

அனைத்து நபர்களின் பால்ய பருவத்தின் பிரிக்க முடியாத ஓர் அங்கமாக இருப்பது கார்ட்டூன் எனப்படும் பொம்மைப் படங்கள். ஆரம்பக் காலங்களில் புத்தக வடிவில் வெளிவந்து குழந்தைகளைக் குஷிப்படுத்திய பொம்மைப் படங்கள் அந்தக் குழந்தைகளுடன் சேர்ந்தே வளர்ந்தன.
தொலைக்காட்சி, திரைப்படம் என்று விரிந்த பொம்மைப் படங்கள் இன்றைய உலகில் தனக்கெனத் தனி சாம்ராஜ்யத்தையே உருவாக்கி வைத்துள்ளன. பொம்மைப் படங்கள் என்பது சிறுவர்களுக்கானது மட்டுமே என்ற எல்லையைக் கடந்து பெரியவர்களுக்கான பொம்மைப் படங்களும் வர ஆரம்பித்தன. அதற்கும் அமோக வரவேற்பு கிடைத்தது. என்ன இருந்தாலும் இன்றைய பெரியவர்கள் முன்னாள் சிறுவர்கள்தான் இல்லையா..! அப்படிப்பட்ட பெரியவர்களின் மனம் கவர்ந்த கார்ட்டூன்களின் முன்னணி வரிசையில் இருக்கும் கார்ட்டூன்தான் ‘ரிக் அண்ட் மார்ட்டி’ தொடர்.
குழந்தைகள் மத்தியில் புகழ் பெற்ற கார்ட்டூன் நெட்வொர்க் நிறுவனத்தின் துணை நிறுவனமான அடல்ட் ஸ்விம் என்ற நிறுவனம் தயாரித்து வெளியிடும் இக்கார்ட்டூன் தொடர் உலக கார்ட்டூன் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரசித்தி பெற்ற ஒன்று.
அறிவியல் தாத்தாவும் அம்மாஞ்சி பேரனும்
மிகவும் திறமை வாய்ந்த அதே சமயம் சமூக வாழ்வில் அக்கறை இல்லாத, சமூகக் கட்டமைப்புகளுக்கு எதிரான மனப்பான்மை கொண்ட, ஒருவித போதையுடனே அலையும் ரிக் என்ற முதியவரும் அவரது மகள் வழிப் பேரனான, மார்ட்டி என்ற 14 வயது அப்பாவிச் சிறுவனும் செல்லும் ஆச்சரியமும் அபாயமும் நிறைந்த பயணமே ‘ரிக் அண்ட் மார்ட்டி’ அறிவியல் தொடரின் தொடரின் மையக்கரு.
இவர்களது பயணம் என்பது எல்லையற்றது. பல பிரபஞ்சங்களைக் கடந்து, பல பரிமாணங்களில் இவர்களது பயணம் இருக்கும். ரிக் வடிவமைத்துள்ள பறக்கும் தட்டும், அவரிடம் இருக்கும் ‘போர்ட்டல்’ துப்பாக்கியும் இவர்களின் பயணக்கருவிகள். இவர்கள் செல்லும் பயணத்தின் வாயிலாகவே சமூகத்தின் அவலத்தையும், மனித இனத்தின் பலவீனத்தையும் சிறிதுகூட சமரசம் இல்லாமல் காட்டமாக விமர்சித்திருப்பார்கள் இத்தொடரின் படைப்பாளர்களான ஜஸ்டின் ரோய்லேண்ட் மற்றும் டான் ஹார்மன்.
வழக்கங்களை உடைத்த ‘ரிக் அண்ட் மார்ட்டி’
நிகிலிசம் (Nihilism) என்ற எதிர்மறுப்பு வாதம் அல்லது மறுப்பியல் கோட்பாட்டை ஆதாரமாகக் கொண்டே ‘ரிக் அண்ட் மார்ட்டி’ தொடரின் திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது. அதாவது இவ்வுலகில் ஏற்படுத்தப்பட்டுள்ள கலாச்சாரம், சட்டம், சமயம், பழக்கவழக்கம், நம்பிக்கை என்று அனைத்தும் மனிதனை ஏதோ ஒரு வகையில் தன் கட்டுக்குள் கொண்டு வந்து அடிமைப்படுத்துவதே அதன் இறுதி அங்கமாக இருக்கிறது. அவையனைத்தையும் எதிர்ப்பதே மறுப்பியல்.
ரிக் கதாபாத்திரம் மறுப்பியலின் உச்சத்தில் இருக்கும் கதாபாத்திரம். ஆனால், மறுப்பியலையும் இத்தொடரில் விமர்சிக்காமல் விடவில்லை. மறுப்பியலின் உச்சம் மனப் பிறழ்வுதான் என்பதையும் சேர்த்தே இத்தொடர் பேசுவதால்தான் இது ஓர் ஒப்பற்ற படைப்பாக இருக்கிறது. மார்ட்டி கதாபாத்திரம் நம்மைப் போன்ற சராசரியான மனிதர்களைப் பிரதிபலிக்கும் கதாபாத்திரமாக வடிவமைக்கப்பட்டிருக்கும். இந்த இரண்டு கதாபாத்திரங்களுக்கு இடையே இருக்கும் இரு துருவங்களுக்கான வேறுபாடுகளே இத்திரைக்கதையைச் சுவாரசியமாகக் கொண்டு செல்கிறது.
ஒவ்வொரு எபிசோடும் நம் கற்பனைகளைக் கடந்து, நடைமுறையை உடைத்துக் கதை சொல்லும். உதாரணத்திற்கு, ஒரு எபிசோடில் தெருவில் ஆதரவின்றி இருக்கும் ஒருவரைப் பிடித்து அவரது உடம்பிற்குள் ரிக், ஒரு தீம் பார்க்கைக் கட்டி இருப்பார். கேட்கவே வினோதமாக இருக்கும் இவ்விஷயத்தைச் சுவாரசியமாக அதே சமயம் அர்த்தபூர்வமாக உருவாக்கியிருப்பார்கள்.
பல மாதங்கள் கழித்து ‘ரிக் அண்ட் மார்ட்டி’
2013-ம் ஆண்டு ‘ரிக் அண்ட் மார்ட்டி’ தொடரின் முதல் சீசன் வெளியிடப்பட்டது. 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் நான்காவது சீசனின் ஐந்து எபிசோடுகள் வெளியிடப்பட்ட பின்பு, தேதி அறிவிக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டது. தற்போது பொதுமுடக்கத்தில் இருக்கும் ரசிகர்களைக் குஷிப்படுத்தும் வகையில் இரண்டு வாரங்களுக்கு முன்பு ஆறாவது எபிசோட் வெளியிடப்பட்டது.
தொடர்ந்து இந்த சீசனின் மீதம் உள்ள எபிசோடுகள் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வழக்கமான வெப் சீரிஸ் மற்றும் படங்கள் என்று பார்த்து சலித்துப் போய் இருப்பவர்களின் ரசனைக்குப் புத்துயிர் ஊட்ட நினைத்தால் அதற்கு ‘ரிக் அண்ட் மார்ட்டி’ சிறந்த தீர்வாக இருக்கும். ஆனால், கவனத்தில் கொள்க இந்த கார்ட்டூன் பெரியவர்களுக்கானது மட்டுமே.
க.விக்னேஷ்வரன்