Last Updated : 19 May, 2020 01:05 PM

Published : 19 May 2020 01:05 PM
Last Updated : 19 May 2020 01:05 PM

லாக்டவுன் கதைகள்: தண்டனை என்பது திருத்துவதற்கே, வலிப்பதற்கு அல்ல..

கண்ணெல்லாம் ஒரே எரிச்சல். தலை வேறு பாரமாக இருந்தது. இரவு முழுவதும் தூங்கவில்லை. அலாரம் இன்னும் அடிக்கவில்லை என்பதால், படுக்கையை விட்டு எழவில்லை. தலைக்கு மேல், கீச் கீச் என்று சத்தத்தை எழுப்பியவாறு சுழன்று கொண்டிருந்த மின்விசிறியைப் பார்த்துக்கொண்டே படுத்திருந்தேன். ராணி நேற்று செய்த வேலையை நினைத்தபோது மனது ஆறவில்லை. ஏன் இப்படிச் செய்தாள்? எட்டு வயதிலேயே இந்த எண்ணம் எப்படி அவளுக்கு வந்தது? ஒருவேளை நான்தான் அவளைச் சரியாக வளர்க்கவில்லையோ? கையைப் பிடிக்கப் பயந்து என் முந்தானையைப் பிடித்தபடி சுருண்டு படுத்திருக்கும் ராணியைப் பார்த்தேன். அவள் முகம் வீங்கியிருப்பது விடிவிளக்கு வெளிச்சத்தில் தெரிந்தது. மனசு கேட்காமல் அவள் கன்னத்தில் பதிந்திருந்த என் கைவிரல் தடங்களில் இதமாக வருடுவதன் மூலம் அவள் வலியைக் குறைக்க விரும்பினேன். ஆனால், அந்த விருப்பத்தை என் கோபம் வென்றது.

கண்ணை மறைத்த கோபம்

ஆறு மாதம் முன்பு என நினைக்கிறேன். அலுவலகத்தில் உடன் வேலை செய்யும் சுந்தர் அண்ணன் வீட்டுக்கு இவளையும் அழைத்துச் சென்றிருந்தேன். நானும் சுந்தர் அண்ணன் மனைவி நந்தினி அக்காவும் அடுப்படியில் பேசிக்கொண்டிருந்தபோது, அவர்களின் மகன் ஹரிஷ் உடன் ராணி விளையாடிக்கொண்டிருந்தாள். அவன் இவளைவிட ஒரு வயது இளையவன். திடீரென்று கதறி அழுத அவன் குரலைக் கேட்டு நாங்கள் ஓடி வந்தோம். அவன் கன்னத்தில் இவள் பிறாண்டி ரத்தம் வந்துகொண்டிருந்தது. நந்தினி அக்கா அழுதபடியே இவளைத் திட்டினார். நான் செய்வதறியாது வெறிகொண்டு இவளைக் கண் மண் தெரியாமல் அடித்தேன்.

சுந்தர் அண்ணன் அதட்டிய பிறகுதான் நான் அடிப்பதை நிறுத்தினேன். நான் அழுதபடி இவளை அழைத்துக்கொண்டு வீட்டுக்குக் கிளம்பினேன். “தண்டனை என்பது திருத்துவதற்குத்தான், வலிப்பதற்கு அல்ல” என்று என்னிடம் கண்டிப்பான குரலில் சுந்தர் அண்ணா சொன்னார். வீட்டுக்கு வந்ததும், ராணியிடம் பொறுமையாகக் கேட்டேன். அப்போதுதான் அவள் தொடையில் ஹரிஷ் கடித்ததால் ஏற்பட்ட காயத்தைக் காட்டினாள். என்னை நானே திட்டிக்கொண்டு, அவள் காயத்துக்கு மருந்து போட்டேன். இனி இவளை அடிக்கக் கூடாது என முடிவு செய்தேன். நேற்று வரை அடிக்காமலும் இருந்தேன்.

களவைக் கற்றுத் தந்த கவர்ச்சி

மூன்று நாட்களாக என்னிடம் பக்கத்து வீட்டில் வசிக்கும் அவளுடைய தோழி வைத்திருப்பதைப் போலப் பொம்மை மூடி போட்ட பென்சில் வேண்டும் என்று கேட்டுக்கொண்டு இருந்தாள். கரோனா காலம் என்பதால் கடை எதுவுமிருக்காது, அப்புறம் வாங்கித் தருகிறேன் என்று சொல்லிப் பார்த்தேன். அவள் விடுவதாக இல்லை. வேறு வழி இல்லாமல், காய்கறி வாங்கச் செல்லும்போது அவளையும் அழைத்துச் சென்றேன். ஒரே ஒரு ஃபேன்ஸி ஸ்டோர்தான் இருந்தது. அந்தக் கடையில் விசாரித்தால் அநியாய விலை சொன்னார்கள். மாதக் கடைசி வேறு. போதாக்குறைக்குப் போன மாதம் பாதி சம்பளம் மட்டுமே கொடுத்தார்கள். கையில் காசும் இல்லை. காசு இருந்தாலும் அதை வாங்கிக் கொடுக்கும் எண்ணமும் இல்லை. அதை வாங்கிக் கொடுத்தால்தான் வீட்டுக்கு வருவேன் என்று அடம் பிடித்து அழுதாள். ஒரு வழியாகச் சமாதானம் செய்து வீட்டுக்கு அழைத்து வந்தேன்.

சூப்பர் மார்க்கெட்டில் வேலை என்பதால், இந்தக் கரோனா காலத்திலும் நான் தினமும் அலுவலகம் செல்ல வேண்டும். நேற்று அலுவலகத்தில் வேலை முடிய எட்டு மணி ஆகிவிட்டது. வீட்டில் என் அம்மாவுடன் என்ன செய்துகொண்டு இருக்கிறாளோ என்ற பதைபதைப்போடு வீட்டுக்கு வந்தேன். என்னைப் பார்த்தவுடன் எதையோ பையில் வேகமாக மறைத்தாள். என்னது அது என்று கேட்டபோது, ‘ஒன்றும் இல்லை’ என்று பதற்றமாகச் சொன்னாள். பையைப் பிடுங்கிப் பார்த்தேன். அதனுள் அவள் விரும்பிய பென்சில் இருந்தது. ‘அது எப்படி வந்தது?’ எனக் கேட்டேன். பதில் சொல்லாமல் நின்றாள். கன்னத்தில் ஓங்கி ஒரு அறை விட்டு, “சொல்லப் போறியா இல்லை சூடு வைக்கவா” என்று கேட்டேன். தன் தோழிக்குத் தெரியாமல் அவளிடமிருந்து எடுத்துக்கொண்டு வந்ததாக அழுதபடியே சொன்னாள்.

எனக்குத் தூக்கிவாரிப் போட்டது. கோபம் தலைக்கேற அம்மா தடுத்தும் கைகள் வலிக்கும்வரை அவளை அடித்தேன். ஒரு பென்சிலுக்குப் போய் இப்படி அடிக்கிறாயே என்று அம்மா அவளைக் காப்பாற்ற முனைந்தார். அம்மாவிடமும் எரிந்து விழுந்தேன். இவளுக்கு எங்கிருந்து வந்தது இந்தப் புத்தி என்று கேட்டபடி மீண்டும் அவளை அடிக்கப் பாய்ந்தேன். அம்மா குறுக்கே புகுந்து தடுத்ததால் என் தலையில் அடித்துக்கொண்டு அழுதேன்.

அழுதபடி நின்ற அவளைத் தன் மடியில் படுக்கவைத்தபடி, “சின்னப் பிள்ளைக்கு என்னடி தெரியும்? இது தப்புன்னு எடுத்துச் சொன்னா அவ புரிஞ்சுக்கப்போறா. அதை விட்டுட்டு இப்படி நடந்துக்கிறியே” என்று அம்மா என்னைத் திட்டினார். “எட்டு வயசு ஆகிடுச்சி. திருடுவது தப்புன்னு கூடவா தெரியாது? உன்னால்தான் அவ இப்படிச் சீரழிஞ்சு போறா” என்று பதிலுக்குக் கத்தினேன்.

உறங்கவிடாத நினைவுகள்

எப்போது அவர்கள் தூங்கினார்கள் என்று தெரியவில்லை. நான் கண்களை மூடியபடி இரவு முழுவதும் விழித்திருந்தேன். ஒருவேளை அம்மா சொல்வது போன்று ‘நான்தான் இந்தச் சின்ன விஷயத்தைப் பெரிது படுத்துகிறேனோ’ எனத் தோன்றியது.

எத்தனை முறை இவள் அப்பாவை நம்பி அவர் முதலாளி லட்சக்கணக்கில் பணத்தைக் கொடுத்து அனுப்பியுள்ளார். தன் தகப்பனாரின் மருத்துவச் செலவுக்கு வழியில்லாமல் கஷ்டப்பட்டபோதுகூட ஒரு முறையாவது அந்த மனுஷன் சபலப்பட்டிருப்பாரா? அவர் மறைவுக்குப் பிறகு, அந்த அலுவலகத்தின் வரவு செலவு பொறுப்பை என்னிடம்தானே ஒப்படைத்திருக்கிறார்கள்? நானும் பணத்தைக் கையாள்வதில் நேர்மையாகத்தானே இருக்கிறேன்? இவள் மட்டும் எப்படி இப்படி ஆனாள்?

குழந்தை வெளிப்பட்ட தருணம்

அம்மா சொன்ன மாதிரி இது ஒன்றும் சின்ன விஷயம் இல்லை. ஆனால், எப்படி இவளுக்குப் புரியவைப்பது? அடிப்பது பொறுப்பிலிருந்து தப்பித்துக்கொள்ளும் ஒருவித இயலாமை. தாங்க முடியாதவரை வலிக்குப் பயப்படுவாள், வலி பழகியபின் எதற்கும் துணிந்தவள் ஆவாள். சுந்தர் அண்ணன் சொன்னது மாதிரி இவளது தவறை எடுத்துச் சொல்லி உணர்த்த வேண்டும். நல்ல பிள்ளைதான், எடுத்துச் சொன்னால் புரிந்துகொள்வாள் என்றெல்லாம் நினைத்துக்கொண்டிருக்கும்போது அலாரம் அடித்தது. மனதும் கொஞ்சம் தெளிவடைந்ததுபோல் இருந்தது.

அவளது முகத்தை வருடிக் கொடுத்துவிட்டு சமையலறைக்குச் சென்றேன். யாரும் சாப்பிடாததால் அம்மா நேற்று சுட்ட தோசைகள் அங்கே காய்ந்துகொண்டிருந்தன. காபி போட்டபின் இருவரையும் எழுப்பினேன். முகத்தைத் திருப்பிக்கொண்ட அம்மாவின் அருகில் காபியை வைத்தேன். இவள் என்னைப் பார்த்துப் பயந்தபடி அடியை எதிர்பார்த்து அமர்ந்திருந்தாள். நான் மெதுவாக அவள் தலையைக் கோதி, இடது கையால் கன்னத்தை வருடவும் அடக்கி வைத்திருந்த அழுகையைக் கொட்ட ஆரம்பித்தாள்.

“இனிமேல் எது வேண்டுமானாலும் அம்மாவிடம் கேள், அம்மாவுக்கு எப்போது முடியுமோ அப்போது வாங்கித் தருவேன்” என்றேன். பக்கத்து வீட்டுக்குச் சென்று ‘இது கீழே கிடந்தது’ என்று சொல்லி அந்த பென்சிலை அவள் தோழியிடம் கொடுத்துவிடச் சொன்னேன். “நான் உண்மையைச் சொல்லியே கொடுத்துடறேன்மா” என்று அழுதபடியே சொன்னாள். கண்களை நிறைத்த கண்ணீரை மறைப்பதற்காக எழுந்து ஜன்னலைத் திறந்தேன். முகத்தை வருடிய குளிர்ந்த காற்றில் மனசும் லேசாக மிதப்பது போல் இருந்தது.

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x