Last Updated : 14 May, 2020 11:06 AM

Published : 14 May 2020 11:06 AM
Last Updated : 14 May 2020 11:06 AM

ஆளுமை வளர்ப்போம்: கோபத்தைக் கட்டுப்படுத்தும் வழிகள்

சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை கோபத்தை எப்படிக் கையாள்வது என்று தெரியாமல் தவிக்கிறார்கள். உளவியல் அடிப்படையில் அணுகும்போது, கோபம் என்பது ஒரு இயல்பான மனித உணர்ச்சி. எப்போது அது தீவிரமாக, கட்டுப்பாட்டை இழந்து, நீண்ட நேரம் நீடித்து, அடிக்கடி தோன்றி, நம்மை அடாவடித்தனமாக வன்முறைக்கு இட்டுச் சென்று, நம் படிப்பு, வேலை, மற்றவர் உடனான உறவு ஆகியவற்றைப் பாதிக்கிறதோ அப்போது அது பிரச்சினைக்கு உரியதாகிறது.

கோபத்துக்குக் கீழே!

அச்சம், பாதுகாப்பின்மை, பொறாமை, இயலாமை, விரக்தி, சுயமரியாதை இன்மை போன்ற பல காரணங்கள் கோபத்துக்கு அடிப்படையாக இருக்கலாம். கோபம் வரும்போது சிலர் ஒன்றும் சொல்லாமல், ஆமை போல் கூட்டுக்குள் ஒடுங்கிவிடுவார்கள். சிலர் கோபம் கொண்டால் தன்னை மறந்து கட்டுப்பாடின்றி, உணர்ச்சிப்பெருக்கில் அடாவடித்தனமாக நடந்துகொள்வார்கள். இந்த இரண்டு அணுகுமுறையும் அவர்களுடைய நலனுக்குத் தீங்கு விளைவிக்கும். கோபத்துக்குத் தூண்டுகோலாக மன அழுத்தம்தான் இருக்கும். மன அழுத்தத்தைக் கட்டுப்படுத்த கற்றோம் என்றால், நம்மால் எளிதாகக் கோபத்தைக் கட்டுப்படுத்த முடியும். மன அழுத்தம் நம் கட்டுப்பாட்டை இழக்கும் தருணத்தில் அது கோபமாக வெளிப்படும். மன அழுத்தம் என்பது, நம்மிடம் எதிர்பார்க்கப்படும் தேவைகளுக்கும் அதை நிறைவேற்ற நம்மிடம் உள்ள திறமைக்கும் இடையே உள்ள இடைவெளி ஆகும். இதில் நல்லதும் உண்டு, கெட்டதும் உண்டு.

நல்ல மன அழுத்தம்

தினமும் காலையில் நம்மைப் படுக்கையிலிருந்து எழவைத்து, பள்ளிக்கோ கல்லூரிக்கோ வேலைக்கோ செல்லவைப்பது Eustress எனப்படும் நல்ல மன அழுத்தம்தான். இத்தகைய மன அழுத்தம் நமக்குக் கோபத்தையோ எரிச்சலையோ விளைவிக்காது. அன்றாட செயல்களைச் செய்வதற்குத் தேவையான மன அழுத்தம் போதுமான அளவு இல்லாதவரைத்தான் சோம்பேறி அல்லது ஊக்கமில்லாதவர் என்கிறோம்.

ஊக்க அழிவு

மற்றொரு வகை மன அழுத்தம், நமக்கு எரிச்சலையும் கோபத்தையும் ஒருங்கே உருவாக்கும். எப்போது மன அழுத்தம் நம் தேவைக்கு மீறியதாக, நமக்கு ஊக்கமளிக்க முடியாததாக இருக்கிறதோ, அப்போது distress எனப்படும் மன அழுத்தம் தோன்றும். உதாரணத்துக்கு, ஒரே நாளில், ஒரு மாணவர் ஐந்து தேர்வுகள் எழுத வேண்டும் என்றும், மேலும் எல்லாத் தேர்விலும் குறைந்தபட்சம் 90 சதவீத மதிப்பெண் எடுக்க வேண்டும் என்றும் நிர்பந்திக்கப்படுகிறார் என்று கற்பனை செய்து பாருங்கள். அது அவரது ஆற்றலுக்கு மீறியதாக, சாத்தியமில்லாததாக மாறும்போது, ஒரு சின்னத் தூண்டலும் அவரைக் கோபத்தில் வெடிக்க வைக்கும்.

எது அதிகரிக்கும், எது குறைக்கும்?

நம்முடைய வாழ்க்கை முறை மட்டுமல்ல; உணவு முறையும் ஒரு வகையில் மன அழுத்தத்துக்குக் காரணமாக இருப்பதை மருத்துவர்கள் உறுதிப்படுத்துகிறார்கள். குறிப்பாக, இனிப்பு, காபி, அளவுக்கு அதிகமான உணவு, நிகோட்டின் கலந்த வஸ்துகள் மன அழுத்தத்தையும் கோபத்தையும் அதிகரிக்கும்.

உடற்பயிற்சி, விருப்பமான வேலையில் ஈடுபடுதல், கருத்துப் பரிமாற்றம், திட்டமிடுதல், சமூகப் பணிகளில் ஈடுபடுதல், சுவாசப் பயிற்சி, யோகா போன்றவை மன அழுத்தத்தையும் கோபத்தையும் குறைக்க உதவும்.

சில எளிய கேள்விகளை நம்மிடம் நாமே எழுப்பிக்கொண்டு அதற்கான விடையைக் கண்டறிந்தாலே கோபத்தையும் அதற்குக் காரணமான மன அழுத்தத்தையும் எளிதாகக் கட்டுப்படுத்த முடியும்.

அவற்றில் சில இதோ:

நம்மைப் பாதிக்கும் இந்த விஷயத்தைப் பற்றி ஒரு வாரத்துக்குப் பிறகு நாம் என்ன நினைப்போம்?

கோபம் கொள்ள நமக்குத் தார்மீக உரிமையுள்ளதா?

இந்தக் கோபத்தால் ஏதாவது மாற்றம் உண்டாக வாய்ப்பு உள்ளதா?

கோபத்தைத் தவிர வேறு என்ன உணர்கிறோம்?

எந்த நம்பிக்கை நம்மைக் கோபம்கொள்ள வைக்கிறது? அது சரியானதுதானா?

கோபம் கொள்ளும்படி செய்யும் அந்த மனிதரின் செயலுக்குப் பின்னால் உள்ள காரணம் என்ன?

சிகரம் தொடலாம்

எதையாவது செய்து அல்லது வேகமாக ஓடி வெற்றி பெற வாழ்க்கை என்பது பந்தயமும் அல்ல; போட்டியும் அல்ல. வாழ்க்கை என்பது ரசித்து வாழ்வது. அதில் திறமையற்றவர் என எவரும் இல்லை. ஆனால், அந்தத் திறமை எது என்பதைக் கண்டறிவதில்தான் நம் வாழ்வின் மகிழ்ச்சி உள்ளது. முதலையின் பலம் நீரில், சிங்கத்தின் பலம் நிலத்தில், சிங்கம் முதலை மாதிரி நீரில் வாழ முயன்றாலோ முதலை சிங்கத்தைப் போன்று நிலத்தில் வாழ முயன்றாலோ அது ஆபத்தில் முடியும். நம் திறமை எது என்பதை நேர்மையாகச் சுய பரிசோதனை செய்தால், நம் வாழ்வின் விருப்பப் பாதை எது என்பது தெளிவாகும். பாதை தெளிவானால், பயணம் இலகுவாகும். பயணம் எளிதானால், தீய அழுத்தமும் கெட்ட கோபமும் இன்றி சிகரம் தொடலாம்.


தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x