

மிகப்பெரிய வெற்றி பெற்ற ‘மரோசரித்ரா’ படம், கே.பாலசந்தரின் திரையுலக வாழ்வில் மறக்கமுடியாத படம். தெலுங்கில் வெளியான இந்தப் படம், தெலுங்கிலேயே பல மாநிலங்களில் வெளியாகி வசூலில் வெற்றிவாகை சூடி, சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த படமாக அமைந்தது.
பாலசந்தர் தான் இயக்கிய பல தமிழ்ப்படங்களை, கன்னடத்தில் ரீமேக் செய்துள்ளார். இதேபோல், தெலுங்கில் வெளியான ‘மரோசரித்ரா’வையும் தமிழில் எடுப்பது என முடிவு செய்திருந்தார்.
இயக்குநர் பாலுமகேந்திரா முதன்முதலாக இயக்கிய படம் ‘கோகிலா’. அதுவரை ஒளிப்பதிவாளராக மட்டுமே இருந்த பாலுமகேந்திரா, ‘கோகிலா’ மூலம் இயக்குநரானார். இதுவொரு கன்னடப் படம். கமல், ஷோபா, ரோஜாரமணி முதலானோ நடித்த இந்தப் படத்தின் மூலமாக கன்னட உலகில் அறிமுகமானார் மோகன்.
மோகனைப் பார்த்தமாத்திரத்திலேயே பாலுமகேந்திராவுக்குப் பிடித்துவிட, ‘கோகிலா’ வாய்ப்பு கிடைத்தது மோகனுக்கு. 1977-ம் வருடம், அக்டோபர் 7-ம் தேதி வெளியானது ‘கோகிலா’. அங்கே மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.
1978-ம் ஆண்டு மே மாதம் 19ம் தேதி வெளியானது பாலசந்தரின் ‘மரோசரித்ரா’. இந்தசமயத்தில்தான், கடந்த வருடம் பார்த்த ‘கோகிலா’ படம், பாலசந்தருக்கு நினைவுக்கு வந்தது. அதில் நடித்த மோகனை அழைத்துவரச் சொன்னார்.
அதன்படி மோகனும் சென்னைக்கு வந்தார். பாலசந்தரைச் சந்தித்தார். ‘தமிழில் நடிக்க விருப்பம் இருக்கா உனக்கு?’ என்று கேட்டார். ‘எந்த மொழியாக இருந்தாலும் ஓகேதான் சார்’ என்றார் மோகன். ‘அப்போது அவர்தான் பாலசந்தர். தமிழின் மிகப்பெரிய இயக்குநர் என்றெல்லாம் தெரியாது எனக்கு. ஆனாலும் அவர் கேட்டதும் நான் சரியென்று ஒத்துக்கொண்டேன்’ என்றார் மோகன். ‘சரி, கூப்புடுறேன், அப்ப வா’ என்றார் பாலசந்தர்.
தெலுங்கில் எடுத்த ‘மரோசரித்ரா’வை, தமிழில் எடுக்க நினைத்த பாலசந்தர், கமல் கேரக்டரில் மோகனை நடிக்கவைப்பது என்று திட்டமிட்டார். ஆனால் இரண்டுகாரணங்களால் இது நடக்காமலே போய்விட்டது.
இயக்குநர் பாரதிராஜா தன் ‘16 வயதினிலே’ படத்துக்குப் பிறகு அடுத்த படமாக எடுத்து முந்நூறு, நானூறு நாட்களைக் கடந்து ஓடிய இரண்டாவது படம் ‘கிழக்கே போகும் ரயில்’. இந்தப் படத்தில் நடிகர் சிவசந்திரன் உள்ளிட்ட பல நடிகர்கள் அழைக்கப்பட்டனர். ‘பாப்பேன், யாரும் கிடைக்கலேன்னா, நீதான் நடிக்கிறே’ என்று பாக்யராஜிடம் தெரிவித்தார் பாரதிராஜா.
பிறகுதான், நடிகர் சுதாகரை அந்த பரஞ்சோதி கேரக்டரில் அறிமுகப்படுத்தினார். சுதாகரும் மிகப்பெரிய ரவுண்டு வந்தார். இவர் ஆந்திராவைச் சேர்ந்தவர். 1978ம் வருடம் ஆகஸ்ட் 10ம்-ம் தேதி ‘கிழக்கே போகும் ரயில்’ வெளியானது. இந்தப் படத்தின் வெற்றியால், கதை உரிமையை வாங்கி தெலுங்கில் ரீமேக் செய்தார்கள். ’தூர்ப்பு வெள்ளே ரயிலு’ என்ற் பெயரில் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்ட ‘கிழக்கே போகும் ரயில்’ அங்கேயும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. சத்திராசு லட்சுமி நாராயணா இயக்கினார். இந்தப் படத்துக்கு இசை யார் தெரியுமா? எஸ்.பி.பாலசுப்ரமணியம். படத்தின் ஹீரோ நடிகர் மோகன்.
ஆந்திரத்தில் இருந்து தமிழுக்கு வந்து மிகப்பெரிய ஹிட்டடித்தார் சுதாகர். அதேபோல், கன்னடப் படத்தில் அறிமுகமாகி, அதே ‘கிழக்கே போகும் ரயில்’ படத்தின் தெலுங்கு ரீமேக்கான ‘தூர்ப்பு வெள்ளே ரயிலு’வில் தெலுங்கில் ஹிட்டடித்தார் மோகன்.
தெலுங்கு ரயிலின் படப்பிடிப்பின் போதுதான் இங்கே ‘மரோசரித்ரா’ விஷயமும் நடந்தது,
படத்தின் வேலையைத் தொடங்கலாம் என்று மோகனை அழைத்து வரச்சொன்னார் கே.பாலசந்தர். மோகனும் வந்தார்... மொட்டைத்தலையுடன்! அதைப் பார்த்து அதிர்ந்துபோனார் பாலசந்தர் சார். ‘என்னய்யா இது’ என்று கேட்டார். ‘கிழக்கே போகும் ரயில்’ படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடித்துக் கொண்டிருக்கும் விஷயத்தைச் சொன்னார் மோகன்.
’கிழக்கே போகும் ரயில்’ படத்தில், சுதாகருக்கு மொட்டையடித்து கரும்புள்ளி செம்புள்ளி குத்தி, கழுதை மீது ஊர்வலம் வருவது போல் உள்ள காட்சி நினைவிருக்கிறதுதானே. ‘தூர்ப்பு வெள்ளே ரயிலு’ படத்தின் அந்தக் காட்சிக்காக, மோகன் மொட்டையடித்திருந்தார்.
‘முடி வளர எப்படியும் முணு மாசமாயிரும் போல. அப்போ பாப்போம்’ என்று அனுப்பிவைத்தார் பாலசந்தர். அந்த சமயத்தில்தான், தெலுங்கு ‘மரோசரித்ரா’ தமிழகம், கேரளம், கர்நாடகம் என பல மாநிலங்களிலும் வெளியானது. தெலுங்கிலேயே வந்த ‘மரோசரித்ரா’வின் வெற்றியால், படத்தை ரீமேக் செய்வதைக் கைவிட்டார் பாலசந்தர்.
மோகன் நடித்த ‘தூர்ப்பு வெள்ளே ரயிலு’ 79-ம் வருடம் ஆகஸ்ட் 18-ம் தேதி வெளியானது. மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இதன் பின்னர், 80-ம் ஆண்டு, பாலுமகேந்திராவின் ‘மூடுபனி’ படத்தில் நடித்தார் மோகன். 81-ம் ஆண்டில், மகேந்திரன் இயக்கத்தில் ‘நெஞ்சத்தைக் கிள்ளாதே’ படத்தில் நடித்தார்.
’கிழக்கே போகும் ரயில்’ தெலுங்குப் படத்துக்காக ஒருவேளை மோகன் மொட்டையடிக்காமல் இருந்தால், பாலசந்தரின் அறிமுகப் பட்டியலில் மோகனும் இணைந்திருப்பார்.
ஆனாலும், இவற்றையெல்லாம் கடந்து, மோகன் வெற்றிவிழா நாயகன், வெள்ளிவிழா நாயகன் என தமிழ்த் திரையுலகில் மிகப் பெரிய ரவுண்டு வந்தது தனிக்கதை!