Last Updated : 19 May, 2020 10:03 AM

 

Published : 19 May 2020 10:03 AM
Last Updated : 19 May 2020 10:03 AM

ஜோஸே சரமாகு: கடவுளின் ஸ்தானத்திலிருந்து...

கரோனா கொள்ளைநோயின் பரவலுக்குப் பிறகு சில எழுத்தாளர்கள் மறுவாசிப்பு செய்யப்படுகிறார்கள். சிலருக்கு மவுசு இன்னும் கூடியிருக்கிறது. இவர்கள் தங்கள் படைப்புகளில் எங்காவது கொள்ளைநோயைப் பற்றிப் பேசியவர்கள். ஆல்பெர் காம்யு, தாமஸ் மன் வரிசையில் ஜோஸே சரமாகுவையும் பலரும் படிக்க ஆரம்பித்திருக்கிறார்கள். இவரது ‘பிளைன்ட்னஸ்’ நாவலில் திடீரென்று ஒரு நாட்டில் எல்லோருக்கும் கண் தெரியாமல் போய்விடும். அது கொள்ளைநோயாய்ப் பரவும். இதனூடே மானுட மனதில் ஆழம்வரை சென்றுவிட்டு வந்திருப்பார் சரமாகு.

போர்ச்சுகலில் 1922-ல் பிறந்த சரமாகு இளம் வயதிலேயே தீவிர கம்யூனிஸ்ட். 24 வயதில் அவர் தனது முதல் நாவலை வெளியிட்டார். இலக்கிய உலகில் அந்த நாவலுக்கு எந்த வரவேற்பும் கிடைக்கவில்லை. அதற்கு அடுத்து 19 ஆண்டுகள் அவர் நாவலே எழுதவில்லை.

இதற்கிடையே மெக்கானிக், பத்திரிகையாளர், எடிட்டர் என்று பல வேலைகளைப் பார்த்தார். 1982-ல் அவர் எழுதிய ‘Memorial do Convento’ என்ற நாவல் ஆங்கிலத்தில் ‘Balthasar and Blimunda’ என்று 1987-ல் வெளியானது. அதற்குப் பிறகு அவருக்கு உலகளாவிய கவனம் கிடைக்க ஆரம்பித்தது.

1991-ல் அவர் எழுதிய 'The Gospel According to Jesus Christ' என்ற நாவலை ஜரோப்பிய இலக்கிய விருதுக்குப் போட்டியிட அனுமதி மறுத்த போர்ச்சுகீசிய அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதத்தில் நாட்டை விட்டுத் தன் மனைவியுடன் வெளியேறி கனரி தீவில் வசித்துவந்தார். 1998-ல் அவருக்கு நோபல் பரிசு கிடைத்தது.

சரமாகு தன்னுடைய நாவல்களில் காட்சியையோ கதாபாத்திரங்களையோ அதனதன் போக்கில் போக விட்டு ஒளிப்பதிவாளர் போன்று பதிவுசெய்யும் கதைசொல்லி அல்ல. கதையின் கடிவாளம் அவருடைய கையில் இருக்கும். தோற்பாவைக் கூத்துக் கலைஞன்போல கதாபாத்திரங்களை ஆட விட்டு அவர்தான் கதையைச் சொல்லுவார்.

உதாரணத்துக்குத் தமிழில் அசோகமித்திரனை எடுத்துக்கொண்டால் அவர் கதையின் போக்கில் ஆசிரியனுடைய குரலை வெளியிடவே மாட்டார். காட்சிகள், கதாபாத்திரங்கள் மட்டும்தான் பேசும். ஆனால், புதுமைப்பித்தன் அப்படியல்ல; பெரும்பாலும் தான்தான் கதையை வழிநடத்திச்செல்வார். அதுபோலத்தான் சரமாகுவும். ஆனால், புதுமைப்பித்தன் கதைகளில் புதுமைப்பித்தன் கதாசிரியனின் ஸ்தானத்தைதான் எடுத்துக்கொண்டவர் என்றால், சரமாகுவோ கடவுளின் ஸ்தானத்தை எடுத்துக்கொண்டவர். அவர் கண்களிலிருந்து எதுவும் தப்பிக்காது; யாரும் தப்பிக்கவும் முடியாது. ஒரு நாய் என்ன நினைக்கிறது

என்பதையும் அந்த நாயின் புது முதலாளி என்ன நினைக்கிறார் என்பதையும் ஒரே சமயத்தில் பார்க்கும் கடவுளின் ஸ்தானம் அவருடையது. 'குகை' (The Cave) நாவலில், அந்த நாவலின் நாயகனான ஒரு கிழட்டுக் குயவனின் மகளும் அவளின் கணவரும் உடலுறவுகொண்ட குறிப்பிட்ட அந்தத் தருணத்தைச் சொல்லி அவளுடைய வயிற்றில் கரு அந்த நொடிதான் உருவானது என்று துல்லியமாகச் சொல்வார். நான் படித்த அவருடைய பிற நாவல்களிலும் (The Gospel According to Jesus Christ, All the Names, Balthasar and Blimunda) அப்படித்தான்.

அழிந்துகொண்டிருக்கும் ஒரு இலக்கிய வடிவத்தின் கடைசிப் போராளிகளில் ஒருவர் என்று பிரபல விமர்சகரான ஹெரால்ட் ப்ளூம் இவரைப் பற்றி ஒருமுறை சொன்னார். அப்படி என்ன அதிசயம் இவருடைய எழுத்தில் என்றால், அதிசயம்தான் இவரது எழுத்து என்று சொல்லலாம். வரலாற்றைப் பின்புலமாக வைத்துக்கொண்டு மாய யதார்த்தவாதக் கதை சொல்வது (Balthasar and Blimunda); இயேசுவே தனது சுவிசேஷத்தைச் சொல்வதுபோல எழுதுவது (The Gospel According to Jesus Christ); பிறப்பு, இறப்பைப் பதிவு செய்யும் பதிவகத்தில் உள்ள ஒரு ஊழியன் இறந்துபோன ஒரு பெண்ணைப் பற்றிய தகவல்களை எந்தவிதக் காரணமுமின்றிச் சேமிக்க ஆரம்பித்து பிறகு வெறித்தனமாக அந்தச் செயலில் ஈடுபட அதை அவனுக்கே தெரியாமல் பதிவாளர் (இது கடவுளாகவும் இருக்கலாம் அல்லது சரமாகுவாகவும் இருக்கலாம்) கண்காணித்துவருவது (All the Names); திடீரென்று மரணம் விடுமுறை எடுத்துக்கொள்வது (Death at Intervals) ; திடீரென்று ஒரு நாட்டிலுள்ளோருக்குக் கண் தெரியாமல் போய்விடுவது (Blindness) என்று அவரது கதைகள் எல்லாமே யதார்த்த தளத்திலிருந்து விலகி ஒரு அதீத நிலையிலிருந்து எழுதப்பட்டவை.

இதில் மிகவும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியது அவரின் நடை; தனித்துவமான, அற்புதமான ஒரு நடை. முற்றுப்புள்ளியே இல்லாமல் நீண்டுகொண்டே செல்லும் வாக்கியங்களை, பாசாங்கு செய்யாமல், வெகு இயல்பாகவும் படிப்பதற்கு ஆசையூட்டும் விதத்திலும் எழுதிக்கொண்டு செல்பவர் சரமாகு. இரண்டு பேர் பேசிக்கொண்டால் யார் பேசுகிறார்கள் என்பதையே நாம் கண்டுபிடிப்பது மிகவும் சிரமம். இருவருடைய பேச்சையும் தனித்தனியாகப் பிரிக்காமல் சேர்த்தே கொடுப்பார். ஒரு காற்புள்ளியை வைத்துதான் நாம் தெரிந்துகொள்ள வேண்டும். எனவே, உண்மையில் கொஞ்சம் நமது உழைப்பைக் கோரும் எழுத்து என்பதுடன் அப்படிப்பட்ட உழைப்பைச் செலுத்திப் படித்தால் அற்புதமான அனுபவத்தைத் தரும் எழுத்து சரமாகுவுடையது.

இன்னும் பலமுறை படித்துப் பார்க்க வேண்டும் என்ற விருப்பத்தோடுதான் ஒவ்வொரு முறையும் நான் சரமாகுவின் நாவலை ஆரம்பிக்கிறேன் அல்லது முடிக்கிறேன். அவருடைய எல்லா எழுத்துகளையும் படித்துப் பார்க்க வேண்டும் என்பது என்னுடைய ஆசை. நாவல் எழுத வேண்டும் என்ற எனது விருப்பத்துக்கு சரமாகுவைப் போன்ற எழுத்தாளர்கள்தான் எப்போதும் தடையாக இருக்கிறார்கள். ஒவ்வொரு விஷயத்துக்கும் சரமாகு மேற்கொண்ட உழைப்பு என்னைப் பிரமிக்க வைக்கும். ஒரு லாரியை எடுத்துக்கொண்டால் அதைப் பற்றிச் சொல்ல எவ்வளவோ இருக்கிறது அவருக்கு; பானைகள் செய்யும் தொழிலைப் பற்றியும் அப்படியே (The Cave).

பல சமயங்களில் அவர் கொடுக்கும் பட்டியல் நான்கைந்து பக்கங்களுக்கு நீளும். கல்லறைகளைப் பற்றி 'All the Names' நாவலில் வரும் பட்டியல்; இயேசுவுக்குப் பிறகு அவருடைய சீடர்களும் அவரைப் பின்பற்றுவோரும் எப்படிக் கொல்லப்படப்போகிறார்கள் என்று இயேசுவுக்குக் கடவுள் தரும் பட்டியல் என்று சொல்லிக்கொண்டே போகலாம். இப்படிப்பட்ட உழைப்பும் கற்பனைத் திறனும் ஒன்றுசேர்ந்தால்தான் ஒருவர் பெரிய நாவலாசிரியராக ஆக முடியும். நமது உழைப்பு பூஜ்ஜியம்; கற்பனைத் திறனோ பல நூற்றாண்டுகள் பின்தங்கிப்போன ஒன்று. இந்தச் சூழலில் எங்கிருந்து மகத்தான நாவல்களைப் படைப்பது என்று மலைப்பாக இருக்கிறது எனக்கு!

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x