Published : 15 May 2020 11:01 AM
Last Updated : 15 May 2020 11:01 AM

’நண்பன், சகோதரன், நல்லாசிரியன்... பாலகுமாரன்!’  - எழுத்தாளர் பாலகுமாரன் நினைவுநாள்

டி . கோவிந்தராஜூ
கோயில் நிர்வாக அதிகாரி (ஓய்வு)
தஞ்சாவூர்.

காலை எழுந்தவுடன் யோகியின் நினைவு .தொடர்ந்து நினைவுக்கு வருவது பாலகுமாரனின் கனிவு.


90- களில் பாலகுமாரனை எனக்குத் தெரியாது. அவர் நாவல்களை மட்டுமே தெரியும். அவர் வேறு அவரின் எழுத்து வேறு அல்ல என்பது பின்னர் புரிந்தது. இருபது ஆண்டுகளுக்குப் பின் பாலகுமாரன் சாரை சந்தித்த பிறகு உணர்ந்து தெளிந்தேன்.


பல பிரச்சினைகளுக்கு இடையே அப்போது திருமணம் நடந்தது. திருமணம் முடிந்த சில மாதங்களில் நான் வேலை பார்த்து வந்த தனியார் நிறுவன மேலாளருடன் மோதல். தொடர்ந்து வேலை பார்க்க முடியாத சூழலில் முடிவெடுக்க முடியாமல் திணறினேன் .பாலகுமாரனின் புத்தகங்கள் வழியே அறிமுகமான யோகியைப் பார்க்க ஓடினேன்.


முதல் இரண்டு முறை பார்க்க அனுமதிக்கப்படவில்லை .மூன்றாவது முறை அனுமதி கிடைத்தது.மனதில் ஒரே கேள்வியுடன் யோகியின் முன் அமர்ந்திருந்தேன்.மனம் முழுவதும் பதை பதைப்பு .யோகி அருகில் வந்தார். நான் எதுவும் பேசவில்லை, கேட்கவில்லை,.மனதில் அந்தக் கேள்வி மட்டுமே ஓடிக் கொண்டிருந்தது.வேலைக்கு போவதா ,வேண்டாமா? யோகி அருகில் வந்தார். முதுகு குனிய நமஸ்கரித்தேன். முதுகில் மூன்று முறை தட்டினார். என் கேள்விக்கான பதிலும் வந்தது. போ, போ ,போ,என்று கூறினார்.


அதை உத்தரவாகவே எடுத்துக் கொண்டு தனியார் நிறுவன வேலையை ராஜினாமா செய்து விட்டு அரசுத் தேர்வு எழுதி திருக்கோயில் நிர்வாக அதிகாரியாகப் பணியில் சேர்ந்தேன்.என் குருவை அடையாளம் காட்டிய குரு பாலகுமாரன். அதன் பிறகு பல முறை பாலகுமாரன் சாரை சந்திக்கவும் , அளவளாவவும் , ஆசி பெறவும் வாய்ப்புக் கிடைத்தது.


’ஆயிரம் கண்ணி’ ,என்னை அடித்து துவைத்துக் காயப்போட்ட நாவல்களில் ஒன்று. என்னைப் போல் ஒரு நிர்வாக அதிகாரியை ரத்தமும் சதையுமாக அதில் உலவ விட்டிருந்தார் பாலகுமாரன். . அந்த நாவலில் வரும் மோகனசுந்தரம் அறநிலையத்துறையில் எனக்கு மூத்தவர் .என்னோடு பழகியவர் .அவரை நாவலில் கௌரவப் படுத்தியதன் மூலம் எங்கள் நிர்வாக அதிகாரிகள் அனைவரையும் கௌரவப்படுத்தியதாகவே உணர்ந்தேன். அந்த நாவலின் அர்ச்சகர் கதாபாத்திரங்களாக வரும் விஸ்வநாதன் மற்றும் காளிதாசன் பாத்திரங்களை வேறு யார் படைத்திருந்தாலும் மிகப்பெரிய விமரிசனத்தை சந்தித்திருப்பார்கள். தங்கள் எழுத்தில் இருந்த சத்திய ஆவேசம் எவரையும் எதுவும் சொல்ல முடியாமல் செய்தது.


நாவலின் இறுதிப் பகுதியின் சில வரிகள்.


'கதிரவன் ஸார் போன் பண்ணாரு .அடுத்த மாசம் இருவத்திரெண்டாம் தேதி கும்பாபிஷேகம் வச்சுக்கச் சொல்லி கவர்மெண்ட்ல சொல்லிட்டாங்க .நான் மூணு டேட் கொடுத்திருந்தேன்.அந்த டேட்லயே வச்சிக்கோன்னு சொல்லிட்டாங்க. எல்லா மினிஸ்டருக்கும் முன் கூட்டியே சொல்லிடறாங்களாம்.வேகமாக செய்யச் சொல்றாங்க. இன்னும் ஒரு ரூபா சேங்ஷன் ஆயிருக்காம்’’ என்று மோகனசுந்தரம் சொல்ல சீனுவாசன் மோகனசுந்தரத்தின் கையைக் குலுக்கினார்.


கை குலுக்கிய சீனுவாசன் நீங்கள்தான் என்றும் கை கொடுத்த மோகனசுந்தரம் போன்றவர்களில் நானும் ஒருவன் என்பதையும் எப்போதும் மறவேன் பாலகுமாரன் சார்?
நீ எனக்கு யார் ? வெறும் எழுத்தாளன் மட்டும்தானா ? நண்பனாய், சகோதரனாய், நல்லாசிரியனாய் ஒரு எழுத்தாளன் இருக்க முடியும் என்பதற்கு எடுத்துக் காட்டு பாலகுமாரன். குருவாய் யோகி ராம் சுரத்குமாரை அடையாளம் காட்டிய குரு நீ. ஒரு காதலன் காதலியை நினைப்பதைக் காட்டிலும், நேசிப்பதைக் காட்டிலும் உன்னை நான் அதிகமாக நினைக்கிறேன். நேசிக்கிறேன்.


நவீனத்துவம், பின் நவீனத்துவம், அமைப்பியல் என்று தமிழ் இலக்கிய உலகம் பம்மாத்து பண்ணிக் கொண்டிருந்தபோது விமர்சன நோக்கில்தான் பாலகுமாரனின் நாவல்களைப் படித்தேன். ஆனால் அதன் பிறகுதான் வாழ்க்கையைப் படிக்க ஆரம்பித்தேன்.


உடையார் ராஜ ராஜ சோழனுக்கு உருவம் கொடுத்தவர் பாலகுமாரன். .காலணி ஆதிக்க தேமலை பூமியின் முகத்தில் பூசியவன் என்று முற்போக்கு சக்திகள் ராஜராஜனை விமர்சனம் செய்தபோது, அவன் ஆளுமையை வரி வரியாய் வரைந்தவர் பாலகுமாரன். அவர் மட்டுமின்றி நானும் கூட ராஜ ராஜ சோழனின் படையில் கடைக்கோடி வீரனாக இருந்திருக்க கூடும் என்ற எண்ணத்தை உருவாக்கியதுதான் பாலகுமாரன் எழுத்து.


எழுத்து மட்டுமா ? என்னவென்று சொல்வது பாலகுமாரன் உடனான உறவை? சங்கடம் நேரும்போதெல்லாம் அவரைச் சந்திக்க மனம் தூண்டு. சந்தித்து சற்று நேரம் கதறி அழுத பின் என் கவலைகள் யாவும் தீரும். எத்தனையோ சந்திப்புகள். அத்தனையிலும் நண்பனாய், தோழனாய், நல்லாசிரியனாய், தாயாய், தந்தையாய், சகோதரனாய் வழி காட்டியவர் குருநாதர் பாலகுமாரன்.


அன்பு பாலகுமாரா...இன்று உனது நினைவு நாளாம்.


உன்னை நினைக்காத நாளில்லை!


- எழுத்தாளர் பாலகுமாரன் நினைவு நாள் இன்று (15.5.2020)

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x