Published : 21 May 2020 03:53 PM
Last Updated : 21 May 2020 03:53 PM

ஒரு மணிநேரத்தில் 10 கதாபாத்திரங்களில் நடித்த மோகன்லால்: ஒப்பனைக் கலைஞர் சலீம் பகிர்வு

'லாலேட்டன்’ என மலையாளிகள் உச்சிமுகர்ந்து கொண்டாடும் நடிகர் மோகன்லால். ஏற்று நடிக்கும் பாத்திரமாகவே மாறி, தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்துவதில் மோகன்லாலுக்கு இணை அவர் மட்டுமே! நடிகர் மோகன்லால் தனது 60-வது பிறந்த நாளை இன்று கொண்டாடுகிறார். அதனை முன்னிட்டு மலையாளிகளின் சமூக வலைதளங்கள் முழுவதுமே மோகன்லால் குறித்த பதிவுகளாகவே நிரம்பி வழிகிறது.

இப்படியான சூழலில் நடிகர் மோகன்லாலுக்கு நூறு படங்களுக்கும் மேல் ஒப்பனைக் கலைஞராக இருந்த சலீம், மோகன்லால் குறித்த சில நினைவுகளை நம்மிடம் பகிர்ந்துகொண்டார்.

“மோகன்லால் சாருக்கு தனிப்பட்ட ஒப்பனைக் கலைஞராக 17 ஆண்டுகள் அவர் நிழலாகவே பின்தொடர்ந்தேன். மோகன்லால் சாரை தேர்ந்த நடிகராக அனைவருக்கும் தெரியும். ஆனால், அவருக்கு இலக்கியம் குறித்த அலாதியான ஆர்வமும், அந்தப் பாத்திரங்களை நடிப்பின் ஊடே வெளிப்படுத்தும் நுட்பமும் இருந்தது.

கடந்த 2003-ல் மலையாள மனோரமா என்னும் மலையாள நாளிதழ், கதையாட்டம் என்னும் பெயரில் மேடை நிகழ்ச்சி ஒன்றுக்கு ஏற்பாடு செய்தது. அதாவது மலையாள எழுத்துலகில் நூறு ஆண்டுகளில் வெளிவந்த சிறந்த பத்து நாவல்களைத் தேர்ந்தெடுத்து, அதில் சிறந்த பத்து கதாபாத்திரங்களை ஒரே நடிகராக மோகன்லால் மட்டும் நடிப்பார். இந்த பத்து கதாபாத்திரங்களையும் அவர் ஒரு மணி நேரத்தில் நடித்து முடித்துவிடுவதுதான் கதையாட்டம்.

ஒவ்வொரு பாத்திரமும் அவர் நடித்து முடித்ததும், அடுத்த பாத்திரம் குறித்த விவர வர்ணனை ஒலிவடிவில் கேட்கும். அந்தக் குறைவான நேரத்தில் அடுத்த பாத்திரத்துக்கான மேக்கப்பை போட்டுவிட வேண்டும். மோகன்லால் சார் எப்போதுமே எனர்ஜிட்டிக்காக இருப்பார். அவரோடு பணி செய்தாலே நமக்கும் அந்த எனர்ஜி வந்துவிடும்.

2003-ல் நடந்த அந்த நிகழ்ச்சியில் பத்து விதமான பாத்திரங்களில் மேடையில் தோன்றியதை கடந்த சில தினங்களாக மோகன்லால் சாரே தினம் ஒரு வீடியோவாக தனது சோஷியல் மீடியா பக்கத்தில் பதிவேற்றி வருகிறார். அந்த அளவுக்கு அவர் நினைவில் தங்கும் நடிப்பில் நானும் ஒப்பனை கலைஞராகப் பங்களிப்பு செய்திருக்கிறேன் என்பதில் பெருமைதான். அதிலும் அவை அதற்கு முன்பு அவர் எந்தப் படங்களிலும் செய்யாத பாத்திரங்கள்.

இதே போல் தாவாள நாராயணன் பணிக்கர் எழுதிய ‘கர்ண பாரம்’ படைப்பையும் மேடை நிகழ்ச்சியில் நடித்தார். அவர் ஒரு மகா நடிகன் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான். அதேநேரம் அவர் இலக்கியத்துக்குக் கொடுத்த முக்கியத்துவத்துக்கு இதெல்லாம் உதாரணம். தன் வாழ்வின் பெரும்பகுதியான நாள்கள் கேமராவுக்கு முன்பாக நிற்பவர் மோகன்லால். இந்த கரோனா காலம்தான் அவருக்கு குடும்பத்தோடு இருப்பதற்கு நேரம் கொடுத்திருக்கும்.

கமல் சாருக்கு, ‘இந்திரன் சந்திரன்’ படத்தில் மேக்கப் போட்டேன். அதில் வரும் குண்டான கமலைப் பார்த்துவிட்டு, அதேபோல் குண்டான தோற்றத்தில் மோகன்லால் நடித்த படத்துக்கு வேலை செய்ய அழைப்பு வந்தது. ஒரே ஒரு படத்துக்கு வேலை செய்யப் போன நான் 17 ஆண்டுகள் அவரோடு பணி செய்தது மறக்கமுடியாத சம்பவம். மோகன்லாலின் இரக்க குணமும், உதவும் உள்ளமும் பலருக்கும் தெரியும். அவரது இந்த இலக்கிய ஆர்வம் பலரும் அறியாத பகுதி. ஷூட்டிங் இல்லாத நேரத்தில் வாசிப்போடு பொழுதை நகர்த்துபவர் மோகன்லால்” என்று முடிக்கிறார் சலீம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x