Published : 20 May 2020 08:29 PM
Last Updated : 20 May 2020 08:29 PM

முகக் கவசங்களைப் பயன்படுத்தும் வழிமுறைகள்

மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள் மட்டுமே அணிந்துவந்த முகக்கவசம் தற்போது கரோனா வைரஸ் தொற்றுநோய் பரவலுக்குப் பிறகு ஒருவரின் அன்றாட நடவடிக்கையின் முக்கிய அம்சமாக மாறிவிட்டது.

கரோனா வைரஸ் பரவல் அதிகரித்தவுடனே அத்தியாவசியப் பொருட்களைப் போல் அதிகளவு வாங்கப்பட்டது முகக்கவசங்கள்தான். அதனால்தான் முன்பெல்லாம் மருந்தகங்களில் மட்டுமே கிடைத்து வந்த முகக்கவசங்கள் தற்போது பல்பொருள் அங்காடிகளிலும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தொடக்கத்தில் முகக்கவசம் அணிவது அசௌகரியமாக இருந்தாலும் தற்போது வீட்டை விட்டு வெளியேறினாலே முகத்தை கைக்குட்டையாலோ அல்லது முகக்கவசம் அணிந்துகொண்டுதான் பெரும்பான்மையானவர்கள் வெளியே செல்கிறார்கள். கரோனா வைரஸ் தடுப்பின் முதல் நடவடிக்கையாக இருப்பது முகக்கவசம் அணிவதுதான். இதன் காரணமாகத்தான் முகக்கவசம் அணியாமல் வெளியே வருபவர்களுக்கு ரூ.100 அபராதம் விதித்துள்ளார் மதுரை மாவட்ட ஆட்சியர்.

முகக்கவசம்: சந்தேகமும் தீர்வுகளும்

உலக அளவில் கோடிக்கணக்கான மக்களைப் பாதித்துள்ளது கரோனா வைரஸ். இதனால் மக்கள் பொது இடங்களுக்குச் செல்லும்போது சமூக இடைவெளியைப் பின்பற்றவும் முகக்கவசத்தின் தேவையையும் உணர்த்தியுள்ளது. ஊரடங்கு தளர்த்தப்பட்டாலும் ஒருவர் வெளியே செல்லும்போது கட்டாயம் அணிந்துசெல்லவேண்டிய பொருளாக முகக்கவசம் மாறியுள்ளது. இந்தக் கரோனா காலத்தில் பாதுகாப்பு கருதி நாம் அணியும் முகக்கவசம் உண்மையில் பாதுகாப்பானதா? யார் எந்த மாதிரியான முகக்கவசங்களை அணியவேண்டும்? எவ்வளவு நேரம் அணியவேண்டும்? முகக்கவசம் அணிந்துகொண்டு பேசலாமா? மலிவு விலையில் கிடைக்கும் முகக்கவசங்கள் நோய்த் தொற்றிலிருந்து பாதுகாக்குமா? துணியால் செய்யப்பட்ட முகக்கவசங்களை யார் பயன்படுத்தலாம்? எவ்வளவு நாள் பயன்படுத்தலாம்? சிறு குழந்தைகளுக்கு முகக்கவசம் தேவையா? இவ்வாறு நாம் சாதாரணமாக அணியும் முகக்கவசம் குறித்து பல சந்தேகங்களுக்குப் பதிலளிக்கிறார் ஸ்டேன்லி அரசு மருத்துவக் கல்லூரியின் இரைப்பை குடல் அறுவைச் சிகிச்சை துறை முன்னாள் இயக்குநர் மருத்துவர் ஜி.மனோகரன்.

‘சர்ஜிக்கல் மாஸ்க்’

தற்போது பெரும்பான்மையினர் அணிந்திருக்கும் நீல நிற முகக்கவசத்தின் பெயர் ‘சர்ஜிக்கல் மாஸ்க்’. குறைந்த விலையில் கிடைக்கும் இந்த சர்ஜிக்கல் முகக்கவசத்தை எந்த நோய்த் தொற்றும் இல்லாதவர்கள் மட்டுமே வெளியே செல்லும்போது அணியவேண்டும். இரண்டு மெல்லிய அடுக்குகளைக் கொண்டு இந்தவகை முகக்கவசம் காற்றில் உள்ள நீர் திவலைகளைத் தடுத்து நோய்த் தொற்றிலிருந்து பாதுகாக்கும். இந்த சர்ஜிக்கல் முகக்கவசத்தின் பயன்பாடு மூன்றிலிருந்து எட்டு மணிநேரம் மட்டுமே. ஆனால் நம்மூரில் சர்ஜிக்கல் முகக்கவசமே கரோனா வைரஸிலிருந்து முற்றிலுமாக பாதுகாத்துவிடும் என பலர் பல நாட்களுக்கு ஒரே சர்ஜிக்கல் முகக்கவசங்களை அணியும் போக்கு நிலவுகிறது. இதனால் கரோனா போன்ற வைரஸ், பாக்டீரியா நோய்த் தொற்றுதான் அதிகரிக்கும். சர்ஜிக்கல் முகக்கவசத்தின் பயன்பாடு குறுகிய நேரம் மட்டுமே. இந்தவகை முகக்கவசத்தைப் பயன்படுத்திய பிறகு முகக்கவசத்தை முறையாக அப்புறப்படுத்த வேண்டும். பின்னர் கைகளை நன்றாக சோப்பு போட்டுக் கழுவவேண்டும்.

‘ஆக்டிவேடட் கார்பன் மாஸ்க்’

‘ஆக்டிவேடட் கார்பன் மாஸ்க்’ (Activated carbon filter mask) இந்த வகையான முகக்கவசம் ‘ஆக்ட்டிவேட்டட் கார்பன்’ கொண்டு தயாரிக்கப்பட்டது. இந்த வகை முகக்கவசங்கள் சிறு துகள்களையும் உள்ளே நுழையவிடாது. இந்த வகையாக முகக்கவசங்களை நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள், வயதானவர்கள் ஆகியோர் வெளியே செல்லும் பயன்படுத்துவது நல்லது. ஒருமுறை பயன்படுத்தப்பட்ட இந்த முகக்கவசத்தை மீண்டும் பயன்படுத்துவதற்கு முன்பு முகக்கவசத்தின் வெளிப்பகுதியைத் தொடாமல் சூரிய வெளிச்சத்தில் நன்றாகக் காயவைத்துப் பயன்படுத்தலாம். ஆனால் இந்த வகை முகக்கவசங்களை நீண்ட நாட்களுக்கு மேல் பயன்படுத்துவதைக் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்

என்95 முகக்கவசம்

பாதுகாப்பான முகக்கவசம் என்றழைக்கப்படும் ‘N95’ முகக்கவசத்தில் இரண்டு வகைகள் உண்டு. ஒன்று ‘N95 with Respiratory Mask’ இந்தவகை முகக்கவசத்தை வெளியே செல்லும்போது மட்டும் பயன்படுத்த வேண்டும். வயதானவர்கள் நீரிழிவு நோயாளிகள், சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொண்டவர்கள் இந்த முகக்கவசத்தைப் பயன்படுத்தலாம். இந்த வகை முகக்கவசத்தின் விஷேசம் என்னவென்றால் வெளியிலிருந்து வரக்கூடிய காற்று வடிகட்டி சுவாசக் குழாய்க்குச் செல்லும். மூக்கிற்கும் முகக்கவசத்திற்கும் உள்ள இடைவெளி குளிர்ச்சியாக இருக்கும். நீண்டநேரம் பயன்படுத்த வசதியாக இருக்கும். இந்த முகக்கவசத்தை வீட்டிற்குள் அல்லது ஏசி அறைகளிலோ பயன்படுத்தக் கூடாது. இந்த முகக்கவசம் காற்றில் உள்ள நீர்த்திவலைகளைத் தடை செய்வது மட்டுமல்லாமல் தூசி, புழுதி, புகை, கிருமிநாசினி மற்றும் மயக்க மருந்துகளிலிருந்து வெளியாகும் வாயுக்கள் சுவாசக் குழாயின் வழியாக உள்ளிழுப்பதைத் தடுக்கிறது. கரோனா வைரஸ் தொற்றுள்ளவர்களிடமிருந்து வெளியேறும் நீர்த்துளிகளை மற்றொருவர் சுவாசிப்பதிலிருந்து இந்த வகை முகக்கவசங்கள் பாதுகாக்கின்றன. மற்றொரு ‘N95 Mask Without Respiratory’ இந்தவகை முகக்கவசம் கரோனா நோயாளிகளை கையாளும் மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள் பாதுகாப்பு உடையான ‘PPE‘ கிட் அணிந்துகொண்டு பயன்படுத்துவார்கள்.

முகக்கவசம் அணிந்துகொண்டு பேசலாமா?

வெளியே செல்லும்போது காற்றின் மூலம் கரோனா பரவலைத் தடுக்கத்தான் முகக்கவசமே. ஆனால் பலர் முகக்கவசம் அணிந்துகொண்டு பேசுவதை இயல்பாக பார்க்கமுடிகிறது. முகக்கவசத்தை கீழே இறக்கிவிட்டுப் பேசுவது பின்பு மீண்டும் அதையே பயன்படுத்துவது போன்ற செயல்கள் எதற்காக முகக்கவசத்தைப் பயன்படுத்துகிறோமோ அந்த நோக்கம் தடைப்படுகிறது. இரண்டாவது முகக்கவசத்தை அணிந்துகொண்டு பேசும்போது வாயிலிருந்து வெளிப்படும் எச்சில் முகக்கவசத்தை ஈரப்படுத்தி அந்த இடத்தில் கிருமி தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. கரோனா வைரஸ் அல்லாமல் மற்ற நோய்த்தொற்றை ஏற்படுத்தும் கிருமி வந்து சேருவதற்கு வாய்ப்புள்ளது. முகக்கவசத்தை அணிந்துகொண்டு கண்டிப்பாக பேசியாகவேண்டும் என்ற சூழ்நிலை இருந்தால் மக்கள் கூட்டம் அதிகமில்லாத பகுதியில் முகக்கவசத்தை இறக்கிவிட்டுப் பேசலாம். அல்லது முடிந்த அளவுக்கு கைபேசி மூலமாக தகவல்களை அனுப்பி பேசும் பழக்கத்தை ஏற்படுத்திகொள்ளலாம்.

குழந்தைகளுக்கு முகக்கவசம் கட்டாயமா?

முகக்கவசத்தை போடுவதும் கழற்றும் முறையும் சரியாக இருக்கவேண்டும். மூக்கு வாய் பகுதிகள் முழுமையாக மூடப்பட்டிருக்கவேண்டும். அடிக்கடி கைகளால் முகக்கவசத்தைத் தொடக்கூடாது. முகக்கவசத்தை அப்புறப்படுத்திய பிறகு கைகளை சுத்தமாக சோப்பு போட்டுக் கழுவவேண்டும். இரண்டு வயதிற்குட்பட்ட குழந்தைகளை வெளியே அழைத்துச் செல்லவேண்டிய கட்டாயம் இருந்தால் பாதுகாப்பாக அழைத்துச் செல்வது. இரண்டு வயதிற்கு மேற்பட்ட குழந்தைகளுக்குக் கண்டிப்பாக முகக்கவசம் அணியவேண்டும். மறுசுழற்சி (Reuseable) என போடாத முகக்கவசம் அனைத்தும் ஒருமுறை பயன்பாட்டுக்கு மட்டுமே உகந்தது. ஆனால் பொருளாதாரச் சிக்கல் காரணமாக மக்கள் என்95 போன்ற முகக்கவசங்களை மீண்டும் பயன்படுத்துகிறார்கள். அவ்வாறு பயன்படுத்தும்போது முகக்கவசத்தின் வெளிப்பகுதியைத் தொடாமல் வெயிலில் உலர்த்தி நன்றாக காய்ந்தபிறகு ஒருநாள் விட்டு மீண்டும் அதனை பயன்படுத்தலாம். ஆனால் முடிந்த அளவிற்கு இந்தச் செயலைத் தவிர்ப்பதுதான் நல்லது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x