Last Updated : 15 May, 2020 04:25 PM

 

Published : 15 May 2020 04:25 PM
Last Updated : 15 May 2020 04:25 PM

அயோத்திதாசர் 175: அத்தியாயம் 7- புரட்சியாள‌ர் உதயமான தருணம்!

அதுவொரு கொடுங்காலம். அவர்கள் சாலையில் நடக்க முடியாது. கிணற்றில் தண்ணீர் எடுக்க முடியாது. கோயிலில் நுழைய முடியாது. நிலம் கிடையாது. படிக்கப் பள்ளி கிடையாது. தேடிப் படித்தாலும் முடிக்க முடியாது. அதையும் மீறி படித்தால் வேலை கிடையாது. இதையெல்லாம் எடுத்துச் சொல்ல ஒரு பிரதிநிதி கிடையாது. தினந்தினம் வகைவகையான‌ சித்ரவதை. என்ன பாவம் செய்தோம்? எதனால் ஒடுக்கப்பட்டோம்? அவர்களைப் போல நாங்களும் மனிதர்கள் இல்லையா? எனக் கதறினார்கள்.

மீட்பனைப் போல‌ யாரேனும் வரமாட்டார்களா என ஏங்கினார்கள். அந்த சமயத்தில் சென்னை மாகாண சபையிடம் இருந்து ஒரு அறிவிப்பு வந்தது. அதாவது 'மாவட்ட பிரதிநிதிகள் சென்னை வந்து தங்கள் பகுதி மக்களின் குறைகளை முறையிடலாம்' என அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதையடுத்து சாதி பேதமற்ற திராவிடர்கள் நீலகிரியில் ஒரு கூட்டத்தைக் கூட்டி ஆலோசித்த‌னர். அதில், 'திராவிட மகாஜன சபையின் தலைவராகச் சிறப்பாகச் செயல்படும் அயோத்திதாசரை அனுப்பலாம்' என முடிவெடுத்தனர்.

அவரே எங்கள் பிர‌திநிதி என ஒருமனதாகத் தேர்வு செய்து, சென்னை சென்று வரத் தேவையான வழிச்செலவுப் பணத்தையும் வழங்கினர். தங்கள் பிரச்சினைகளை எடுத்துச்சொல்லி, அதனைத் தீர்ப்பார் என நம்பிக்கையோடு அவரை அனுப்பி வைத்தன‌ர். அதுவரை நீலகிரியில் மையம் கொண்டிருந்த அயோத்திதாசர் எனும் புயல் சென்னையை நோக்கி நகர்ந்த‌து அப்படித்தான். அன்று வீசிய புயலின் சீற்றம்தான், நூற்றாண்டுகளாக பீடித்திருந்த அனைத்து சமூக நாற்றத்தையும் தூக்கிவாரிப் போட்டது.

1892-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் சென்னை மாகாண சபையின் தலைவர் பி.அரங்கைய நாயுடு தலைமையில் கூட்டம் கூடியது. பரந்து விரிந்திருந்த அன்றைய சென்னை மாகாணத்தின் அனைத்து மாவட்டப் பிரதிநிதிகளும் வந்திருந்தார்கள். அயோத்திதாசரும் அமைதியாக அமர்ந்திருந்தார். ஏரிப் பராமரிப்பு, புதிய கிணறுகள் அமைத்தல், சாலை மேம்பாடு, வெளி மாவட்டங்களில் நிலவும் பிரச்சினைகள், மக்களின் குறைகள் ஆகியவற்றைப் போக்குவதற்கான விவாதம் தொடங்கியது. விவாதிக்க வேண்டிய அம்சங்களின் பட்டியல் வாசிக்கப்பட்டு, அதனைச் செயல்படுத்துவதற்கான தீர்மானங்கள் நிறைவேற்றப்படும். பின்னர் அதை பிரிட்டிஷ் அரசுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்கப்படும்.

மாகாண சபையின் தலைவர் பி. அரங்கைய நாயுடு எழுந்து நின்று விவாதப் பட்டியலை வாசிக்கையில் 'ஒடுக்கப்பட்டோரின் பிரச்சினை' என்ற வாக்கியம் வந்த‌து. உடனே அதை வேகமாகப் பென்சிலால் அடித்தார். “இவர்களைப் பற்றி பிரிட்டிஷ் துரைகள் போதுமான அளவுக்கு எழுதிவிட்டார்கள். எனவே நாம் அவர்களின் குறைகளை ஆலோசிப்பது தேவையற்றது” என்றார். அதற்கு மாகாண சபையின் செயலாளர் எம். வீரராகவாச்சாரியார் தலைவரைப் பார்த்து, “அந்த குலத்தாருக்காக நீலகிரியில் இருந்து ஒரு பிரதிநிதி வந்திருக்கிறார்” என்றார்.
சற்றும் தாமதிக்காமல் அயோத்திதாசர் எழுந்து, '' இக்குலத்தோரைப் பற்றி சில துரைமார் பேசி இருக்கிறார்க‌ள் என்பதாலே, நீங்கள் மவுனம்
சாதிப்பது அழகன்று. உங்களாலே இக்குலத்தோர் தாழ்த்தப்பட்டு சீர்குலைந்து இருக்கின்றார்கள். எனவே, நீங்கள்தான் அவ‌ர்களின் பிரச்சினைகளைத் தீர்த்து வைக்க வேண்டும்''என உறுதியாக கூறினார்.

அதற்கு சபாநாயகர், “உங்களுக்கு என்ன செய்ய வேண்டும்?” எனக் கேட்டார். உடனே அயோத்திதாசர், “ உலகத்தில் உள்ள சகல சாதியினருக்கும் தெய்வம் பொதுவானது. கோயிலும் பொதுவானது எனச் சொல்லக் கேள்விப் ப‌ட்டிருக்கின்றேன். ஆனால், இக்குலத்தில் உள்ள வைணவ மதத்தவ‌ர்களை விஷ்ணு கோயிலுக்கு உள்ளேயும், சைவ மதத்தவர்களை சிவன் கோயிலுக்கு உள்ளேயும் நுழைய‌ ஏன் அனுமதி மறுக்கிறார்கள்? இவர்களையும் உள்ளே சேர்த்துக்கொண்டால் ஒருவருக்கொருவர் அன்பு பாராட்டிச் சுகமாக வாழலாம்தானே. இதனால் அந்த மதங்களும் பிரபலம் அடையாதா?'' என சாதூரியமான கேள்விகளை அடுக்கினார்.

பல நூற்றாண்டுகளாக அடிமைப்படுத்தப்பட்டிருந்த கூட்டத்தில் இருந்து முதல் முறையாக எழுப்பப்பட்ட அயோத்திதாசரின் இந்த உரிமைக்குரல் சபையை உருக்குலைத்தது.

எல்லோரும் எழுந்து நின்று, “கோயிலுக்குள் அனுமதிக்க முடியாது” என கூச்சல் போட்டனர். தஞ்சாவூர்ப் பிரதிநிதி சிவராம சாஸ்திரி கோபத்தோடு எழுந்து, ''உங்கள் குலத்தோருக்கு மதுரை வீரசாமி, காட்டேரி சாமி, கருப்பண்ண சாமி போன்றவற்றைக் கொடுத்திருக்கிறோம். அதனால் சிவனும், விஷ்ணுவும் உங்களுடைய சாமி அல்ல. அவர்கள் எங்களுடைய சாமி'' எனக் கொந்தளித்தார்.

அதற்கு அயோத்திதாசர், '' நீங்கள் சொல்வதுபோல் உங்கள் சாமிகள் எங்களுக்கு வேண்டாம்'' என ஒற்றை வரியில் நிறுத்திக் கொண்டார். ஏனென்றால் அப்போதே அவர் மனதில் பவுத்தம் வேரூன்றி இருந்தது.

பின் அயோத்திதாசர், ''எங்கள் குலத்துச் சிறுவர்களுக்கு கிராமங்கள் தோறும் கல்விச் சாலைகள் அமைக்க வேண்டும். நான்காம் வகுப்பு வரை இலவசமாகக் கல்வி கற்பதற்கு உதவ‌ வேண்டும். கிராமங்களில் வசிக்கும் எங்கள் குலத்தாருக்கு தரிசாகக் கிடக்கும் நிலங்களை வழங்க வேண்டும்'' என மக்கள் பிரச்சினைகள் பக்கம் திரும்பினார்.

இதைக்கேட்ட எல்லூர் பிரதிநிதி சங்கரன், '' இக்குலத்தோரின் குறைகளையும், கஷ்டங்களையும் தீர்க்க வேண்டும். ஏனென்றால் இந்த தேசத்தின் சகல சாதியினருக்கும் இவர்கள் முதுகெலும்பு போல் உதவியாக இருக்கிறார்கள். அவர்களுக்குத் தேவையான உதவியைச் செய்ய வேண்டும்'' என வலியுறுத்தினார். அதற்கு ராஜா சர்சவலை ராமசுவாமி முதலியாரும், “கல்வி, நிலம் வழங்குவது குறித்து தீர்மானம் நிறைவேற்றி பிரிட்டிஷ் அரசுக்கு அனுப்பவேண்டும்” என்றார்.

இதையடுத்து அயோத்திதாசர் எழுப்பிய கோரிக்கைகள் தொடர்பாக‌ வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அவரது வாக்குத் திறமையைக் கண்டு வியந்த பெரும்பான்மைப் பிரதிநிதிகள் ஆதரவாக வாக்களித்தனர். இதன் மீதான தீர்மானத்தை ராஜா சர்சவலை ராமசுவாமி முதலியார் கொண்டுவர, எல்லூர் சங்கரன் எழுந்து நின்று ஆமோதித்தார். கோரிக்கையை எழுப்பியவர் என்ற முறையில் அயோத்திதாசர் பிரதி ஆமோதகராகச் சேர்க்கப்பட்டார்.

இந்தத் தீர்மானம் உடனடியாக அரசுக்கு அனுப்பப்பட்டதைத் தொடர்ந்து பிரிட்டிஷ் அரசு, ''தென்னிந்தியாவில் உள்ள ஊர்கள் தோறும் பள்ளிக்கூடங்கள் தொடங்கவும், ஒடுக்கப்பட்டோருக்கு நிலம் வழங்கவும் உத்தரவிட்டது'' என அயோத்திதாசர் தமிழன் (அக்டோபர் 21,1908) இதழில் குறிப்பிடுகிறார்.

இந்த உத்தரவின் பேரில் 'லோக்கல் ஃபண்ட் போர்டு', 'முனிசிபாலிட்டி' நிர்வாகங்கள் ஊர்கள் தோறும் பள்ளிகளைத் தொடங்கின. அதில் சாதி மத பேதமில்லாமல் ஆயிரக்கணக்கான ஏழைச் சிறுவர்கள் கல்வி கற்றார்கள்; நிலமற்றவர்கள் நிலம் பெற்றார்கள். சமூகத்தில் மாற்றம் முகிழத் தொடங்கியது.

இதற்கு அடித்தளமாக அமைந்த விக்டோரியா ஹால் மாகாண சபைக் கூட்டத்தைப் பற்றி ஆய்வாளர் டி.தருமராஜ் தனது 'அயோத்திதாசர்: பார்ப்பனர் முதல் பறையர் வரை' நூலில் விவரித்திருக்கிறார்.

1907-க்கு முந்தைய அயோத்திதாசரின் வாழ்க்கை, அரசியல் செயல்பாடுகள் குறித்த தகவல்கள் பெரிதாகக் கிடைக்கவில்லை. 1892-ம் ஆண்டில் அவர் ஒடுக்கப்பட்டோருக்கு கல்வி, நில உரிமையைப் பெற்றுக் கொடுத்திருக்கிறார் என்பது வரலாற்றில் முக்கியத் திருப்புமுனை நிகழ்வாகத் தென்படுகிறது. அப்போது 1 வயதுக் குழந்தையாக இருந்த அம்பேத்கரும், 13 வயதுச் சிறுவனாக இருந்த பெரியாரும் தன் லட்சியத்தை வேறு தளத்துக்குக் கொண்டு செல்வார்கள் என அயோத்திதாசர் நினைத்திருப்பாரா?

(பண்டிதரைப் படிப்போம்...)

தொடர்புக்கு: இரா.வினோத், vinoth.r@hindutamil.co.in

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x