

சக்திவேலும் பவித்ராவும் இரண்டு ஆண்டுகளாகக் காதலித்து வருகின்றனர். இவர்களின் காதலுக்கு இரு வீட்டாரும் சம்மதித்ததால் நிச்சயதார்த்தம் முடிந்து கடந்த மாதம் இவர்களின் திருமணம் நடக்க இருந்தது. ஆனால், பொதுமுடக்கத்தால் திருமணம் தள்ளிப்போனது. அதற்காக வருந்தாத சக்திவேல், தனது காதலியின் பெயரில் தொடங்கியிருக்கும் அமைப்பின் மூலம் கரோனா காலத்தில் நலிந்தோருக்கு உதவிவருகிறார்.
குமரி மாவட்டம் தாழக்குடி கிராமத்தைச் சேர்ந்த சக்திவேல் கட்டுமானப் பொறியாளர். தனது காதலியின் பெயரான பவித்ரா என்பதைக் குறியீடாகக் கொண்டு ‘பவித்ரா சோஷியல் ஃபவுண்டேஷன்’ என்னும் அமைப்பையும் நடத்திவரும் இவர், கரோனா காலத்தில் தொடர்ந்து ஆசிரமங்களுக்குப் போய் அங்கிருக்கும் ஆதரவற்றோருக்கு உணவு வழங்கிவருகிறார். இதேபோல் ஏழை, எளிய மாணவர்களின் கல்விக்கு உதவுவது, உள்ளூரில் சிறுவர் பூங்காவை இலவசமாகப் பராமரிப்பு செய்து கொடுத்தது, மழைநீர்க் கட்டமைப்பை இலவசமாக உருவாக்குவது என இவரது பங்களிப்பு நீள்கிறது. இதேபோல் கரோனா காலத்துச் சேவையாக, எளிய மக்களுக்கு அவர்களின் வீட்டுக்குத் தேவையான மளிகைப் பொருள்களையும் வழங்கிவருகிறார் சக்திவேல்.
காதலிக்கு பரிசுப் பொருள்கள் வாங்கிக் கொடுக்கும் காதலர்களுக்கு மத்தியில், சேவையையே பரிசாகக் கொடுப்பதற்காக அவர் பெயரிலேயே அமைப்பைத் தொடங்கியிருக்கிறார் சக்திவேல். இதுகுறித்து அவர் ‘இந்து தமிழ்’ இணையத்திடம் கூறுகையில், “எனக்கு 5 வயசு இருக்கும்போதே என்னோட அம்மா இறந்துட்டாங்க. பள்ளிக்கூடத்தில் படிக்கும்போது அம்மா, அப்பா இல்லாதவங்க இருந்தா உதவித்தொகை கொடுப்பாங்க. அப்போ அம்மா இல்லைன்னு எழுந்துருச்சு நின்னிருக்கேன். அதோட வலியை உணராத பருவம். என்னோட சித்தியும் என்னை நல்லாவே பார்த்துக்கிட்டாங்க. ஆனாலும் அம்மாவை இழந்தவங்களோட வலி எனக்கு நல்லாவே தெரியும்.
அதனாலதான் எங்க ஊரு அரசுப் பள்ளியில் இரண்டு ஏழைக் குழந்தைகளின் படிப்புச் செலவையும் ஏத்துருக்கேன். அரசுப் பள்ளி என்பதால் கல்விக் கட்டணம் இருக்காது. ஆனா, நோட், சீருடைன்னு கொஞ்சம் தேவை இருக்கும். அதை நான் கவனிச்சுக்கிறேன்.
இப்போ கரோனா காலத்தில் என்னால முடிஞ்ச அளவுக்கு 500 முகக் கவசங்களை வாங்கிக் கொடுத்தேன். என்னோட சொந்த ஊரில் நான் சார்ந்திருக்கும் கட்டுமானத்துறை சார்ந்து சின்னச் சின்ன வேலைகளையும் இலவசமா செஞ்சு கொடுத்துட்டு இருக்கேன். என்னோட காதலி பவித்ராவும் பொறியியல் முடிச்சுருக்காங்க. அவங்களுக்கும் என்னை மாதிரியே இயல்பாகவே பொதுச் சேவையில் நாட்டம் அதிகம். சமீபத்தில் அவங்க பிறந்த நாளுக்கு ஒரு சர்ப்ரைஸ் கிஃப்ட் கொடுத்தேன். அசந்துட்டாங்க.
ஆமா, மனநலம் பாதிக்கப்பட்ட ஆசிரமத்துக்கு அவங்களக் கூட்டிட்டுப் போனேன். அங்க இருந்தவங்களுக்கு சாப்பாடு ஏற்பாடு செஞ்சு கொடுத்தோம். உண்மையைச் சொன்னா எங்க ரெண்டு பேருக்கும் இடையேயான காதலை இணைக்கும் கண்ணியாக இருந்ததே சேவைக் குணம்தான். கரோனா பொதுமுடக்கத்தால் கல்யாணத் தேதி தள்ளிப் போயிருக்கு. வாழ்க்கையில் இணைஞ்ச பின்னாடி இன்னும் நிறையப் பேருக்கு உதவணும்ங்கிறதுதான் என்னோட ஆசை” என்றவர், “ இல்லை... இல்லை எங்க ரெண்டு பேரோட ஆசை” என முகம் மலர்கிறார்.