Published : 18 May 2020 04:28 PM
Last Updated : 18 May 2020 04:28 PM

தனிமனித அறத்தை அறுத்தாலேயொழிய “தர்ம சங்கடம்” விடாது: இதிகாச உதாரணங்களுடன் நீதியரசரின் பகிர்வு

நீதியரசர் ஆனந்த் வெங்கடேஷ்.

என் வீட்டிற்கு வந்த ஒரு நண்பர் தனது மனைவியையும் தாயையும் கவனித்துக் கொள்வதில் வரும் சில தர்ம சங்கடமான நெருக்கடிகளை என்னிடம் விளக்கிக் கொண்டிருந்தார். இது பொதுவாக பல குடும்பங்களில் ஏற்படும் சர்ச்சையாக எனக்குப் பட்டதால் நான் அவர் கூறிய விஷயத்தில் பெரிதாக கவனம் செலுத்தவில்லை. ஆனால் அவர் கூறிய ஒரு வார்த்தை என் காதில் தொடர்ந்து ரீங்காரம் செய்துகொண்டிருந்தது- “தர்ம சங்கடம்!”.

மனைவியின் நலத்தில் அக்கறை காட்டுவது தர்மம் என்று சொன்னால், தாய்க்குத் தக்க கடமைகளை ஆற்றுவது என்பதும் தர்மமே. பல நேரங்களில் இவற்றில் எதைக் கைக்கொள்வது, எதைத் தள்ளுவது என்பதில் நமக்கு பெரும் தடுமாற்றம் ஏற்படுகிறது. இப்படி இரண்டு தர்மங்களிடையே சிக்கி தவிப்பதைத்தான் “தர்ம சங்கடம்” என்று உலகம் கூறுகிறதோ?

இதுகுறித்து நாம் ஆழ்ந்து சிந்திக்க முற்பட்டோம் எனில், வள்ளுவனை மீறி நமது சிந்தனையைச் செலுத்துவது இயலாத ஒன்று. அறத்துப் பாலில், “செய்நன்றி அறிதல்” என்னும் அதிகாரமும் “நடுவு நிலைமை” என்னும் அதிகாரமும் எனது சிந்தையை உரசிச் சென்றன. உடனடியாக திருக்குறளை எடுத்து, இவ்விரு அதிகாரங்களைப் புரட்டினேன். அவ்வாறு படித்ததன் விளைவாக என் எண்ணத்தில் துளிர்த்த சில சிந்தனைகளை எழுத எத்தனித்தேன். அதன் விளைவே பின் வரும் பத்திகள்.

“செய்நன்றி அறிதல்” என்ற அதிகாரத்தைப் படித்தபோது, அது தனி மனித அறத்தை எடுத்துரைக்கிறது எனப் புரிந்துகொண்டேன். அடுத்து, என் கவனத்தை “நடுவு நிலைமை” அதிகாரத்தில் செலுத்தியபோது, அது சமுதாய அறம் குறித்துப் பேசுகிறது என்று புரிந்துகொண்டேன். இவ்விரு அறங்களுள், சில சமயங்களில், ஓர் அறத்தினைக் கடைப்பிடிக்கும் வண்ணம் செயல்படும்பொழுது, மற்றொன்றைக் கடைப்பிடிக்க இயலாமல் போகின்றது. அதற்காகத்தானோ என்னவோ வள்ளுவன், தனிமனித அறத்தைப் பற்றி முதலில் கூறி, அதன் பின்னர் சமுதாய அறத்தை வைத்தானோ என்ற எண்ணம் பளிச்சிட்டது.

இவ்விரண்டு அதிகாரங்களையும் ஒருசேரப் படித்தபொழுது எனக்குள் ஒரு ஐயம் ஏற்பட்டது. “நடுவு நிலைமை” என்னும் சமுதாய அறத்தினைக் கடைப்பிடிக்கும் தருணத்தில், “செய்நன்றி அறிதல்” என்னும் தனிமனித அறம் அதற்குத் தடையாக வருமாயின், செய்நன்றி அறத்தினைப் பின் தள்ளிவிட்டு, நடுவு நிலைமையை தூக்கிப் பிடிப்பதுதான் தர்மத்திற்கு உகந்த செயலாகுமோ என்ற ஆழமான எண்ணம் என்னை ஆட்கொண்டது. வான்மறை தந்த வள்ளுவன் அவற்றை வாழ்வியல் தத்துவங்களாக நமக்கு எடுத்துரைக்கிறான்.

இச்சிந்தனையை தீர்க்கமாகப் புரிந்துகொள்ள முனைந்தபொழுது, காவியப் புலவன் கம்பன் என் எண்ணத்தில் நுழைந்தான். இவ்விரண்டு அறங்களையும், கம்ப ராமாயணம் என்னும் காப்பியத்தில், இரண்டு பாத்திரங்களின் வாயிலாக நம்மைச் சிந்திக்க வைக்கிறான் கம்பன். இவ்விரண்டு கதாபாத்திரங்களையும் நாம் உற்று நோக்கினால், வள்ளுவன் நம் முன் வைத்த “நடுவு நிலைமை”, “செய்நன்றி அறிதல்” என்னும் இரண்டு வாழ்வியல் தத்துவங்களைத் தெளிவாகப் புரிந்துகொள்ளும் வாய்ப்பு நமக்குக் கிடைக்கிறது. கவிச்சக்ரவர்த்தி கம்பன் அவ்விரண்டு தத்துவங்களின் ஆளுமைகளாக, இரு சகோதரர்களைப் படைத்து தன் காப்பிய உலகத்தில் உலா வரச் செய்கிறான்.

நீதியரசர் ஆனந்த் வெங்கடேஷ்

கும்பகர்ணனின் பாத்திரம் செய்நன்றி அறிதலின் வடிவம். வீடணனோ நடுவு நிலைமை என்னும் அறத்தின் முழுமை பெற்ற உருவம். யுத்த காண்டத்தில், இவ்விருவரும் போர்க்களத்தில் ஒருவரை ஒருவர் சந்தித்து உரையாடும் காட்சியில், “செய்நன்றி அறிதல்” என்னும் தனி மனித அறம், “நடுவு நிலைமை” என்னும் சமுதாய அறத்தினோடு மோதுவதை கம்பன் நமக்குக் காட்சிப்படுத்திக் காட்டுகிறான். கும்பகர்ணனும், வீடணனும், அண்ணன் ராவணன் மீதும் அறத்தின் மீதும் அழியாப் பற்று கொண்டவர்கள். கும்பகர்ணன் தன் அண்ணன் மீது கொண்ட அளவில்லா அன்பின் வசம் அகப்பட்டு ராவணனையே சுற்றிச் சுற்றி வருகிறான். அவனது அச்செய்கை “செய்நன்றி அறிதல்” என்ற அறத்திற்கு சிறந்த எடுத்துக்காட்டு.

வீடணனோ, “நடுவு நிலைமை” என்னும் அறத்தை தூக்கி நிறுத்தும் அவனது முயற்சியில், “செய்நன்றி அறிதல்” என்ற அறத்தைப் பின்தூக்கி வைத்துவிடுகிறான். இதன் விளைவே அவன் தூய்மையான அற வடிவம் கொண்ட ராமனிடம் சென்றடையக் காரணமாய் அமைகிறது. இருவரின் அறச் செயல்களுமே காப்பியத்தில் சமமாகப் போற்றப் படுவதால் நம்மிடையே ஒரு சிறு குழப்பம் ஏற்படுகின்றது. இந்தச் சிக்கலை அவிழ்க்கும் விதமாக, போர்க்களத்தில் கும்பகர்ணனுக்கும் வீடணனுக்கும் இடையே நடக்கும் சம்பாஷணையை கம்பன் நமக்குப் படைத்துக் காட்டுகிறான்.

ராமன் கும்பகர்ணனைப் பார்த்த மாத்திரத்தில் அவனை அழிப்பதைக் காட்டிலும் அறத்தின் பக்கம் அவனை அழைப்பதே நல்லது என எண்ணுகிறான். எனவே வீடணனை அனுப்பி கும்பகர்ணனிடம் பேசச் சொல்கிறான். வீடணனைப் பார்த்த மாத்திரத்தில், அவன் மீண்டும் ராவணனை நாடி வந்துவிட்டானோ என்று எண்ணிய கும்பகர்ணன், அவனைப் பார்த்து “உன் பக்கம் ராமனும் அவன் அன்புத் தம்பி இலக்குவனும் நிற்கின்றனர். ஆனால் என் பக்கம் எமன் நிற்கின்றான். பழி பொருந்திய அரக்கர்கள் அத்தனை பேரும் அழிந்த பின்னர், நம் குலத்திற்கு இறுதிக் கடன் செய்ய நீ ஒருவன் உள்ளாய் என அமைதி கொண்டிருந்தேன். இப்பொழுது ஏன் இங்கே வந்தாய்?” என்று வினவுகிறான்.

வீடணன், கும்பகர்ணனை நோக்கி, “உனக்கு ராமன் அபயம் அளிப்பான்” என்றும் “எனக்குக் கொடுக்கும் ஆட்சிப் பொறுப்பை நான் உனக்குக் கொடுத்து விடுகிறேன். நீ எங்கள் பக்கம் வந்து சேர்ந்துவிடு” என்றும் கூறுகிறான். கும்பகர்ணன் வீடணனைப் பார்த்து, “என்னால் ராவணனை அறத்தின்வழி செலுத்த முடியவில்லை. ஆனால், அவன் என்னை எடுத்து வளர்த்தவன். இன்று போர்க்கோலம் பூண்டு நிற்கும் அவனுக்கு என் உயிரைக் கொடுப்பேனே அன்றி, ஒருக்காலும் அப்பக்கம் நின்று அவனை எதிர்த்துப் போர் புரியமாட்டேன். என் துயரைத் தவிர்க்க எண்ணினாய் என்றால், நீ இக்கணமே ராமனிடம் சென்றுவிடு. தர்மத்தின் வழி நிற்பது உனக்குத் தக்கது. ராவணனின் பக்கம் நின்று, போர் புரிந்து அவன் உயிர் பிரிவதற்கு முன்பு நான் இறப்பதுதான் எனக்குப் புகழ். அதுவே, என் செஞ்சோற்றுக் கடனைத் தீர்ப்பதற்கான முறை” என்று கூறுகிறான்.

இக்காட்சியில், கும்பகர்ணன் வீடணனிடம் மிகத் தெளிவாக “செய்நன்றி அறிதல்” என்னும் தனி மனித அறத்தைக் கைவிட்டு “நடுவு நிலைமை” என்னும் சமுதாய அறத்தின் வழி ராமனைச் சேர்ந்த வீடணனின் செயல் வீடணனுக்குத் தக்கது என்று ஒப்புக்கொள்கிறான். தனது மரணமோ பழியோடு கூடிய மரணம் என்று தன் விளக்கம் அளிக்கிறான்.

நாம் மகாபாரதத்தை நினைவு கொண்டோமே! ஆனால், கர்ணனும், கும்பகர்ணனின் நிலையில் தான் இருந்தான். கர்ணன், தான தர்மத்தின் அடையாளம். ஆனால் தனிமனித அறமான செய்நன்றி அறிதலால் அவன் துரியோதனனை விட்டு விலக மறுத்தான். கர்ணனும், அவன் பழியோடு கூடிய மரணத்தைத் தழுவுகிறான் என்பது நன்கு தெரிந்தே, தான் பற்றிய “செய்நன்றி அறிதல்” என்னும் அறத்தினை விட்டு வழுவாமல் இருந்தான்.

மேற்சொன்ன பாத்திரங்கள், “தர்ம சங்கடம்” என்பது என்ன என்பதைத் தெளிவாக நமக்கு விளங்கச் செய்கின்றன. எவன் ஒருவன் ஒரு சமுதாயத்திற்குத் தலைவனாகப் பொறுப்பு ஏற்கிறானோ அவன் “செய்நன்றி அறிதல்” என்னும் தனி மனித அறத்தைக் கைவிட்டு சமுதாய அறமாகிய “நடுவு நிலமையை”க் கைக்கொள்ளுதல் மிகவும் அவசியமாகிறது.

இதே தர்மம் ஒரு நீதிபதிக்கும் பொருந்தும். அதனால்தான் நீதிபதி என்னும் பொறுப்பினை ஏற்கும் ஒவ்வொருவரும் அப்பொறுப்பினை ஏற்ற மாத்திரத்தில் ஒரு தவ வாழ்க்கையை வாழத் தயாராக வேண்டும்.

சுதந்திரப் போராட்டத்தின்போது, சிறையில் அடைக்கப்பட்ட விடுதலை வீரர்களுக்கு வழங்கப்பட்ட தண்ணீரின் அளவு போதவில்லை. சில போராட்ட வீரர்கள் அவர்களுக்கு வழங்கப்படும் தண்ணீரின் அளவு அதிகரிக்கப்படவேண்டும் என்று வெள்ளையர்களிடம் வேண்டினர். இதனை அறிந்த காந்தியடிகள் அதனை உடனே தடுத்து நிறுத்தினார். அதற்காக அவர் கூறிய காரணம் நாம் ஒவ்வொருவரும் நெஞ்சில் நிறுத்தி வைத்துக்கொள்ள வேண்டிய பாடமாகும். அவர் அதனை எதிக்கும்போது, “அரசாங்கத்திடம் சலுகையாக நீங்கள் ஒரு சொட்டுத் தண்ணீரைப் பெற்றால் கூட அவர்களுக்குக் கடமைப்பட்டவர்களாக ஆகின்றீர்கள். அதன் பின்னர் அவர்களை எதிர்க்கும்போது ‘செய்நன்றி அறிதல்’ என்னும் அறம் உங்கள் கைகளைக் கட்டிப்போட்டு விடும்” என்று எச்சரிக்கை செய்கிறார்.

அரசாங்கத்தில் தலைமைப் பொறுப்பு ஏற்கும் ஒருவரோ அல்லது நீதி வழங்கும் பொறுப்பில் அமரும் ஒரு நீதிபதியோ மேற்சொன்ன காந்தியடிகளின் வேத வாக்கியத்தை நெஞ்சில் நிறுத்திக்கொள்ள வேண்டும். இப்பொறுப்பில் இருக்கும்போது ஒரு சிறு சலுகைகளைப் பெற்றால் கூட, அந்த அளவிற்கு அச்செய் நன்றி உணர்வு அல்லது அறம், நடுவு நிலைமை அறத்தினைச் செயல்படுத்தும்போது குறுக்கே வந்து தர்ம சங்கடத்தினை ஏற்படுத்தும்.

செய்நன்றி அறிதலும் அறமே. அதனைக் கடைப்பிடிப்பது தவறன்று. ஆனால், எதேனும் ஒரு தருணத்தில், “செய்நன்றி அறிதல்” என்னும் அறத்தை கடைப்பிடிக்கும் பொருட்டு தர்மத்தின் வழியிலிருந்து விலகும் நிலை வருமாயின், அத்தருணத்தில், தர்மத்தின் வழியிலிருந்து வழுவாது நிற்பதுதான் அறத்திற்குப் பெருமை சேர்க்கும். “செய்நன்றி அறிதல்” என்பது உறவுகளைச் சார்ந்தது. “நடுவு நிலைமை” என்பது உறவுகளைக் கடந்து தர்மத்தின் வழி நிற்க வழிகாட்டுவது.

நீதி வழங்கும் பொறுப்பில் இருக்கும் ஒவ்வொருவரும், நடுவு நிலைமையைக் காக்கும் ஸ்திதப் பிரக்ஞர்களாக இருக்கக் கடமைப்பட்டவர்கள். இப்பொறுப்பில் இருப்பவர்கள் வீடணனைப் போல் “நடுவு நிலைமை” என்னும் வாளை எடுத்து “செய்நன்றி அறிதல்” என்னும் தனிமனித அறத்தை அறுத்தாலேயொழிய இத்“தர்ம சங்கடம்” அவர்களை விடாது. அது தொடர்ந்து வந்து குழப்பத்தையும், அமைதி இன்மையையும் ஏற்படுத்தும் என்பதில் சிறிதளவும் ஐயம் இல்லை.

-நீதியரசர் ந. ஆனந்த் வெங்கடேஷ்
நீதிபதி, சென்னை உயர் நீதிமன்றம்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x