

‘‘இந்த ‘கரோனா’ ஊரடங்கில் எங்களை சக்கையாக பிழிந்து எடுக்கிறார்கள்’’ என்று ரேஷன் கடை ஊழியர்கள் விரக்தி தெரிவித்துள்ளனர்.
‘கரோனா’ ஊரடங்கில் மருத்துவம், காவல்துறை பணியாளர்கள், தூய்மைப்பணியாளர்கள் பணிகள் மட்டுமே போற்றப்படுகிறது. முன்னிலைப்படுத்தப்படுகிறது.
அவர்களைப் போல் பொதுமக்களுடன் மிக நெருக்கமாக, எந்த நேரத்திலும் நோய்த் தொற்று அபாயத்தில் பணிபுரியும் எங்கள் பணியை அரசும், பொதுமக்களும் அங்கீகரிக்கவில்லை என ரேஷன்கடை பணியாளர்கள் ஆதங்கப்படுகின்றனர்.
அவர்கள் கூறியதாவது: ஊரடங்கு காலத்திலும் பொதுமக்கள் தினந்தோறும் அதிகம் குவியும் இடம் ரேஷன் கடைகள். ஊடரங்கு ஆரம்பித்த காலம் முதல் தற்போது வரை ஒய்வே இல்லாமல் எங்களை அரசு அதிகாரிகள் சக்கையாக பிழிகிறார்கள்.
வழக்கமாக நாங்கள் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே பணிபுரிவோம். மற்ற அரசு பணியாளர்களை போல் எங்களுக்கு கைநிறைய ஊதியம் கிடையாது. சொற்ப ஊதியத்திற்கே பணி செய்கிறோம். பணி பாதுகாப்பும் இல்லை.
தற்போது 7.30 மணி முதல் மாலை 6.30 மணி வரை சாப்பிட செல்லக்கூட நேரமில்லாமல் வேலை செய்கிறோம். இலவச உணவுப்பொருள், ரூ.1000 நிவாரணத்தொகை, அதற்கு டோக்கன் வழங்குவது என ஊரடங்கில் எங்கள் பணி அளபரியது.
எங்கள் பணி நேரத்தை 8 மணி நேரமாக குறைந்தால் நலமாக இருக்கும். எவ்வளவுதான் சொன்னாலும் ரேஷன்கடைகளில் ஒரே நேரத்தில்தான் மக்கள் கூட்டமாககூடுகிறார்கள். சிலர் விதிமுறைகளை கடைபிடிக்கிறார்கள். சிலர் கடைபிடிப்பதில்லை. அவர்களை கட்டாயப்படுத்தி சொல்ல முடியவில்லை.
சமூக இடைவெளியை பற்றி விழிப்புணர்வு செய்யும் அரசு ரேஷன்கடைகளில் மக்கள் குவிவதை தடுக்கவோ, அவர்களை ஒழுங்குப்படுத்தவோ எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.டாஸ்மாக் கடைகளுக்கு கூட போலீஸார் பாதுகாப்பு போட்டு வரிசையை ஒழுங்குப்படுத்துகிறார்கள்.
டாஸ்மாக் கடைக்கு கொடுக்கும் முக்கியத்துவம்கூட ரேஷன் கடைகளுக்கு அரசு கொடுப்பதில்லை. ரேஷன் கடை ஊழியர்களையும் மதிப்பது இல்லை. ஒரே ஒரு முறை மட்டுமே முக கவசம் கொடுத்தார்கள்.
அதன்பிறகே நாங்களே கை காசை போட்டு முககவசத்தையும், சானிடைசரையும் வாங்குகிறோம். பொதுமக்கள் மூலம் எங்களுக்கு கரோனா எந்த நேரத்திலும் பரவும் அபாயம் உள்ளது. எங்கள் மூலம் எங்கள் குடும்பபத்திற்கு பரவும் அபாயம் உள்ளது. அரிசி தரமில்லாமல் இருப்பதற்கு கடைக்காரர்கள் தவறில்லை.
ஆனால், பொதுமக்களிடம் எங்களிடம் வந்து சண்டையிடுகிறார்கள். அரிசியை கொள்முதல் செய்கிற இடத்தில் தவறு நடக்கிறது. அரசு அறிவித்த சிறப்பு படி ஒரு நாளைக்கு ரூ.200, சில கூட்டுறவு சங்க பணியாளர்களுக்கு இன்னும் வழங்காமல் உள்ளனர். அதை வழங்க வேண்டும், ’’ என்றனர்.