Published : 18 May 2020 15:43 pm

Updated : 18 May 2020 15:43 pm

 

Published : 18 May 2020 03:43 PM
Last Updated : 18 May 2020 03:43 PM

’’ ’அண்ணே அண்ணே... சிப்பாயண்ணே’ பாட்டுக்கு நடிச்சதை மறக்கவேமுடியாது!’’ - பழம்பெரும் நடிகரின் ‘கோழி கூவுது’ நினைவுகள்

crparthiban-kozhikoovudhu

’’நல்ல வாய்ப்பு கிடைச்சதை, சரியா நடிச்சுப் பயன்படுத்திக்கிட்டேன். ஜாக்ஸன் துரை, அப்படிப்பட்ட கேரக்டர். இத்தனை வருஷம் கழிச்சும், இன்றைக்கும் அந்தப் படம் பேசப்படுதுன்னா, கேரக்டர் பேசப்படுதுன்னா, ரொம்ப சந்தோஷமாவும் பெருமையாவும் இருக்கு!’’ என்றார் பழம்பெரும் நடிகர் சி.ஆர்.பார்த்திபன்.


120 படங்களில் நடித்திருக்கிறார். எம்ஜிஆர், சிவாஜி, ஜெமினி கணேசன் தொடங்கி ரஜினி, கமல், பிரபு என்றும் சேர்ந்து நடித்திருக்கிறார்.
தன் அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார் சி.ஆர்.பார்த்திபன்.‘இந்து தமிழ் திசை’யின் 'RewindWithRamji' நிகழ்ச்சியில், பழம்பெரும் நடிகர் சி.ஆர்.பார்த்திபன் அளித்த வீடியோ பேட்டியின் எழுத்தாக்கம் இது:
’’நான் யாரிடமும் சான்ஸ் கேட்டுப் போனதில்லை. வரும் கதாபாத்திரத்தை நடித்தேன். சந்திரபாபு மிகப்பெரிய நடிகர். அன்று தொடங்கி இன்று வரைக்கும், எனக்கு மிகவும் பிடித்த நடிகர் சந்திரபாபு.


சிவாஜி சாரும் சந்திரபாபுவும் சேர்ந்து நடிக்கும்போது பார்க்கவேண்டும். இருவருக்கும் நீயா நானா என்று போட்டியே இருக்கும். நடிப்பில் போட்டிபோட்டுக்கொள்வார்கள். ஆனால் அதையெல்லாம் மீறி ஜெயிச்சார் சிவாஜி சார்.
‘பாலூட்டி வளர்த்த கிளி’ பாட்டுக்கும் சரி, ‘வியட்நாம் வீடு’ படத்தில் உதவாத பசங்க, உருகும் மனைவியுடன் நடிக்கும் போதும் சரி, ‘தென்னையைப் பெத்தா இளநீரு, பிள்ளையைப் பெத்தா கண்ணீரு’ என்று நடிக்கும் போதும் சரி, தன் தனித்த நடிப்பால் நம்மைப் பிரமிக்கவைத்துவிடும் ஆற்றல் சிவாஜி சாருக்கு உண்டு. அதேபோல், கண்ணதாசனின் வரிகள் தத்துவம் நிறைந்தவை. இந்த இரண்டும் சேர்ந்து, நம்மைக் கலங்கடித்துவிட்டன. சிவாஜி சாருடன் 16 படங்கள் நடித்திருக்கிறேன் என்பது பெருமை எனக்கு.


பின்னர், பல வருடங்களுக்குப் பிறகு சிவாஜி சார் என்னைக் கூப்பிட்டுவிட்டார். போனேன். ‘நீயும் நானும் பல படம் சேர்ந்து பண்ணிருக்கோம். உன் கூட பண்ணின ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’ படம்தான் வெளிநாட்டு விருதுகளையெல்லாம் வாங்கிக் கொடுத்துச்சு. பிரபு சில படங்கள்ல நடிச்சிருந்தாலும், உங்களோட சேர்ந்து நடிச்ச ‘கோழிகூவுது’ படம்தான் வெற்றிப்படமா அமைஞ்சிது. ரொம்ப சந்தோஷமா இருக்கு’’ன்னு சந்தோஷப்பட்டுச் சொன்னார். இதுவொரு நல்ல, மறக்கமுடியாத அனுபவம்.
இப்படித்தான் இன்னொரு சம்பவம்.


வேலூர்லேருந்து சென்னைக்கு பஸ்ல வரேன். வழில, ஒரு ஆடு பஸ்ல அடிபட்ருச்சு. ஜனங்களெல்லாம் சேர்ந்துட்டாங்க. பணம் கேக்கறாங்க. ஒரேகூட்டம். உள்ளே இருந்த என்னைப் பாத்துட்டாங்க. உடனே நான் ஒரு ஐடியா பண்ணினேன்... கீழே இறங்கி, ரோட்ல ஒருதுண்டை விரிச்சேன். எல்லாரையும் காசு போடச் சொன்னேன். 200 ரூபா வரை சேர்ந்துச்சு. இந்த நியூஸ், அப்ப பத்திரிகைல கூட வந்துச்சு.


எம்ஜிஆர், சிவாஜிக்கு அடுத்தாப்ல ரவிச்சந்திரன், ஜெய்சங்கர், கமல், ரஜினின்னு நடிச்சதெல்லாம் அதிர்ஷ்டம்னுதான் சொல்லணும். இன்னிக்கி பெரியவங்கள்லேருந்து சின்னவங்க வரைக்கும் ரஜினி ரஜினி ரஜினின்னு சொல்லிக்கிட்டிருக்காங்க. இதுக்குக் காரணம் ரஜினியோட வேகம்.


‘மூன்று முகம்’தான் அவரோட சேர்ந்து நடிச்ச முதல் படம். ரஜினிக்கு இடுப்பு சின்னதா இருக்கும். நான் நிறைய புத்தகங்கள் படிப்பேன். அப்போ ரஜினிகிட்ட, ‘இடுப்பு சின்னதா இருந்தா வாழ்க்கை பெருசா இருக்கும். இடுப்பு பெருசா இருந்தா, வாழ்க்கை சின்னதாயிரும்’னு இங்கிலீஷ்ல சொன்னேன். உடனே ரஜினி, ‘என்ன என்ன என்ன என்ன என்ன...’ன்னு படு ஸ்பீடாக் கேட்டாரு. அப்புறம் அவரோட நடிச்ச காட்சி நல்லாவே வந்துச்சு.


‘கோழி கூவுது’ படமும் மறக்கமுடியாத படம். அதுல வரும் ‘அண்ணே அண்ணே’ பாட்டு யாராலும் மறக்கவே முடியாது. அந்தப் பாட்டை நைட் 12 மணிக்கு எடுத்தாங்க. ’அண்ணே அண்ணே... சிப்பாயண்ணே’னு நான் தான் பாடணும். நான் தான் லிப் மூவ்மெண்ட். இதுல ஒரு வேடிக்கை என்னன்னா... தாரா மாஸ்டர்தான் டான்ஸ். நடுவுல நானும் கொஞ்சம் ஆடணும். எனக்கு சுத்தமா ஸ்டெப்ஸே வரலை. அப்படி இப்படின்னு சமாளிச்சேன். பிரபு நல்லா ஆடியிருப்பார். சொல்லப்போனா, பிரபு முதன்முதல்ல டான்ஸ் ஆடினது இந்தப் படத்துலதான்னு நினைக்கிறேன்.


படம்லாம் எடுத்து முடிச்சதும் சொன்னேன்... ‘இந்தப் படம் இந்தப் பாட்டுக்காகவே சூப்பரா ஓடும் பாருங்க’ன்னு சொன்னேன். பிரபுவுக்கு முதல் ஹிட்டா இந்தப் படம் அமைஞ்சிச்சு. கிட்டத்தட்ட, சிவாஜி சார் கூட நடிச்ச ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’ படமும் சரி, அவர் பையன் பிரபு கூட ’கோழிகூவுது’ படமும் சரி... ரெண்டுமே எனக்கு நல்லபேர் கிடைச்சிச்சு. பட்டிதொட்டியெங்கும் அந்தப் படம் என்னைக் கொண்டுபோச்சு. நல்ல கதை, பிரமாதமான வசனம், எல்லாப் பாடல்களும் சிறப்பா இருந்துச்சு.
சிங்கிதம் சீனிவாசராவ் டைரக்‌ஷன்ல ‘சின்ன வாத்தியார்’ல நடிச்சேன். இதான் கடைசியா நடிச்ச படம். அவரோட ‘திக்கற்ற பார்வதி’லயும் நடிச்சிருக்கேன்.
இன்னும் வேற லெவல்ல, நல்ல உயரத்துல இருந்திருக்க வேண்டியவன் தான் நான். நமக்கு என்ன அமையணுமோ அப்படி அமைஞ்சுது. இப்படித்தான் நான் இதைப் பாக்கறேன். இன்னும் இன்னுமா நிம்மதியா, நிறைவா வாழணும். அவ்ளோதான்!’’ என்று நெக்குருகி மகிழ்ந்தார் சி.ஆர்.பார்த்திபன்.


-நடிகர் சி.ஆர்.பார்த்திபனின் முழு வீடியோ பேட்டியைக் காண :


தவறவிடாதீர்!

’’ ’அண்ணே அண்ணே... சிப்பாயண்ணே’ பாட்டுக்கு நடிச்சதை மறக்கவேமுடியாது!’’ - பழம்பெரும் நடிகரின் ‘கோழி கூவுது’ நினைவுகள்சி.ஆர்.பார்த்திபன்ஜாக்ஸன் துரைவீரபாண்டிய கட்டபொம்மன்சிவாஜிபிரபுரஜினிஎம்ஜிஆர்கோழிகூவுதுகங்கை அமரன்இளையராஜா

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x