Last Updated : 18 May, 2020 10:04 AM

 

Published : 18 May 2020 10:04 AM
Last Updated : 18 May 2020 10:04 AM

’கிஸ்தி, திரை, வரி, வட்டி... வானம் பொழிகிறது, பூமி விளைகிறது உனக்கேன் கொடுப்பது கிஸ்தி?’ - 61ம் ஆண்டில் ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’

அந்தப் படம் வந்து 60 வருடங்கள் நிறைவுற்று, 61-வது வருடமும் வந்துவிட்டது. ஆனாலும் தலைமுறைகள் கடந்தும், இன்னும் ரசித்துக் கொண்டிருக்கிறார்கள் மக்கள். படத்தின் மேக்கிங்கைக் கண்டு வியந்துகொண்டிருக்கிறார்கள். ஒவ்வொருவர் நடிப்பையும் பார்த்து பிரமித்துப் போகிறார்கள். அந்தப் படம்... ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’.
1959-ம் ஆண்டு மே மாதம் 16-ம் தேதி வெளியானது ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’. பத்மினி பிக்சர்ஸ் எனும் தன்னுடைய சொந்தக் கம்பெனி மூலம், படத்தைத் தயாரித்து இயக்கினார் பி.ஆர்.பந்துலு. கிராபிக்ஸெல்லாம் இல்லாத காலகட்டத்திலேயே, பந்துலு எடுத்த ‘பாகுபலி’ என்று இன்றைக்குப் படம் பார்க்கிற ரசிகர்களும் விமர்சகர்களும் கொண்டாடிக்கொண்டிருக்கிறார்கள்.
நெருப்பு வசனங்களை சக்தி கிருஷ்ணசாமி எழுதியிருந்தார். ஜி.ராமநாதனின் மயக்கும் இசை, இன்னும் ரசிக்கவைத்தது. முக்கியமாக, சிவாஜிகணேசன், கட்டபொம்மனாகவே மாறியிருந்தார். ‘கட்டபொம்மன் இப்படித்தான் இருப்பார்’ என்று நம் கண்களுக்கு எதிரே உலவவிட்டார்.அவரின் பார்வை அன்பையும் ஆவேசத்தையும் கொட்டிக்காட்டியது. நடையும் நடையின் மிடுக்கும் இன்னும் அசரவைத்தன. குறிப்பாக, வெள்ளைக்காரர்கள், தூக்கிலிட அறிவித்ததும், இரண்டுபக்கமும் மக்கள் நிற்க, நடுவே மக்களைப் பார்த்து மெல்லியதாகப் புன்னகைத்தபடி, கம்பீரமாக நடந்துவரும்போது, அசந்துபோய் ஆர்ப்பரித்தார்கள் ரசிகர்கள்.
இந்த நடிப்பைக் கண்டுதான், வெளிநாட்டவரும் வியந்து, விருதை அள்ளிக்கொடுத்தார்கள். ஜெய்ப்பூர் அரண்மனையில் சிலகாட்சிகளை படமாக்கினார்கள். ‘சிவாஜி படமா’ என்று அங்கே முழு ஒத்துழைப்புக் கொடுத்தார்கள். அந்தக் காலத்தில் கேவா கலர் அறிமுகமான சமயம்... ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’ திரைப்படமும் கேவா கலரில் எடுக்கப்பட்டது. அரண்மனை செட்டுகளும் மன்னர், மந்திரி வேடங்களுக்கான காஸ்ட்யூம்களும் செட் புராப்பர்ட்டீஸ் என்று சொல்லப்படுகிற அரண்மனைக்குள் இருக்கிற பொருட்களும் பிரமிக்க வைக்கும்.
ஜாக்ஸன் துரையாக நடித்திருக்கும் சி.ஆர்.பார்த்திபன், க்ளைமாக்ஸில் வரும் வெள்ளைக்கார துரை ஜாவர் சீதாராமன், கட்டபொம்மனின் மனைவியாக வரும் வரலட்சுமி, தம்பி ஓ.ஏ.கே.தேவர், வெள்ளையத்தேவனாக நடித்திருக்கும் ஜெமினி கணேசன், அவரின் காதல் மனைவியாக காளை வளர்க்கும் பத்மினி, எட்டப்பனாக வி.கே.ஆர். என படத்தில் வரும் ஒவ்வொருவரும் தங்களின் பங்களிப்பைச் செய்து, படத்தை மறக்கமுடியாத காவியமாக்கியிருப்பார்கள். இந்தப் படத்தில் பலே வெள்ளையத்தேவா’ என்று சிவாஜி இரண்டுமுறை தனக்கே உரிய பாணியில் கம்பீரமாகச் சொல்லுவார். எத்தனையோ வருடங்கள் கழித்து, அந்தத் தலைப்பிலேயே படம் வந்ததுதான் நமக்குத் தெரியுமே!
ஜெமினி நடித்த அந்தக் கேரக்டருக்கு முதலில் வேறொரு நடிகரைத்தான் போட்டிருந்தார்களாம். ஜெய்ப்பூருக்குப் போய் இறங்கி படப்பிடிப்பு நடப்பதற்கு முன்னதாக சில பிரச்சினைகளால், அந்த நடிகருக்குப் பதிலாக யாரைப் போடுவது என பந்துலு கேட்க, ‘கணேசனைப் போடலாம்’ என்று சிவாஜி சொன்னதுடன், அங்கிருந்து போன் போட்டார். சாவித்திரி எடுத்தார். ‘அம்மாடி... கணேசனை உடனே ஜெய்ப்பூருக்கு அனுப்பிவை, ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’ல அவன் நடிக்கிறான்’ என்று சொல்ல, ஜெமினி கணேசனும் உடனடியாகக் கிளம்பினார். மிகப்பிரமாதமான நடிப்பை வழங்கினார்.

அரண்மனை மந்திரிகள், மக்கள், போர்க்காட்சிகள் என எல்லாவற்றையும் நுணுக்கி நுணுக்கி, பார்த்துப்பார்த்து செய்திருப்பார்கள் தொழில்நுட்பக் கலைஞர்கள். இந்தப் படத்தைப் பார்த்த இந்திப்பட நடிகர்கள், சிவாஜியின் நடிப்பைக் கண்டு மிரண்டுபோனார்கள்.
சக்தி கிருஷ்ணசாமியின் வசனங்கள் படத்துக்கு மிகப்பெரிய பலம். அந்த வசனங்கள், சிவாஜியால் டெலிவரி செய்யப்படும் போது, அக்கினிக்குஞ்சுகளாக ஆர்ப்பரித்துப் பறந்தன. ‘நீர்தான் ஜாக்ஸன் துரையோ?’, ‘வரி, திரை, கிஸ்தி’, ‘துணிந்தவனுக்கு தூக்குமேடை பஞ்சுமெத்தை’ மட்டுமின்றி எத்தனையோ வசனங்கள், இன்றைக்கும் மனப்பாடம். அதிலும், சினிமாவில் நடிக்கச் சான்ஸ் கேட்டு வந்து, இன்றைக்கு மிகப்பெரிய நடிகர்களாக இருக்கும் பலரும், ‘எங்களோடு வயலுக்கு வந்தாயா,ஏற்றம் இறைத்தாயா, நாற்று நட்டாயா...’ வசனங்களைச் சொல்லி, ‘மாமனா மச்சானா மானங்கெட்டவனே... யாரைக் கேட்கிறாய் வரி, எதற்குக் கேட்கிறாய் கிஸ்தி’ என்று வசனம் பேசி, நடித்துக் காட்டி சான்ஸ் வாங்கினார்களாம். இதை பல நடிகர்கள் சொல்லியிருக்கிறார்கள்.

கதை, திரைக்கதை, வசனம், காட்சி அமைப்பு, காஸ்டியூம்ஸ், சண்டைக் காட்சிகள், பாடல்கள், இசை என சகலத்துக்கும் உதாரணமாக, அருமையான கலவையாக அமைந்ததுதான் ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’.
கட்டபொம்மனுக்கு இது 61வது வருடம். நூறுவருடமாகும்போதும், கோடம்பாக்கத்தில் யாராவது ஒருவர், எங்கிருந்தாவது கிளம்பி வந்து, ‘வானம் பொழிகிறது பூமி விளைகிறது,உனக்கேன் கொடுப்பது கிஸ்தி?’, ‘அங்கே கொஞ்சிவிளையாடும் எம்குலப் பெண்களுக்கு மஞ்சளரைத்துப் பணிபுரிந்தாயா? அல்லது மாமனா மச்சானா?’ என்று வசனம் பேசி நடித்துக் காட்டிக்கொண்டிருப்பார்கள்.
சினிமா உள்ளவரை சிவாஜியின் புகழும் மங்காதிருக்கும். சிவாஜியின் சரிதம் சொல்லும்போதெல்லாம் கட்டபொம்மனும் மறக்காமல் இடம்பெறுவார்.
கட்டபொம்மனும் சிவாஜியும் சரித்திரம் படைத்தவர்கள். சரித்திர நாயகர்கள்!

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x