Published : 15 May 2015 11:41 am

Updated : 07 Aug 2015 12:49 pm

 

Published : 15 May 2015 11:41 AM
Last Updated : 07 Aug 2015 12:49 PM

எப்படி? இப்படி!- 2: இரண்டு துப்பாக்கிகள் மூன்று தோட்டாக்கள்!

2

குற்றங்களைக் கண்டுபிடித்தது தொடர்பாக ஓர் அலசல் தொடர்...

1967 பிப்ரவரியில் நடந்த சட்டசபைத் தேர்தல் தமிழ்நாட்டின் அரசியல் வர லாற்றில் பல முக்கியமான நிகழ்வுகளை ஏற்படுத்தியது.


திராவிட முன்னேற்றக் கழகம் முதன் முறையாக ஆட்சியில் அமர்ந்தது. தேர்தலில் போட்டியிடாத அண்ணா, தன் எம்.பி. பதவியை ராஜினாமா செய்து விட்டு முதல்வர் ஆனார். முன்னாள் முதல்வர் காமராஜர் ஒரு மாணவரிடம் தோற்றுப்போனார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபடி தேர்தல் மனு தாக்கல் செய்த எம்.ஜி.ஆர். பறங்கி மலை தொகுதியின் சட்டமன்ற உறுப் பினர் ஆனார்.

அந்தத் தேர்தலின் பிரச்சாரம் மாநிலம் முழுவதும் தீவிரமாக நடந்து கொண்டிருந்த நேரம். ஜனவரி 12, ஒரு முக்கியமான நாள். அன்று மாலை வெளிவந்த இரண்டு செய்திகள் அனைவரையும் உலுக்கின. எம்.ஜி.ஆர் அவரது ராமாவரம் தோட் டத்தில் சுடப்பட்டார் என்பது முதல் செய்தி. அவரை சுட்டதாகச் சொல் லப்பட்ட எம்.ஆர்.ராதாவும் சுடப்பட்டார் என்பது அடுத்த செய்தி.

நகரமே ஸ்தம்பித்தது. எங்கு பார்த்தாலும் பரபரப்பு! கடைகள் மூடப் பட்டன. பேருந்துகள் நிறுத்தப்பட்டன. ராதாவின் தோட்ட வீட்டில் கல்லெறிதல் மற்றும் தீ வைத்தல் தொடங்கி ஆங் காங்கே கலவரங்கள். ரத்தக் காயங் களுடன் இருந்த இரண்டு பேரையும் ராயப்பேட்டை அரசு மருத்துவ மனைக்குக் கொண்டு வந்தார்கள். விபத்து பிரிவில் அருகருகில் இரண்டு படுக்கைகளில் படுக்கவைக்கப்பட்டு முதலுதவிகள் அளிக்கப்பட்டன. உடல் களில் பாய்ந்து உள்ளே தங்கிவிட்ட குண்டுகளை அறுவை சிகிச்சை செய்து நீக்க, அரசு பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல முடிவானது.

தகவலறிந்து கூடிவிட்ட ஆயிரக் கணக்கான மக்களின் உணர்ச்சிபூர்வ மான கொந்தளிப்பைக் கட்டுப்படுத்த இயலாமல் போலீஸ்காரர்கள் தடியடி நடத்த... மக்கள் திருப்பித் தாக்க.. போர்க்களம் போன்ற காட்சி. ஆர்ப்பரித்த மக்கள் கூட்டத்தைக் கட்டுப்படுத்தி வழி அமைத்து ஒரே ஆம்புலன்ஸில் இருவரையும் கொண்டு சென்றார்கள்.

எம்.ஜி.ஆரின் இடது காதுக்குக் கீழே துளைத்துச் சென்று முதுகெலும்பின் முதல் எலும்பில் சிக்கியிருந்த குண்டை நீக்குவது அவரின் உயிருக்கு ஆபத்தாக அமையும் என்பதால், அதை அப்படியே விட்டுவிட முடிவு செய்தார்கள். (இரண்டு மாதங்களுகக்குப் பிறகு அந்த குண்டு நகர்ந்து தொண்டை அருகே வந்து வலியெடுத்ததால், அப்போது அறுவை சிகிச்சை செய்து அதை நீக்கினார்கள்.

அதன் பிறகுதான் அவரின் குரல் பாதிக்கப்பட்டது.) ராதாவின் வலது புருவத்துக்கு மேலும், நெஞ்சு எலும்பு அருகிலும் சிக்கியிருந்த இரண்டு குண்டுகளை அறுவை சிகிச்சை செய்து நீக்கினார்கள். எம்.ஜி.ஆர். 57 நாட்கள் மருத்துவமனையில் இருந்துவிட்டு வீடு திரும்பினார். ராதாவுக்கு 18 நாட்களில் சிகிச்சை முடிந்ததும் அவர் சிறைக் காவலில் வைக்கப்பட்டார்.

நடந்தது என்ன?

அன்று ‘பெற்றால்தான் பிள்ளையா?' படத்தின் தயாரிப்பாளர் வாசுவும், எம்.ஆர்.ராதாவும் ஒரு புதிய படத்தில் எம்.ஜி.ஆரை நடிக்க வைப்பது தொடர் பாகப் பேச ராமாவரம் தோட்டத்துக் குச் சென்றார்கள். எம்.ஜி.ஆருக்காக வீட்டின் வரவேற்பறையில் காத்திருந் தார்கள். எம்.ஜி.ஆர் வந்தார்.இருவரிட மும் பேசினார். அப்போதுதான் சம்பவம் நிகழ்ந்தது.

முதலில் சைதாப்பேட்டை முதன்மை மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்திலும், பிறகு செங்கல்பட்டு செஷன்ஸ் நீதி மன்றத்திலும் இந்த வழக்கு நடந்த போது அரசு தரப்பில் வழக்கறிஞர் வி.பி.ராமனும், பி.ஆர்.கோகுலகிருஷ் ணனும் வாதாடினார்கள். எம்.ஆர்.ராதா வுக்காக வழக்கறிஞர்கள் மோகன் குமாரமங்கலம், என்.நடராஜன், என்.டி.வானமாமலை ஆகியோர் வாதாடி னார்கள். நடந்த சம்பவத்தை எம்.ஜி.ஆர், எம்.ஆர்.ராதா இருவரும் இரண்டு விதமாக கோர்ட் விசாரணைகளில் தெரிவித்தார்கள்.

எம்.ஜி.ஆர். அளித்த வாக்கு மூலத்தின் சாரம்: ‘நான் வாசுவிடம் பேசிக்கொண்டிருந்தபோது திடீரென்று துப்பாக்கி வெடிக்கும் சத்தம். என் காதருகில் குண்டு பாய்ந்து ரத்தம் கொட்டியது. திரும்பிப் பார்த்தால் எம்.ஆர்.ராதா கையில் துப்பாக்கியுடன் நின்று கொண்டிருந்தார். ‘என்னண்ணே இப்படி பண்ணிட்டீங்க?' என்றேன் நான். ‘சண்டாளா… சதிகாரா! இப்படி பண் ணிட்டியே!' என்று பதறினார் வாசு. இதற்குள் ராதா தன்னைத்தானே சுட்டுக் கொண்டார்.

எம்.ஆர். ராதா அளித்த வாக்கு மூலத்தின் சாராம்சம்: ‘நாங்கள் எம்.ஜி.ஆருக்காகக் காத்திருந்தோம். எம்.ஜி.ஆர் வரும்போதே மிக கோபமாக வந்தார். ஒரு பத்திரிகையில் அவரைப் பற்றி நான் அவதூறாக எழுதியதாக சத்தம் போட்டார். நான் மறுத்துப் பேசினேன். ‘உங்களை சுட்டா என்ன பண்ணுவிங்க?' என்று கேட்டார். ‘மனுஷன்னா எப்பவும் சாவறவன்தான், சுட்டுத்தான் பாரேன்' என்றேன். எம்.ஜி.ஆர் எனது துப்பாக்கியை எடுத்து என்னை சுட்டார். நான் தற்காப்புக்காக அவர்மேல் பாய்ந்து அந்தத் துப்பாக் கியைப் பறித்து அவரைச் சுட்டேன்.'

எம்.ஜி.ஆர், எம்.ஆர்.ராதா இருவரும் 50 ஆண்டு காலமாக நண்பர்கள். இருவரும் சிறுவயதில் ஒரே நாடக கம்பெனியில் பணிபுரிந்தவர்கள். இருவரும் பெரியாரின் மேல் மதிப்பு கொண்டவர்கள். இருவருமே மக்கள் மத்தியில் பிரபலமானவர்கள். எம்.ஜி.ஆர் அப்போது தமிழ் சினிமாவில் உச்ச அந்தஸ்த்தில் இருந்த ஹீரோ. எம்.ஆர்.ராதா நாடகங்களிலும் சினிமாவிலும் தனி முத்திரை பதித்து உயர்ந்தவர். எம்.ஜி.ஆர் தி.மு.க.வின் முக்கிய பிரமுகர் என்றால் ராதா திராவிடர் கழகத்தின் முக்கிய பிரமுகர்.

இரண்டு பேருமே துணிச்சல்காரர்கள். எம்.ஜி.ஆர் ஒரு முறை படப்பிடிப் பின்போது நடிகைகளிடம் வம்பு செய்த ரவுடிக் கும்பலை நிஜமாகவே அடித்து உதைத்தவர். ’குலேபகாவலி’ படத்தில் நிஜமான புலியுடன் சண்டை போட்டு நடித்தவர். எம்.ஆர்.ராதா தனக்கு சம்பளத்தில் 300 ரூபாய் பாக்கி வைத்த தயாரிப்பாளர் மேல் வழக்கு தொடுத்து பணத்தை வசூலித்தவர். அப்போது குடியரசு தலைவராக இருந்த ராதாகிருஷ்ணன் தமிழ் நாட்டுக்கு வருகை தந்தபோது இரண்டு நாட்களுக்கு பயன்படுத்த ராதாவிடம் இருந்த விலை உயர்ந்த காரை அதிகாரிகள் கேட்டபோது மறுத்தவர்.

இந்த வழக்கில் முக்கியமான விஷயம்... இருவரிடமும் துப்பாக்கிகள் உண்டு. இருவருமே அதற்கு லைசென்ஸ் பெற்றிருந்தார்கள். (ராதாவின் துப்பாக்கி 64-ம் வருடத்துக்குப் பிறகு புதுப்பிக்கப்படவில்லை என்று பிறகு தெரிய வந்தது) இருவர் வைத்திருந்ததும் ஒரே மாதிரியான துப்பாக்கிகள். இரண்டு துப்பாக்கிகளிலும் ஒரே மாதிரி யான குண்டுகளைப் பயன்படுத்த முடியும். இப்போது கேள்வி... யாரை யாரை சுட்டார்கள்? எம்.ஜி.ஆர். சொன்னது உண்மையா? எம்.ஆர்.ராதா சொன்னது உண்மையா? நீதிமன்றத்தில் உண்மையை எப்படி நிரூபித்தார்கள்?

இந்த வழக்கின் முடிவு வருகிற வெள்ளிக்கிழமைக்கு ஒத்திவைக்கப் படுகிறது.

கதையில் உத்தி

நான் எழுதிய ஒரு நாவலில் ஒரு கடத்தல் கும்பலை போலீஸ் தேடி வரும். சில மணி நேரங்கள் அவர்கள் தங்கிச் சென்ற ஒரு சிதிலமான கட்டிடத்தைக் கண்டுபிடிப்பார்கள். அங்கே அவர்கள் ஹோட்டலில் இருந்து பார்சல் வாங்கி வந்து சாப்பிட்டுவிட்டு வீசிய இலைகளும் பதார்த்தங்களும் கிடக்கும். அவற்றைப் பொறுமையாக ஆராய்ந்து அவை என்ன பதார்த்தங்கள் என்று பட்டியல் போடுவார்கள்.

பிறகு அந்த வட்டாரத்தில் உள்ள எல்லா ஹோட்டல்களுக்கும் சென்று பட்டியலைக் காட்டி, அவற்றை யாராவது பார்சல் வாங்கிச் சென்றார்களா என்று விசாரிப்பார்கள். ஒரு ஹோட்டலில் பார்சல் வாங்கிச் சென்றவன் பற்றிய தகவல் கிடைக்கும். அதை வைத்து கடத்தல்காரர்களைக் கண்டு பிடிப்பார்கள்.

- இன்னும் வரும்…

எண்ணங்களை பகிர்ந்துகொள்ள: pkpchennai@yahoo.co.in

முந்தைய அத்தியாயம்: >எப்படி? இப்படி?- 1


வெள்ளி வியப்புபட்டுக்கோட்டை பிரபாகர்பிகேபி தொடர்எப்படி இப்படிஅலசல் தொடர்க்ரைம்

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x