Published : 20 May 2020 02:13 PM
Last Updated : 20 May 2020 02:13 PM

கொரிய தமிழ்ச் சங்கம் அமைத்த அறிவியலாளர்கள்

கொரிய சுஞ்சியாங்புக்தோ மாகாண அரசின் உதவியுடன் வெகுசிறப்பாக நடைபெற்ற தமிழர் திருநாள், கொரியப் பொங்கல் – 2020.

பூமிப்பந்தில் பன்னாட்டு தொடர்புகள் உருவாக கடல் ஒரு இயல்பான இணைப்புப் பாதையாக பயன்பட்டு வந்திருக்கிறது. கடல் சூழ்ந்த தமிழர் நிலம் பண்டைய காலம் தொட்டே தமிழ் வேந்தர்களும் தொழில்புரிவோரும் தத்தமது ஆளுகை மற்றும் தொழில் தொடர்பை விரிவாக்கம் செய்ய ஏதுவாய் அமைந்திருந்ததை வரலாறு எடுத்துக்கூறுகிறது. இன்று இணையம் போன்ற மென் ஆற்றல் (soft power) உதவியுடன் வெளிவந்துகொண்டிருக்கும் தமிழ்-கொரியா மொழி மற்றும் பண்பாட்டுத் தொடர்புகள் தமிழ்நாட்டிற்கும் கொரியாவிற்குமிடையேயான வரலாற்றுத் தொடர்பை எடுத்துக்காட்டும் வாழ்வியல் கூறுகள் என்றால் அது மிகையாகாது.

கொரிய தீபகற்பத்தை சிறப்பாக ஆட்சி செய்த சோசோன் பேரரசின் இறுதிக்காலத்தில் நிலவிய உள் குழப்பத்தால் ஏற்பட்ட ஐரோப்பிய, சீன தலையீடு மற்றும் அதனைத் தொடர்ந்த சப்பானிய ஆக்கிரமிப்பு போன்றவை கொரிய மக்களின் வளமான வாழ்வைச் சிதைத்து அதைப் போராட்டமாக மாற்றியது. இரண்டாம் உலகப்போரின் முடிவில் விடுதலை பெற்ற இந்த நிலம் (1945) வல்லரசுகளின் முடிவின்படி தென்பகுதி முதலாளித்துவத்தை கொள்கையாகக் கொண்ட கொரிய மக்கள் குடியரசாகவும் (தென்கொரியா) வடபகுதியைப் பொதுவுடமை கொள்கையாகக் கொண்ட ஜனநாயக மக்கள் குடியரசாகவும் (வடகொரியா) பிரிக்கப்பட்டது. துயரமான அந்தப் பிரிவும் பின்னர் ஏற்பட்ட இரு கொரியாக்களுக்கிடையேயான போரும் ஒட்டுமொத்த கொரிய மக்களின் வாழ்வை மீண்டும் நெருக்கடிக்கும் துன்பத்திற்கும் உள்ளாக்கியது.

சண்டை முடிந்தாலும் இரு கொரிய அரசுகளும் ஒட்டுமொத்த கொரிய தீபகற்பத்தின் ஆளுமையை தத்தமது என சொந்தம் கொண்டாடுகின்றன. பொருளாதார இடைவெளி பெரிதாகி தென்கொரியப் பொருளாதாரம் ஆகச்சிறந்த ஆற்றலாக உருவெடுத்திருக்கும் இன்றைய சூழலிலும் இங்குள்ள மக்களின் ஒரு பகுதியினருக்கு இந்தப் பிரிவானது மிகவும் வருத்தம் தரும் நினைவாகவே இருக்கிறது. இங்கு தென்கொரியா என்றில்லாமல் கொரியா என்ற ஒட்டுமொத்த சொல்லே பயன்படுத்தப்படுகிறது. இந்த வரலாற்றுப் பின்னணியின் அடிப்படையிலே எமது சங்கத்தின் பெயரும் கொரிய தமிழ்ச் சங்கம் என்று அமைகிறது.

தமிழ் மக்களும் கொரியாவும்

1960க்குப் பிறகு வளர்ச்சிப்பாதையில் செல்லத் தொடங்கியது தென்கொரியா. அதனால் கல்வி, வேலைவாய்ப்பு, மற்றும் தொழில் நிமித்தம் கொரிய மக்கள் பிற நாடுகளுக்கும் பிற நாட்டு மக்கள் இங்கும் வரத் தொடங்கினர். அவ்வாறே ஒரு முக்கிய நிகழ்வாக தமது பொறியியல் பணி நிமித்தம் இன்று மக்கள் அறிந்த தமிழர் கடல் மற்றும் பண்பாட்டு ஆய்வாளர் ஒரிசா பாலு 1987இல் கொரியா வந்தார். தமிழ்-கொரிய மொழி, வாழ்வியல் மற்றும் பண்பாட்டு ஒற்றுமைகள் குறித்த பதிவுகள் வெகுஜன மக்களுக்கும் தெரியத் தொடங்கியது. இக்காலகட்டத்தில் இயந்திரங்களை நிலைப்படுத்தும் பணிக்காக கொரியப் பொறியாளர்கள் தமிழ்நாட்டிற்கு வந்த பதிவுகளும் உள்ளன. 1996இல் சென்னையில் தொடங்கப்பட்ட ஃகந்தே (Hyundai) மகிழுந்து தொழிற்சாலை கொரிய-தமிழ் மக்கள் தொடர்பை மேலும் விரிவுபடுத்தியது. இங்குள்ள பல்கலைக்கழகங்களுக்கு முனைவர் பட்டம் பெற்ற தமிழ்நாட்டு ஆராய்ச்சியாளர்களும் வரத் தொடங்கினர். 2001-ம் ஆண்டில் தமிழ்நாட்டைச் சேர்ந்த பிரின்ஸ்-சாந்தி இணையரால் சக்ர இந்திய உணவகம் தலைநகர் தலைநகர் சியோலில் தொடங்கப்பட்டது.

சியோல் சக்ரா இந்திய உணவகத்தை தொடங்கிய தமிழ் இணையர்கள் பிரின்ஸ்-சாந்தி

2002இல் கொரியாவும்-சப்பானும் இணைந்து நடத்திய உலக கால்பந்து போட்டிகள் கொரியாவின் வளர்ச்சியை மேலும் உலகிற்குப் பறைசாற்றியது. கொரியாவில் நடைபெற்ற கால்பந்து போட்டிகள் கொரியா தேசம் பற்றி உலகிற்கு வெளிச்சம் பாய்ச்சியதன் காரணமாகவும், 1987 முதல் கொரியாவில் வந்து பணியாற்றிய தமிழ்நாட்டுப் பொறியாளர்கள் மற்றும் முனைவர் பட்டம் பெற்ற ஆராய்ச்சியாளர்கள் ஆகியோரின் மேலான உழைப்பின் பலனாகவும் தமிழ்நாட்டைச் சேர்ந்த பலரும் முதுகலை மற்றும் முனைவர் பட்ட ஆராய்ச்சிப் படிப்பிற்கு வருகை தருவது வெகுவாகத் தொடங்கியது. 2003-ம் ஆண்டு முதல் தமிழ்நாட்டிலிருந்து குறுகிய அளவில் அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் பொறியியல் துறைகளில் முனைவர் பட்ட ஆராய்ச்சிக்கு வரத் தொடங்கிய மாணவர்கள் மற்றும் பொறியாளர்களின் எண்ணிக்கை இன்று நூற்றுக்கணக்கில் அதிகரித்துள்ளன.

அறிவுசார் தமிழ்ச் சமூகம் `

இந்திய மற்றும் கொரிய நாடுகளுக்கிடையே முறையான தொழிலாளர் ஒப்பந்தம் இன்றுவரை ஏற்படுத்தப்படாததன் காரணமாக குறைந்தபட்ச கல்வித் தகுதியுடன் விளங்கும் சட்டப்படியான இந்தியத் தொழிலாளர்கள் என யாரும் இங்கு வருவதில்லை. இருந்தபோதிலும் கொரிய தொழிலகங்களுக்குத் தேவைப்படும் மனிதவளம் அதிகரித்ததால் இதர வகைகளில் தமிழ்நாட்டு/ இந்தியத் தொழிலாளர்கள் இங்கு 2000-ம் ஆண்டு முதல் வருகை தருவது குறிப்பிடத்தக்கது. இருதரப்பு ஒப்பந்தங்கள் காரணமாக இலங்கை போன்ற நாடுகளிலிருந்து சட்டப்படியான தமிழ்த் தொழிலாளர்கள் குறுகிய அளவில் இருப்பது குறிப்பிடத்தக்கது. மேற்சொன்ன காரணங்களால், உயர் கல்விக்கும் தொழில்நுட்ப வேலைவாய்ப்பிற்கும் வருகை தரும் தமிழர்கள்தான் கொரிய தமிழ்ச் சமூகத்தின் இன்றியமையா அங்கத்தினர்களாக இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதுதவிர, சமையல் தொழில்நுட்பம் பயின்ற சமையல் வல்லுநர்களும் இதில் அடக்கம். மேலும், தென்கொரியாவில் அனைத்துப் பகுதிகளிலும் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் தொழிலகங்களில் சுமார் 2000 தமிழர்கள் தனிநபர்களாகவும் குடும்பங்களாகவும் பரவி வாழ்கின்றனர்.

சங்கப் பதிவுக்கு உதவி புரிந்த கொரியா புரவலர்களுக்கு நன்றி தெரிவித்த தலைவர் ராமசுந்தரம்

கொரிய தமிழ்ச் சங்கம் உருவாக்கம்

முற்றிலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு நிமித்தமாக இங்கு வந்த தமிழ் மக்களால் உருவான தமிழ்ச் சமூகம் பெரும்பாலும் இயல்பில் மிதக்கும் மக்கள் சமூகமாக (Floating papulation) இன்றுவரை தொடர்கிறது. அதாவது பணிக்கு வருவதும் ஒப்பந்தம் முடிந்தவுடன் தாய்நாடு திரும்புவதுமான நிலையே இன்றுவரை தொடர்கிறது. இலங்கையில் நிலவும் இனப் பிரச்சினையின் காரணமாக இலங்கையின் வடகிழக்குப் பகுதிகளிலிருந்து பல்வேறு தமிழ் மக்கள் ஐரோப்பா மற்றும் அமெரிக்காவிற்கு புலம்பெயர்ந்த தமிழர்கள் மற்றும் பிரிட்டனின் காலனியாதிக்க காலத்தில் தமிழ்நாட்டிலிருந்து ஆப்பிரிக்கா, மலேசியா, சிங்கப்பூர், ரீயூனியன் தீவுகள், மாலத்தீவுங்கள் மற்றும் பிற நாடுகளுக்குச் சென்ற தமிழர்கள் அந்தந்த நாடுகளில் குடியுரிமை பெற்று நிலையான கட்டமைப்பாக வாழ்கின்றனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. இதனால் இயல்பாகவே இங்கு கொரிய தமிழ்ச் சங்கம் போன்ற நிலையான கட்டமைப்பை உருவாக்குவது சற்று கடினமாகவே இருந்துவந்தது.

1990 முதல் கொரியாவை அறிந்து இங்கு ஆராய்ச்சிப்பணிக்காக வந்து சென்ற மூத்தவர்கள் பலர், குறிப்பாக பேராசிரியர்கள் ஆண்டிக்காடு மாசிலாமணி சண்முகராஜ் மற்றும் அருண் ஆனந்த் பிரபு போன்றோர் கொரிய தமிழ்ச் சங்கம் அமைப்பதற்கு முதலில் தகுந்த மக்கள் தொடர்பை ஏற்படுத்த வேண்டும் என்று தகுந்த 2006-ன் முற்பகுதியில் கொரியாவிற்கு முனைவர் பட்ட ஆராய்ச்சிப் படிப்பை மேற்கொள்ள வந்த சங்கத்தின் இன்றைய தலைவர் முனைவர் ராமசுந்தரம் போன்றவர்களிடம் கூறிவந்தனர். களப்பணியைத் தொடங்கிய ராமசுந்தரம் கொரியாவில் நிரந்தரப் பணி செய்யும் வாய்ப்பு பெற்ற மூத்த உறுப்பினர்களையும், சுமார் 5 ஆண்டு காலம் வரை தங்கும் வாய்ப்புள்ள முனைவர் பட்ட மாணவர்களையும் இணைத்துத் தொடர்புகளை விரிவாக்கி, தமிழர் தொடர்பான வரலாறு, மற்றும் இடர்ப்பாடுகள் குறித்து அவ்வப்போது இங்குள்ள தளங்களில் விவாதங்களில் பங்கெடுத்து சக இந்திய மக்கள் அனைவரும் புரிந்துகொள்ளும் வகையில் கருத்துகளை முன்வைக்க ஊக்கப்படுத்தியதன் விளைவாக அறிவார்ந்த தமிழ்ச் சமூகத்தின் இருப்பு வெளிக்கொணரப்பட்டது.

தமிழ்நாடு அரசு வெளியிட்ட கொரிய மொழியிலான திருக்குறள் புத்ததகத்தை கொரியாவில் வெளியிட இந்தியத் தூதரகத்தில் சங்கத்தின் சார்பில் வேண்டுகோள் வைக்கப்பட்டது. கன்சுலார் செரிங் அஞ்சுக், சங்கத்தின் செயலர் ஆரோக்கியராஜ், கலாச்சார மையத்தின் இயக்குனர் சோனி திரிவேதி, துணைத்தூதர் சதீஸ் சிவன், சங்க பொறுப்பாளர் ஜனகராஜ், சங்கத்தின் தலைவர் ராமசுந்தரம் (இடமிருந்து வலம்).

மேலும் இதன் மூலம் ஆங்காங்கே தொடர்பு இல்லாமல் இருக்கும் தமிழர்களுக்கு தமிழரின் இருப்பு தொடர்பான செய்திகள் பரவின. இதன் பலனாக செயற்பாட்டு ஆர்வமுள்ளோர் ஒருவருக்கொருவர் தொடர்பை ஏற்படுத்திக்கொண்டனர். இதனுடே முனைவர் பட்ட மாணவர்கள் மற்றும் தொழிலகங்களில் பணியாற்றும் நமது மக்களின் மன அழுத்தங்கள் மற்றும் தொடர்பான இடர்களுக்கு தகுந்த மூத்தோர்களின் உதவி மற்றும் கருத்துரைகள் கிடைக்கப் பெற்று தீர்வு கிடைப்பது எளிதானது. அடுத்தபடியாக மக்களுக்கு வாழ்வியல் தகவல்களான கல்வி, குழந்தைப்பேறு, வங்கி நடைமுறைகள், மருத்துவம், குடிவரவு வழிமுறைகள், மக்களுக்கு ஊரிலிருந்து தேவைப்படும் முக்கியப் பொருட்கள், ஆவணங்கள் எடுத்து வருவதற்கு உதவுதல் மற்றும் பயண உதவி போன்ற செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன.

தொடர்ந்த செயற்பாட்டினால், இன்றியமையா முன்னெடுப்பாக, தமிழர் அடையாளத்தை உலகிற்கு எடுத்துக்காட்டும் தமிழர் திருநாள் பொங்கல் கூடுதல்கள் பெரிய அளவில் கொரியா முழுவதும் வாழும் தமிழர்களை ஒருங்கிணைத்து கொரிய மண்ணில் முதன்முதலாக 2016 முதல் ஒருங்கிணைக்கப்பட்டு மேலும் இந்த செயற்பாட்டுத்தளம் விரிவுபடுத்தப்பட்டது. குறிப்பாக, தை மாதம் நிலவும் கடும் குளிர் உள்ளிட்ட காலநிலை மற்றும் தொடர்பான போக்குவரத்து இடர்ப்பாடுகள், பொங்கல் வைத்தல், கரும்பு கொணர்தல் மற்றும் தமிழர் உணவு பரிமாறுதல் போன்ற கடின அறைகூவல் விடும் கூறுகள் உரிய திட்டமிடுதலுடன் கையாளப்பட்டு தமிழர் திருநாள் தொடர்ந்து சிறப்பாக நடைபெறுவதற்கு வழிவகை செய்யப்பட்டது. இம்முறை நடைபெற்ற தமிழர் திருநாள் 2020 (கொரியப் பொங்கல் -2020) கொரியாவின் நடுப்பகுதியில் ஆட்சிக்குரிய சுஞ்சியங்புக்தோ மாகாண அரசின் உதவியுடன் நடைபெற்றது. இவ்விடயம் இதுகாறும் சங்கம் எடுத்த உறுதியான செயற்பாடுகளின் பெறுமதியை தமிழ்கூறும் நல்லுலகிற்கு எடுத்துக்காட்டுகிறதென்றால் அது மிகையாகாது.

அதே நேரத்தில் அறிவுத்தளத்தில் தமிழர்களை இனைக்கும் பொருட்டு 2016 முதல் தமிழ் கலை இலக்கிய சந்திப்புக் கூடுதல்களை ஒருங்கிணைத்து தமிழரின் எழுத்து கலையார்வம் ஆகியவற்றை வெளிக்கொணர்ந்து கல்வி, பணி உள்ளிட்ட பல்வேறு தளங்களில் சாதிக்கும் தமிழர்களுக்கு விருதுகள் வழங்கப்படுகின்றன. இந்த நிகழ்வுகளில் ஒரிசா பாலு போன்ற தமிழர் தொன்மை ஆய்வாளர்கள் மற்றும் பொதுத் தலைவர்கள் அழைத்துவரப்பட்டு தமிழுக்குச் சேவையாற்றியோர் குறித்த நினைவுச் சொற்பொழிவுகளும் நடத்தப்படுகின்றன. இங்கு கணினித்தமிழ் வேந்தர் மா. ஆண்டோ பீட்டர் குறித்த சொற்பொழிவை ஆளூர் ஷாநவாஸ் நிகழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் கொரியவாழ் தமிழர்களுக்கும் தாய்த் தமிழ்நாட்டிற்கும் உறவுகளை ஏற்படுத்தும் வண்ணம் மேற்சொன்ன கூடுதல்களுக்கு பொதுவாழ்வில் இருக்கும் தலைவர்கள், மூத்த ஊடகவியலாளர்கள் மற்றும் எழுத்தாளர்களிடமிருந்து வாழ்த்துகள் பெறப்பட்டு நிகழ்வுகள் ஊடகக் குறிப்புகளும் நடுநீரோட்ட ஊடகங்களில் வெளிவர ஆவன செய்யயப்படுகிறது.

கொரிய சட்ட நடைமுறைப்படி குழு அமைத்து சட்டத்திட்டம் எழுதி பொது விவாதத்திற்கு வைத்து, அதனைப் பொதுவெளியில் தொடர்பாளர்கள் கூட்டத்தில் நிறைவேற்றி, அதன்பேரில் ஆளுமைக்குழு தேர்ந்தெடுக்க்கப்பட்டு சங்கம் 2019 முதல் முழு செயற்பாட்டுக்கு வந்தது. சட்டத்திட்ட வரைவை எமது செயளாலர் முனைவர் கு. ராமன் தலைமையிலான குழு இயற்றியது. குறிப்பாக இங்குள்ள நமது இந்தியத் தூதரகத்தில் சட்டத்திட்ட வரைவு கொடுக்கப்பட்டு அறிவுரை பெறப்பட்டது. தூதரகம் சங்கத்தின் வேண்டுகோளை (தமிழ்நாடு அரசு வெளியிட்ட கொரிய மொழியிலான திருக்குறள் புத்தகத்தை இங்கு வெளியிடுவது உள்ளிட்ட) பரிசீலித்து உதவுகிறது என்பது இங்கு நன்றியுடன் குறிப்பிடத்தக்கது. இறுதியாக சங்கப் பதிவிற்காக இரண்டாண்டுகால ஆவண வேலைகள், சட்டப்படியான தேவைப்பாடுகள் நிறைவு பெற Bio CS Chungcheongbuk-do Korea நிறுவனத்தின் உரிமையாளர்களும் சங்கத்தின் புரவலர்களுமான Ryu Jae Hyung மற்றும் Kim Eun Seok மற்றும் ANC Tech Sunchon நிறுவனத்தின் முதண்மை பணிப்பாளர் சாங் தோ சன் ஆகியோர் உதவி புரிந்தனர்.

சக இந்திய சகோதரர்களுடன் நல்லுறவு. குரு நானக் பிறந்தநாள் விழா - 2019.


மேற்சொன்ன முயற்சிகளின் பலனாக திருவள்ளுவர் ஆண்டு 2051, 16 மாசி வெள்ளிக்கிழமை (28 பிப்ரவரி) சமகாலத்தில் 1990 முதல் கொரியாவையறிந்த தமிழ் மக்களின் வரலாற்றுக் கனவான சட்டப்படியாக கொரியா அரசில் பதிவு செய்யப்பட்ட கொரிய தமிழ்ச் சங்க உருவாக்கம் நனவாகியது.

பூமிப்பந்தில் தமிழ்நாடு கடைப்பிடித்த அரசியல், சமூக மற்றும் பொருளாதாரக் கொள்கையின் விளைவால் அறிவியல் விஞ்ஞானிகளாலும் மற்றும் உயர் தொழில்நுட்பவியலாளர்களாலும் உருவான படித்த எளிய மக்களின் பிள்ளைகளால் அமைக்கப்பெற்ற கொரிய தமிழ்ச் சங்கம் தமிழரின் நல்லியல்புகளையும் பண்பாட்டையும் இவ்வுலகிற்க்கு அறியச்செய்து தமிழ்கூறும் நல்லுலகிற்கு தொடர்ந்து பெருமை சேர்க்கும். தமிழ்நாட்டின் கடைநிலைக் குடும்பங்களிலிருந்து கொரியாவிற்கு வந்து உயர் கல்வி/அறிவியல் தொழில்நுட்ப ஆராய்ச்சி/உயர் தொழில்நுட்ப வேலை போன்ற பணிகளில் ஈடுபட்டிருக்கும் தமிழ்நாட்டின் சமூக-அரசியல் மற்றும் பொருண்மிய வளர்ச்சியின் அடையாளமாகத் திகழும் இளைஞர்களால் முற்று முழுதாக கட்டமைக்கப்பட்டது என்ற சிறப்பு உலகில் கொரிய தமிழ்ச் சங்கத்திற்கே உண்டு என்றால் அது மிகையாகாது. சங்கத்தின் அடிப்படைக் கட்டமைப்பு வேலையை முன்னின்று செய்த அறிவியலாளர் சங்கத்தின் முதல் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுப் பணி செய்யும் வாய்ப்பும் வேறு எங்கும் எளிதில் காணக்கிடைக்காத ஒரு நிகழ்வு. எனவே, இயல்பிலே கொரிய தமிழ்ச் சங்கத்தின் செயல்பாடும் பொதுக் கோரிக்கைகளும் அறிவுத்தளம் எங்கும் விரிகிறது.

எமது சங்கம் இங்குள்ள கொரிய மக்களிடம் இணைந்து தமிழர்-கொரிய உறவுகள் குறித்த கருத்தரங்குகளை நடத்துதல் போன்ற பணிகளைச் செய்கிறது. குறிப்பாக இங்குள்ள கொரிய மக்களின் கருத்துகளை உள்வாங்கி அவர்கள் உதவியுடனும் சங்கம் அமைக்கப்பெற்று நடைபெறுகிறது. குறிப்பாக கொரிய மக்கள் சங்கத்தின் புரவலர்களாக இருந்து அலுவலகம் அமைக்கக் கட்டணமின்றி இடம் வழங்குதல் போன்ற பெரிய உதவிகளைச் செய்கின்றனர். மேலும் இவ்வாண்டு தமிழக அரசால் நடத்தப்படும் உலக தமிழ்ச் சங்க நிகழ்வில் கொரிய தமிழ்ச் சங்கத்தை உறுப்பினராகச் சேர்த்து ஊக்கப்படுத்தியது என்பது உள்ளார்ந்த நன்றியுடன் பதிவு செய்யத்தக்கது. இதுகாறும் தமிழ்நாடு அரசுக்கும், தமிழ் வளர்ச்சித் துறைக்கும், மதுரை உலக தமிழ்ச் சங்கத்திற்கும் எமது நன்றிகளை உரித்தாக்குகிறோம். கரோனா தொற்றைக் கட்டுப்படுத்துவதில் கொரியா திறம்படச் செயல்பட்டு வருவதால் விரைவில் விரிவான பொது ஏற்பாடுகளுடன் கொரிய தமிழ்ச் சங்கத்தின் தொடக்க விழா தமிழ் கூறும் நல்லுலகின் வாழ்த்துகளுடன் நடைபெறுமென்றால் அது மிகையாகாது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x