Last Updated : 20 May, 2020 08:49 PM

 

Published : 20 May 2020 08:49 PM
Last Updated : 20 May 2020 08:49 PM

லாக்டவுன் கதைகள்: வேரோடு பிடுங்கப்பட்ட மரம்

வீட்டின் மூத்த பெண் நான். கல்லூரியின் இறுதியாண்டில், என்னுடைய திருமணம் குறித்த பேச்சு வீட்டில் தொடங்கிவிட்டது. ஆனால், திருமணம் என்ற நினைப்பே எனக்குள் உள்ளூர ஒருவித நடுக்கத்தை ஏற்படுத்தியது. திருமணம் வேண்டாம் என்று நான் வீட்டில் சொன்னபோது, ''யாரையும் விரும்புகிறாயா?'' என்று அம்மா என்னிடம் கேட்டார். இறுதியில் திருமணத்துக்குச் சம்மதிப்பதைத் தவிர எனக்கு வேறு வழியில்லை. நான் சரியென்ற சொன்ன அடுத்த நாளிலிருந்தே மாப்பிள்ளை வீட்டார் வரத்தொடங்கினர்.

மூன்று முறை பஜ்ஜி, சொஜ்ஜி பரிமாறியது எதிர்பார்த்த முடிவைத் தரவில்லை. ஆனால், நான்காவதாக வந்தவர்களைப் பிடித்துப்போகவே ஒருவழியாக என் திருமணம் உறுதியானது. அதுவரை சும்மா சும்மா திட்டிக்கொண்டிருந்த அம்மா, ஒளித்துவைத்திருந்த அன்பையெல்லாம் என் மீது காட்டினார். டாமும் ஜெர்ரியுமாக இருந்த நானும் தங்கையும் உற்ற தோழிகள் ஆனோம். அப்பாவோ பட்ஜெட் பார்க்காமல் கேட்டதெல்லாம் வாங்கிக் கொடுத்தார். தோழிகளுடன் ஷாப்பிங், வருங்காலக் கணவருடன் போனில் அரட்டை என்று நாட்கள் இனிமையாகக் கடந்தன.

ஊர்ப் பெருமைக்காகத் தன் சக்திக்கு மீறிச் செலவு செய்வதால், அப்பாவுக்குப் பணக் கஷ்டம் இருந்திருக்கும்போல. அடிக்கடி அம்மாவும் அப்பாவும் என்னைத் தவிர்த்துத் தனியாகப் பேச ஆரம்பித்தது கொஞ்சம் புதிதாக இருந்தது. தங்கள் கஷ்டங்களை என்னிடம் மறைக்க முயல்வது புரிந்தது. திடீரென்று என் வீட்டிலேயே நான் அந்நியப்பட்டதுபோல் தோன்றியது.

தங்கை என்னை இறுக அணைத்தவாறு தூங்கினாள். திருமண நாள் நெருங்க நெருங்க அவளது இறுக்கத்தின் அளவு கூடியது. அம்மா எப்போதும் இல்லாத வகையில் தன் இல்லற வாழ்வைப் பற்றி என்னிடம் அதிகம் பகிர்ந்துகொள்ளத் தொடங்கினார். அந்தரங்க விஷயங்களும் அதில் உண்டு.

திருமணத்துக்கு மூன்று நாட்கள் இருக்கும்போது, சற்றும் எதிர்பாராத வகையில் கரோனா பரவல் காரணமாக லாக்டவுன் அறிவிக்கப்பட்டது. குடும்பமே அதிர்ச்சியில் ஆழ்ந்துவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும். திருமணம் நின்றுவிடுமோ என்று அப்பா அச்சப்பட்டார். குறித்த தேதியில் திருமணம் நடக்க வேண்டும் என்பதில் மாப்பிள்ளை வீட்டார் உறுதியாக இருந்த காரணத்தால், வீட்டிலேயே திருமணம் என்று முடிவானது.

திருமணத்துக்கு முந்தைய நாளே, நெருங்கிய உறவினர்கள் வந்துவிட்டனர். வீடு களைகட்ட ஆரம்பித்தது. ஆனால், அப்பா முகம் மட்டும் கொஞ்சம் வாடியே இருந்தது. ஏதோவொன்று என் மனதை அழுத்தியது. முந்தைய நாள் இரவு முழுவதும் அறிவுரைகள் அள்ளி வீசப்பட்டன. தூக்கம் கண்ணை அழுத்தும் நேரத்தில், ‘மணப்பெண்ணைச் சீக்கிரம் ரெடியாகச் சொல்லுங்க’ என்ற குரல் கேட்டது.

அதிகாலை நான்கு மணிக்குக் குளிக்கச் சொன்னார்கள். குளித்துவிட்டு வந்த பிறகு, உறவுக்கார பெண் ஒருவர், ஒப்பனை என்ற பெயரில் இரண்டு மணிநேரம் பாடாய்ப்படுத்தினார். ஒரு வழியாக ஒப்பனை முடிந்ததும் கண்ணாடியைப் பார்த்து அதிர்ந்துபோனேன். அடையாளம் தெரியாத அளவு உருமாறி இருந்தேன்! அழுகை அழுகையாக வந்தது. கண்ணில் நீர் கோத்ததைப் பார்த்த அம்மா, “அழக் கூடாது கண்ணு. நாங்கள் அடிக்கடி வந்து உன்னைப் பார்ப்போம், தைரியமா இருக்கணும்” என்று அடுக்கிக்கொண்டே போனார். அம்மாவைப் பார்த்துக் கோபத்தில் கத்த வாய் திறக்கும் நேரத்தில், “மேடம் ஸ்மைல் ப்ளீஸ்” என்று போட்டோகிராபர் சொன்னார்.

சாம்பார் மணம் மூக்கைத் துளைத்தது. பசி வேறு வயிற்றைக் கிள்ளியது. தாலி கட்டி முடிக்கும்வரை எதுவும் சாப்பிடக் கூடாது என்று பசியில் மண்ணள்ளிப் போட்டாள் பாட்டி. மணமேடைக்குச் செல்லும்போது தெரியாமல் மிதிப்பதுபோல், பாட்டியின் காலை மிதித்துவிட்டுச் சென்றேன்.

மேடைக்கு அருகில் செல்லச் செல்ல கூச்சம் அதிகரித்தது. மேடையில் நான் அருகில் அமர்ந்ததும், மாப்பிள்ளை வெட்கத்தில் சற்று நெளிந்தார். அதைக் கவனித்த என் தங்கை, என்னைப் பார்த்து நமட்டுச் சிரிப்பு சிரித்தாள். மேடையில் பெரிய புகை மண்டலம் உருவாகியிருந்தது. கண் மை முகத்தில் பரவிவிடும் என்பதால் கண்ணைக் கசக்கவும் முடியவில்லை. கழுத்தில் தொங்கிய மாலை வேறு மிகவும் பாரமாக இருந்தது. தலை நிமிரக்கூட முடியாமல் குனிந்தே இருந்தேன். ஒருவழியாக என் கணவர், எனக்குத் தாலிகட்டி முடித்துவிட்டார்.

அப்பாடா இனி சாப்பிடப் போகலாம் என்று நினைத்தால், வாழ்த்துச் சொல்வதற்காக நின்ற நீண்ட வரிசையைப் பார்த்ததும் தலைசுற்றியது. பசியும் தூக்கமும் வாட்ட, அப்போது பார்த்து முதுகு அரித்தது. இங்கிதம் கருதிச் சொரிந்துகொள்ள முடியாமல் தவித்தேன்.

வாழ்த்துப் படலம் முடிந்தபின், சாப்பிட அழைத்துச் சென்றார்கள். சாப்பிடும்போது அப்பா, அம்மாவைத் தேடினேன். அவர்கள் அங்கு இல்லை. தங்கையிடம் அவள் சாப்பிட்டுவிட்டாளா என்று கேட்டேன். “நீ சாப்பிடுக்கா, நான் அம்மாவுடன் சாப்பிடுகிறேன்” என்றவளை, அதட்டி என்னுடன் அமர்ந்து சாப்பிடவைத்தேன். தங்கையைத் தவிர என்னைச் சுற்றி இருந்தவர்கள் எல்லாம், எனக்குப் புதியவர்களாக இருந்தனர்.

இனிமையாகப் பேசினாலும், நன்றாகவே கவனித்தாலும், இன்று காலைவரை எனக்கென்று இருந்த அந்த பந்தம், கண்முன்னே விலகிச் செல்வது தெரிந்தது. தங்கை கையை அழுத்தமாகப் பிடித்துக்கொண்டேன். கண்ணில் நீர் மல்க, என்னைப் பார்த்தவண்ணம், அவளும் என் கையை இறுக்கமாகப் பிடித்துக்கொண்டாள்.

கிளம்ப வேண்டிய நேரமும் வந்தது. என் முகத்தைப் பார்ப்பதைத் தவிர்க்கும் வகையில், ஏதோ முக்கிய வேலை இருப்பதுபோல் அப்பா அங்கும் இங்கும் சுற்றிக்கொண்டிருந்தார். அம்மா அழுகையை அடக்கியவாறு ‘பொறுமை’ பற்றிய கடைசி நிமிட அறிவுரைகளை வழங்கிக்கொண்டிருந்தார். ‘நேரமாச்சு போலாமா’ என்று அத்தை வந்து அழைக்க, விடைபெறும் முன் அம்மாவைக் கட்டிப்பிடித்தேன். அம்மாவின் விசும்பல் கேட்டதும், நானும் அழ ஆரம்பித்தேன். என் தங்கை ஓடிவந்து எங்களைக் கட்டிப்பிடித்துக்கொண்டாள். என் காதில், “அழாதே, கண் மை கலைந்துவிடும்” என்று அழுதபடியே சொன்னாள். அப்பா கண்ணைத் துடைத்தவாறு தள்ளி நின்றுகொண்டிருந்தார். அவரை இப்படிப் பார்ப்பது எனக்கு இதுதான் முதல் முறை.

எல்லோரிடமும் விடைபெற்று, காரில் ஏறும்பொழுது, வேரோடு பிடுங்கப்பட்ட மரத்தின் மனநிலைதான் இருந்தது. “காரின் ஏசியை அணைத்து ஜன்னலைத் திறக்கலாமா? எனக்கு மூச்சுமுட்டுகிறது” என்று கேட்டேன். சரி என்று சொல்லி ஜன்னலைத் திறந்துவிட்டார். முகத்தை வருடிய குளிர்ந்த காற்று, சற்று இதமாக இருந்தது. என் கணவர் ஆறுதலாக என் கையை மென்மையாகப் பற்றினார். அப்பாவுடனான என் முதல் பயணம் நினைவுக்குவர, கண்ணை மூடியவண்ணம் கணவரின் தோளில் சாய்ந்தேன்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x