தாயும், திருமணமாகாத மகளும் 3 நாட்களுக்கு முன்பு மும்பையில் இருந்து சொந்த ஊருக்குப் பேருந்து மூலம் வந்தார்கள். அவர்களை ஊரே சேர்ந்து விரட்டியடித்திருக்கிறது. ஒட்டுமொத்த கிராமத்தையும் எதிர்த்து இரண்டே இரண்டு பெண்களால் என்ன செய்ய முடியும்? கடைசியில், ஊருக்கு ஒதுக்குப்புறமாக இருந்த மோட்டார் அறையில் இருவரும் தங்கினார்கள்.

மின்விசிறி கூட இல்லாத அந்த அறையில், எறும்புக் கடியோடு, எப்போதும் பாம்போ, பூச்சியோ நுழையக்கூடும் என்ற பீதியில் அவர்கள் வாழ்க்கையை நடத்திய கொடுமை நடந்தேறியது. இத்தனைக்கும் அவர்கள் கங்கைகொண்டான் சோதனைச் சாவடியில் மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டு, கரோனா தொற்று இல்லை என்று அனுப்பி வைக்கப்பட்டவர்கள். இது ஓர் உதாரணம்தான். இன்னும் இப்படி எத்தனையோ சம்பவங்கள்.

இந்தப் பிரச்சினை மும்பை வரையில் எதிரொலித்துள்ளது. "சொந்த வீட்டுக்குப் போனவர்களையே விரட்டியடிக்கிற மக்கள், நாம் நம்முடைய உறவினர் வீட்டுக்கோ ஊர்களுக்கோ போனால் விட்டுவைக்குமா?" என்று பயந்துபோய் மும்பைத் தமிழர்கள் பலர் தமிழகம் திரும்பத் தயங்குகிறார்கள்.

இதுபற்றி மும்பை ‘விழித்தெழு இயக்க’ ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர் தமிழன் நம்மிடம் கவலையுடன் பேசுகையில், "தமிழ்நாட்டில் நடக்கிற இதுபோன்ற வெறுப்புப் பிரச்சாரங்களால் மும்பைத் தமிழர்கள் மனதளவில் ரொம்பவே பாதிக்கப்பட்டுள்ளனர். மக்கள் நெருக்கம் மிகமிக அதிகமாக இருக்கிற மும்பையில் கரோனா தொற்று கடுமையாக இருக்கும். குறிப்பாக, தாராவியில் மிக மோசமான பாதிப்பு இருக்கும் என்று சமூக ஆர்வலர்களும் பத்திரிகைகளும் எச்சரித்தபோது, அரசும் மும்பை மாநகராட்சியும் கண்டுகொள்ளவில்லை. குறைந்தபட்சம் பொதுக்கழிப்பறை முன்பு நிற்கிற நீண்ட வரிசையைக் குறைக்க நடமாடும் கழிப்பறை வாகனங்களைக் கொண்டு வாருங்கள் என்ற எங்கள் கோரிக்கையைக்கூட ஏற்கவில்லை.

நாட்டிலேயே மிகமிக அதிக தொகைக்கு பட்ஜெட் போடுகிற மாநகராட்சியால், இந்த மக்களுக்குப் பத்து ரூபாய் சோப்பு கொடுக்கக்கூட திராணியில்லை. 'சரி அவர்களை சொந்த ஊருக்குச் செல்லவாவது அனுமதியுங்கள்' என்று கேட்டபோது, தமிழ்நாடு அரசு ரயில்விடத் தயங்குகிறது என்றார்கள். தமிழ்நாட்டோடு ஒப்பிட்டால் மகாராஷ்டிர மாநிலத்தில் கரோனாவுக்கு எதிரான சிகிச்சை முறைகள் மோசம். குறிப்பாக, தமிழர்கள் வசிக்கும் பகுதிகள் மீது அதிக அக்கறை காட்டுவதில்லை. இப்போது தாராவியில் மட்டும் 1,450 பேர் நோய்த் தொற்றுக்கு ஆளாகியிருக்கிறார்கள். 50 பேருக்கு மேல் இறந்து விட்டார்கள். சொந்த ஊருக்கும் விடாமல், இங்கேயும் தடுப்பு நடவடிக்கையை மேற்கொள்ளாமல் இந்த மக்களை வஞ்சிக்கிறார்கள்.

போதாதுக்கு, இங்குள்ள ஊடகங்கள் எல்லாம், 'தாராவி... தாராவி...' என்று எழுதுவதால், இப்பகுதியினர் மும்பையில் எங்கேயும் வெளியே செல்ல முடியவில்லை. நிறுவனங்கள் செயல்படத் தொடங்கிவிட்டாலும்கூட, 'தாராவியில் இருந்து வருபவர்கள் வேலைக்கு வர வேண்டாம்' என்கிறார்கள். வருமானத்துக்கு வழியில்லாமல், சொந்த ஊருக்கே போய்விடலாம் என்று பேருந்து பிடித்து தலைக்கு 7 ஆயிரம், 10 ஆயிரம் கொடுத்து தமிழ்நாட்டுக்கு வந்தால், அங்கே உள்ளூர்க்காரர்களே அவர்களுக்கு எதிரான வெறுப்புப் பிரச்சாரத்தைச் செய்கிறார்கள்.

இங்கிருந்து கிளம்புகிற எல்லோருமே மருத்துவப் பரிசோதனை செய்துகொண்ட பின்னர்தான் அனுப்பி வைக்கப்படுகிறார்கள். அங்கேயும் சோதனைச் சாவடிகளில் மருத்துவப் பரிசோதனை செய்யப்படுகிறது. ஆனால், யாராவது ஒருவருக்குத் தொற்று இருந்தாலும் பயணத்தின்போது மற்றவர்களுக்கும் பரவிவிடுகிறது. எனவேதான், தனிமனித இடைவெளியுடன் ரயில் மூலம் அனுப்புங்கள் என்று சொன்னோம். தமிழ்நாடு அரசு ஒத்துழைக்கவில்லை. எப்படியும் தினமும் 1,000 பேர் பேருந்து மூலம் தமிழ்நாட்டுக்குப் போகிறார்கள். அவர்களை ரயில் மூலம் அழைத்துக் கொள்வதில் என்ன பிரச்சினை இருக்கப் போகிறது?" என்றார்.

நினைவில் கொள்ளுங்கள் மக்களே... நாம் நோயுடன் போராட வேண்டும்; நோயாளிகளுடன் அல்ல!

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x