Published : 14 May 2020 07:27 PM
Last Updated : 14 May 2020 07:27 PM

கொள்ளை லாபம் பார்க்கும் கோவை டாஸ்மாக் மாஃபியாக்கள்: குமுறும் டாஸ்மாக் ஊழியர்கள்

‘எந்த நிமிடத்திலும் உச்ச நீதிமன்ற உத்தரவு வந்துவிடும். நமக்கு சாதகமாகத் தீர்ப்பு வந்த மறு நொடியே கடைகளைத் திறந்துவிட வேண்டும்’ என்கிற ரீதியில் டாஸ்மாக் மதுபானக் கடைச் சிப்பந்திகள் தத்தமது கடை வாசலில் பரபரப்புடன் காத்துக்கிடக்கிறார்கள். ஒவ்வொரு கடைக்கு வெளியேயும் மதுப்பிரியர்களைக் கட்டுப்படுத்த இரும்பு மற்றும் மரத் தடுப்புகள், கடைகளின் தேவைக்கேற்ப காவலர்கள் என்று முன்னேற்பாடுகள் பலமாகச் செய்யப்பட்டிருக்கின்றன.

இந்தச் சூழ்நிலையில், கோவை மாவட்ட டாஸ்மாக் மதுக்கடை ஊழியர்களின் வாட்ஸ் அப் குழுக்கள் சிலவற்றிலிருந்து ஒரு புதிய பூதம் கிளம்பியுள்ளது. அதில், ‘அதிகாரிகளின் ஆசியோடு நீதிமன்றம் இட்ட பரிந்துரைகளைக் காற்றில் பறக்கவிட்டு விற்பனையில் இமாலய சாதனை செய்த கோவை டாஸ்மாக் மாஃபியாக்கள்’ என்ற வரிகளோடு 25 பேர் கொண்ட பட்டியல் வெளியாகியிருக்கிறது. இதையடுத்து, ‘இந்த 25 கடைகளையும் அதிகாரிகள் முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும். தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுத்த பின்பே இக்கடைகளைத் திறக்க வேண்டும்’ என்ற கோரிக்கை பெரும்பான்மையான மதுக்கடை ஊழியர்கள் மத்தியில் எழுந்திருக்கிறது.

அப்படி என்னதான் நடக்கிறது?
வாட்ஸ் அப்பில் வெளியாகியிருக்கும் பட்டியலில் மதுக் கடை எண், அந்த கடை சூப்பர்வைசரின் பெயர், மே 7 மற்றும் 8 ஆகிய இரு நாட்களில் அந்தக் கடையில் நடந்த மொத்த மதுபான விற்பனை குறித்த விவரங்களும் இடம்பெற்றுள்ளன. பெரும்பாலான மதுக்கடைகளில் சாதாரண நாட்களில் 2 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானதென்றால் பொதுமுடக்கம் முடிந்து முறைப்படி கடைகளைத் திறக்கப்பட்டபோது சுமார் 4 லட்சம் ரூபாய் அளவிற்கே விற்பனை நடந்திருக்கிறது. அடுத்த நாள் விற்பனை பழையபடி 3 லட்சம் ரூபாய், அல்லது 2 லட்சம் ரூபாயாகச் சரிந்திருக்கிறது. ஆனால், ‘குறிப்பிட்ட 25 கடைகளில் மட்டும் சராசரி நாட்களைவிட 5 மடங்கு 7 மடங்கு மது விற்பனை நடைபெற்றது எப்படி?’ என்பதுதான் ஊழியர்கள் முன்வைக்கும் கேள்வி.

இதுகுறித்து டாஸ்மாக் கடை ஊழியர்கள் சங்க நிர்வாகி ஒருவரிடம் பேசினேன்.

“கோவை மாவட்டத்தில் மொத்தம் 307 மதுக் கடைகள் உள்ளன. அவற்றில் கோவை வடக்கு மாவட்டத்தில் 159 கடைகள் உள்ளன. இவற்றில் சுமார் 320க்கும் மேற்பட்ட சூப்பர்வைசர்கள், மது விற்பனையாளர், பார் அட்டெண்டர் என 1,200 பேர் பணியாற்றுகின்றனர். இவர்கள் மதுபாட்டில்கள் விற்கும்போது ஒரு பிராந்தி பாட்டிலுக்கு 5 ரூபாயும், பீர் பாட்டிலுக்கு 10 ரூபாயும் அதிகபட்ச சில்லறை விலையை விடவும் கூடுதலாக வைத்து விற்று வந்தனர். இப்படி வரும் தொகையை வைத்துத்தான் சரக்கு குடோனிலிருந்து இறக்கும், ஏற்றும் கூலிகளுக்கும், பாட்டில்கள் டேமேஜ் கணக்கிற்கும் சரிகட்டிக்கொள்கிறார்கள். இப்படிச் செய்வதை அதிகாரிகளே கடந்த காலங்களில் ஊக்கப்படுத்தி வந்திருக்கிறார்கள். இந்த வகையில் மட்டும் பொது முடக்கம் தளர்த்தப்பட்டு இரண்டு நாள் விற்பனையில் ஒரு கடையின் சிப்பந்திகள் 1 லட்சம் முதல் 1.50 லட்சம் ரூபாய் வரை பார்த்துள்ளனர்.

பொதுமுடக்கத்தின் போது சரக்குகளை முன்கூட்டியே எடுத்துப் பதுக்கி பத்து மடங்கு, பதினைந்து மடங்கு கூடுதல் விலைக்கு விற்றுப் பணம் பார்த்துள்ளனர். ஆளுங்கட்சி ஆட்கள் துணையுடன்தான் இதெல்லாம் நடந்துள்ளது. அப்படி விற்ற சரக்குகளுக்கான அதிகபட்ச சில்லறை விலைத் தொகையை 7-ம் தேதி நடந்த விற்பனையுடன் சேர்த்துக் கணக்குக் காட்டிக்கொண்டனர். அதுதான் குறிப்பிட்ட சில கடைகளில் மட்டும் 16 லட்சம் ரூபாய் வரை சரக்கு விற்பனை கணக்கில் வரக் காரணம்.

அடுத்த நாள் மறுபடி மதுபானக் கடைகளை மூடுமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டவுடன் இதே கடைகளில் இருந்த சரக்குகள் மறுபடியும் ஆளுங்கட்சியினரின் துணையுடன் பதுக்கப்பட்டுவிட்டன. அந்த பாட்டில்களின் கணக்கை 8-ம் தேதி விற்பனையில் சிப்பந்திகள் காட்டிவிட்டனர். அப்படித்தான் இரண்டாம் நாளும் அபரிமித விற்பனையே கணக்கில் காட்டப்பட்டிருக்கிறது.

இப்படி அபரிமிதமாக விற்பனை நடந்த ஒரு கடைச் சிப்பந்தி மீது தொண்டாமுத்தூர் பகுதியில் புகார் வந்தது. கள்ளச் சந்தையில் மது விற்றுக்கொண்டிருந்த ஒருவரிடம் நடந்த விசாரணையில், அந்தக் கடை சிப்பந்தி மூலம் கள்ளச் சந்தைக்குச் சரக்குகள் சென்றது தெரியவந்தது. இதையடுத்து போலீஸார் அந்தக் கடைச் சிப்பந்தியைப் பிடித்து விசாரித்திருக்கிறார்கள். அப்போது அந்த விசாரணையைத் தடுக்க ஒரு ஆளுங்கட்சிப் புள்ளியின் படையே வந்திறங்கியது. அதற்கப்புறம் அந்த விசாரணையே கைவிடப்பட்டிருக்கிறது.

அப்படி என்றால் இந்த டாஸ்மாக் சரக்கு கள்ளச் சந்தையில் விற்கப்படுவதற்கு உறுதுணையாக இருப்பது யார் என்பது வெட்ட வெளிச்சமாகிவிட்டது. எனவேதான் அபரிமித விற்பனை நடந்திருக்கும் கடைகளின் மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்காமல் கடையைத் திறக்கக் கூடாது என மதுக்கடை ஊழியர்களில் ஒரு தரப்பு போர்க்கொடி தூக்கியுள்ளது. சமூக வலைதளங்களிலும் இந்த விவரத்தை வெளிப்படுத்தியுள்ளது” என்று சொன்னார் அந்தப் பொறுப்பாளர்.

டாஸ்மாக் முறைகேடுகள் குறித்து தொடர்ந்து புகார்கள் வந்தாலும் வெளிப்படையாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாதது ஏன் என்பதுதான் மக்களின் கேள்வி!

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x