

தமிழ்நாடு புதிய இயல்பு நிலைக்குத் திரும்பிவிட்டது. பெரும்பகுதியான கடைகளும் திறந்திருக்கின்றன. சாலைகளில் வாகனங்கள் விரைகின்றன. சிக்னல்கள் ஸ்தம்பிக்கின்றன. பஜார்களில் போக்குவரத்துக் காவலர்களின் வேலைப்பளு மறுபடியும் கூடியிருக்கிறது. தனியார் நிறுவனங்கள் மட்டுமின்றி அரசு அலுவலகங்களும் ஊழியர்களை வேலைக்கு வரச் சொல்லிவிட்டன. ஆனால், பொதுப்போக்குவரத்து மட்டும் தொடங்கப்படவே இல்லை.
அதனால் என்ன என்கிறீர்களா? சொந்தமாக வாகனம் வைத்திருப்போர் பிரச்சினையின்றி வேலைக்குச் செல்கிறார்கள். அதுகூட இல்லாத ஏழைகள் வேலைக்குச் செல்ல வழியில்லாத நிலை தொடர்கிறது. சாலையில் விரைகிற வாகனங்களிடம் லிஃப்ட் கேட்டாலும், கரோனா பீதி காரணமாக நிற்காமல் விரைகிறார்கள் வாகன ஓட்டிகள்.
இதுகுறித்து மதுரை மேலமாசி வீதியில் இரும்பு, பெயின்ட் வியாபாரம் நடத்தும் கணேசன் கூறுகையில், "என்னுடைய கடையில் வேலை பார்க்கிறவர்கள் எல்லாம் மதுரையின் வெவ்வேறு பகுதிகளில் இருந்து பேருந்தில் வருபவர்கள். அதற்காக மாதம் ஆயிரம் ரூபாய் மாதாந்திர பஸ் பாஸ் எடுப்பதற்கென சம்பளத்துடன் கொடுத்துவிடுவேன். இப்போது அவர்களால் வேலைக்கு வர முடியவில்லை. ஒரு சிலர் மட்டும் மற்றவர்களிடம் டூவீலர் இரவல் பெற்று வேலைக்கு வருகிறார்கள்" என்றார்.
மதுரையில் உள்ள வங்கி மேலாளர் ஒருவர் கூறுகையில், "இந்த ஊரடங்கு நேரத்திலும் நாங்கள் தொடர்ந்து வங்கிப் பணியை மேற்கொண்டோம். வாகனம் வைத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. பிரதமரின் ஜன்தன் கணக்கு வைத்துள்ள ஏழைகள், முதியோர் உதவித்தொகை பெறுவோர் போன்றவர்கள் வங்கிக்கு வருவதற்கு மிகவும் சிரமப்பட்டார்கள். இப்போது எல்லாக் கடைகளையும் திறந்துவிட்டார்கள். ஆனால், பேருந்தை மட்டும் இயக்காதது நியாயமற்றது" என்றார்.
சென்னையில் இன்னொரு பிரச்சினை
சென்னையில் பணிபுரியும் அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்களில் பெரும்பாலானோர் வெளிமாவட்டங்களைச் சேர்ந்தவர்கள். அரசு ஊழியர்கள் அனைவரும் 18-ம் தேதி முதல் வேலைக்கு வர வேண்டும் என்றும், அவர்கள் 50-க்கு 50 சதவீதம் என்ற முறையில் இரண்டு நாட்களுக்கு ஒரு முறை சுழற்சி முறையில் பணிக்கு வர வேண்டும் என்றும் அரசு ஆணை பிறப்பித்தது. அதேநேரம் சென்னை சிவப்பு மண்டலத்தில் இருப்பதாகவும், பொது முடக்கம் மே 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாகவும் இன்னொரு ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் வெளிமாவட்டங்களில் இருந்து வேலைக்கு வரும் அரசு ஊழியர்கள் கவலைப்படுகிறார்கள்.
சென்னையில் அனைத்து அரசுத் துறைகளின் தலைமை அலுவலகங்களும் இருக்கின்றன. அதில் பெரும்பாலானோர் வெளி மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள். அதிலும் சிலர் திருமணமாகாதவர்கள் என்பதால் விடுதிகளில் தங்கி உணவகத்தில் சாப்பிட்டு, வேலைக்கு வருபவர்கள். முதல் கட்டப் பொதுமுடக்கம் அறிவித்தபோதே, தங்கள் சொந்த ஊருக்குத் திரும்பிவிட்ட அவர்கள், இப்போது தாங்கள் தங்கியிருந்த விடுதியைத் தொடர்பு கொண்டால், இப்போது திறக்க வாய்ப்பில்லை என்றே தகவல் வருகிறது.
வேலையைக் காத்துக்கொள்வதற்காக சென்னைக்கு எப்படியாவது போய்ச் சேர்ந்தாலும் கூட, தங்க இடமில்லை. உண்ண உணவகங்கள் இல்லை. போக்குவரத்துக்கு ஆட்டோ, பஸ், மெட்ரோ ரயில்கள் இல்லை. தலைமைச் செயலகம் உள்ளிட்ட முக்கிய அரசு அலுவலகங்களுக்கு மட்டுமே சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதனால், தமிழ்நாட்டிற்குள்ளேயே அரசு மற்றும் தனியார் பணியாளர்களும் புலம்பெயர் தொழிலாளர்களின் நிலைக்குப் போனதைப் போலத் தவிக்கிறார்கள்.
இதற்குத் தீர்வாக ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ள மாவட்டங்களில் குறைந்தபட்சம் நகரப் பேருந்துகளையாவது இயக்க வேண்டும். சிவப்பு மண்டலமாக உள்ள சென்னைக்கு அரசு மற்றும் தனியார் ஊழியர்களைப் பணிக்கு வரச் சொல்லி கட்டாயப்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். செய்யுமா அரசு?