

உலகப் புகழ்பெற்ற ஆங்கில நாடக ஆசிரியர் வில்லியம் ஷேக்ஸ்பியரின் (1564-1616) சிறு வயது தொடங்கி வாழ்நாள் முழுவதும் பிளேக் நோய் அச்சுறுத்திக்கொண்டே இருந்தது. சிறு வயதில் ஸ்டிராட்போர்டு ஆன் அவானில் அவர் வாழ்ந்த காலத்தில், அந்த ஊரில் பெருமளவு மக்களை பிளேக் நோய் பலிகொண்டது. அந்த நோய்த்தொற்றிலிருந்து தப்பியதன் காரணமாகவே ஷேக்ஸ்பியரால் உலகம் போற்றும் கவிஞர், நாடக ஆசிரியராக மிளிர முடிந்தது.
வேலையிழந்த கவிஞர்
பிற்காலத்தில் லண்டனில் வாழ்ந்த காலத்தில் நடிகராகவும், 'தி கிங்ஸ் மென்' நாடகக் குழுவின் பங்குதாரர்களில் ஒருவராகவும் ஷேக்ஸ்பியர் இருந்தார். 17ஆம் நூற்றாண்டில் பூபானிக் பிளேக் நோய் ஐரோப்பாவில் தொற்றியது. பிளேக் தொற்றால் 30க்கும் மேற்பட்டோர் ஓர் ஊரில் பலியாகிவிட்டால், அந்த ஊரில் நாடக அரங்குகள் மூடப்பட வேண்டும் என்பது அரசு விதித்திருந்த கட்டுப்பாடு. 1606இல் பிளேக் நோய் பரவத் தொடங்கியபோது (ஷேக்ஸ்பியருக்கு அப்போது 42 வயது), அனைத்து நாடக அரங்குகளும் மேற்கண்ட விதிமுறையால் மூடப்பட்டன. நாடகத் தொழில் நசிந்தது.
அரங்குகள் மூடப்பட்டதால் ஷேக்ஸ்பியர் வேலையை இழந்தார். அவருடைய வருமானம் நிச்சயமாகக் குறைந்திருக்கும். அதேநேரம் அவருக்கு நிறைய நேரம் கிடைத்தது. இந்தக் காலத்தில் பல முக்கிய நாடகங்களை அவர் எழுதினார். புகழ்பெற்ற 'மேக்பெத்', 'ஆண்டனி-கிளியோபட்ரா' உள்ளிட்ட நாடகங்கள் அந்த ஆண்டு இறுதிக்குள் எழுதப்பட்டவையே. அதேபோல், மிகவும் சோகம் மிகுந்த, மனச் சோர்வூட்டக்கூடிய நாடகமான 'கிங் லியர்', நோய்த்தொற்று பரவிய அந்தக் காலத்தை வேறொரு வகையில் பிரதிபலிப்பதுபோல் எழுதப்பட்டிருக்க வேண்டும்.
ஷேக்ஸ்பியர் நாடகங்களில் பிளேக்
அதற்கு முன்பாக 1603-04 பிளேக் தொற்றுக் காலத்தில் 'ஒதெல்லோ', 'ஆல் இஸ் வெல் தட் எண்ட்ஸ் வெல்' போன்ற அவருடைய நாடகங்கள் எழுதப்பட்டிருக்கலாம். 1592-1594 காலத்திலும் நாடக அரங்குகள் மூடப்பட்டிருந்தன. ஷேக்ஸ்பியர் அப்போது 30 வயதை நெருங்கிக்கொண்டிருந்தார். இந்தக் காலத்தில் முழுதாகவோ, சில நாடகங்களின் பகுதிகளையோ ஷேக்ஸ்பியர் எழுதியிருக்கக்கூடும்.
பிளேக் நோய், ஊரடங்கு போன்றவை குறித்து ஷேக்ஸ்பியர் நன்கு அறிந்திருந்தார். தன்னுடைய நாடகத்திலும் இவற்றைக் குறித்து அவர் பதிவு செய்துள்ளார். 'ரோமியோ ஜூலியட்' நாடகத்தில் வரும் ஃப்ரியர் ஜான் என்ற கதாபாத்திரம் இதைப் பற்றித் தெள்ளத் தெளிவாகக் கூறுகிறது:
நோய் மிகுந்த இந்த நகரில்,
இறப்பை ஏற்படுத்துகிற கொள்ளைநோய் ஆட்சிசெய்யும் இடத்தில்,
வீட்டுக் கதவுகள் இறுக்க அடைபட்டுக் கிடக்கும் நிலையில்,
நாங்கள் எப்படி வெளியே செல்ல முடியும்?