Last Updated : 13 May, 2020 03:28 PM

 

Published : 13 May 2020 03:28 PM
Last Updated : 13 May 2020 03:28 PM

’’உதிரி கேரக்டர், உதிரி கேரக்டர்னு நிறைய பண்ணிட்டேன் சார்... நல்ல கேரக்டர் வந்தா பண்றதுக்கு ரெடி!’’ - நடிகர் சிவசந்திரன் மனம் திறந்த பேட்டி 

’’இப்ப கதையை ரெடி பண்ணிட்டுப் போனா ஒரு நடிகர் ‘என்ன படம்லாம் பண்ணிருக்கீங்க?’ன்னு பயோடேட்டா கேக்கறார். இன்னொரு நடிகர், ‘உங்க பேங்க் பேலன்ஸ் எவ்வளவு?’ன்னு கேட்டார். இன்னொரு நடிகர், ‘ஒரு படம் பண்ணிட்டு வாங்களேன்’னு சொன்னார். இங்கே, தோத்தவன் ஜெயிக்கவே முடியாதுன்னு நினைக்கிறாங்க. தன்னை வளர்த்துக்கிட்டு வரலாமே. தோத்தவன் நிச்சயம் ஜெயிப்பான்’’ என்று உறுதியுடன் தெரிவித்தார் சிவசந்திரன்.


’இந்து தமிழ் திசை’யின் ‘RewindWithRamji' நிகழ்ச்சிக்காக, நடிகர் சிவசந்திரன் நீண்ட நெடிய பேட்டி அளித்தார்.


சிவசந்திரன் வீடியோ பேட்டியின் எழுத்தாக்கம் இது :


சிவசந்திரன் பேட்டி தொடர்கிறது...


’’முன்பெல்லாம் எழுதி வைத்திருந்த கதையைக் கொடுத்து, காட்டி, படமாக எடுக்கலாம் என்று கேட்டுக்கொண்டிருந்தேன். ஆனால் இப்போது அப்படிச் செய்வதுமில்லை; கேட்பதுமில்லை. ஏன்னா... அப்போ என் கதையைத் திருடிட்டாங்க. அந்தக் கதை திருடப்பட்டு, படமாக்கப்பட்டு, வெற்றிப்படமாகவும் போயிருக்கு. அதுக்காக அந்த டைரக்டர், எனக்கு ‘அப்பாலஜி’ லெட்டரும் எழுதினாரு. அந்த டைரக்டர் பேர்லாம் வேணாம். விட்ருவோம்.


சிலர்பேர்கிட்ட சொன்ன கதைலேருந்து பாதியை மட்டும் எடுத்துக்கிட்டு, படமா எடுத்தாங்க. அதனால திரையுலகுல கதை சொல்றதையே நிறுத்திட்டேன். வேணாம்னு விட்டுட்டேன்.


87-ம் வருஷம், நானும் லட்சுமியும் கல்யாணம் பண்ணிக்கிட்டோம். அதுக்குப் பிறகுதான் சொந்த பேனர் ஆரம்பிச்சோம். தமிழ், கன்னடத்துல படம் பண்ணினோம். நாங்கபாட்டுக்கு எங்க வாழ்க்கையைப் பாத்துட்டு சந்தோஷமா போயிட்டிருக்கோம். என்னுடைய இயல்புக்கு இதெல்லாம் ஒத்துவரலை.


இப்போ உள்ளவங்ககிட்ட போய்,’நான் படம் பண்றேன். வாய்ப்பு கொடுங்க’ன்னு கேக்கல. 2000 அல்லது இடைப்பட்ட காலத்துல ‘ஜோக்கர்’னு ஒரு முழு காமெடிப்படம் பண்ணலாம்னு இருந்தேன். விவேக்கை வைச்சுதான் பண்றதா இருந்தேன். எல்லா ஏற்பாடும் சரியாப் போயிட்டிருந்துச்சு. ஆனா சில காரணங்களால, அதை அப்படியே விட்டாச்சு.


அப்புறம், புதுமுகங்களை வைச்சு படம் பண்ணலாம்னு இருந்தேன். ஸ்கிரிப்டையெல்லாம் ரெடி பண்ணி வைச்சிருந்தேன். சரியான நடிகர்களா கிடைக்கலை. சரி... தமிழ், தெலுங்குன்னு ரெண்டு மொழியிலயும் பண்ணிடலாம்னு நினைச்சிருக்கேன். எம் பொண்ணு படிப்பை முடிச்சதும் ஆரம்பிக்கலாம்னு இருக்கேன்.
இப்பதான் நிறைய அவுட்லெட்ஸ் இருக்கு. ஷார்ஸ் பிலிம், நெட்பிளிக்ஸ், வெப்சீரீஸ்னு பலதும் இருக்கு. எனக்கு கதை எழுதும் திறமையை கடவுள் கொடுத்திருக்கான். எங்கிட்ட நிறையவே ஸ்கிரிப்ட் இருக்கு.


தவிர, நிறைய படிக்கிறேன். அப்பலாம் நான் ‘ஃபிக்‌ஷன்’ படிச்சிட்டிருந்தேன். இப்போ தத்துவம் உள்ளிட்ட பல விதமான புத்தகங்களைப் படிக்கிறேன். இதெல்லாம் தற்பெருமைக்காகச் சொல்லல. நிறைய விஷயங்களைத் தெரிஞ்சுக்கணும்னு ஆசைப்படுறேன். எப்பவுமே நிறைய படிக்கணும்னு ஆசைப்படுறவன் நான்.
‘வயசாயிருச்சு, அதனால புக் படிக்கிறேன்’னு அர்த்தமில்ல. அப்போ ஏன் கமலை வைச்சு பண்ணலை, ரஜினியை வைச்சு பண்ணலை, விஜயகாந்தை வைச்சு ஏன் பண்ணலை’ன்னு கேட்டா... நான் பண்ணலை. அவங்களுக்கு சம்பளம் கொடுக்கிற அளவுக்கு எங்கிட்ட பணமில்லை.


இன்னொன்னும் சொல்றேன்... நாம நடிச்சிக்கிட்டே இருந்தா, அதுலேருந்து ஒரு பகுதி காசை எடுத்து படம் தயாரிக்கலாம். இப்படி வந்தா, அப்படி செலவு பண்ணலாம். அப்பலாம் நான் நடிக்கும்போது, எவ்ளோ பணம் கொடுத்தாங்க, எத்தனை பேர் பணம் கொடுத்தாங்க. உண்மையைச் சொல்லணும்னா, நிறைய பேர் பணமே கொடுக்கலை. ‘நீ நடிக்கறதே பெரியவிஷயம். பெரியபேனர் படத்துல உன்னை நடிக்கறதுக்குப் போட்ருக்கேன்’னு சொல்லிட்டாங்க. பேனர் பேரைச் சொல்லியே நம்மளை பயமுறுத்துவாங்க. இல்லியா... டைரக்டர் பேரைச் சொல்லி பயமுறுத்துவாங்க.


இதையெல்லாம் நினைச்சுப் பாத்தா, செம காமெடி. நான், சத்யராஜ்லாம் பணம் வாங்கறதுக்காக கஷ்டப்பட்டுருக்கோம். தயாரிப்பாளர்கிட்டேருந்து மூவாயிரம் ரூபா சம்பளம் வாங்கறதுக்கு படாதபாடு பட்டுருக்கோம்.இதேபோல ரஜினியும் கஷ்டப்பட்டிருக்கார்.


பணம்ங்கறதைக் கண்ணுல காட்டமாட்டாங்க. அதையெல்லாம் உடைச்சு உடைச்சு வர்றதுங்கறது பெரியவிஷயம். இன்னிக்கெல்லாம், பசங்க நல்லாவே சம்பாதிக்கிறாங்க. சப்போர்ட்டிங் நடிகர்களும் நல்லா சம்பாதிக்கிறாங்க. அப்பலாம், புரொட்யூசரைப் பாத்தா, பெரிய புரொடியூசர்லாம் பெரிய நடிகர்களைப் போட்டு படம் எடுத்தாங்க. சின்ன புரொட்யூசரைப் பாத்தா, அவங்களாம் பைனான்சியரை நம்பி இருப்பாங்க. ’தம்பி, உன்னை வைச்சுப் படமெடுக்கறேன் தான். ஆனா, படம் எடுத்து, வெளியாகி, ஓடுச்சுன்னா, பணம் தரேன்’னு சொல்லுவாங்க. இப்படியாத்தான் ஓடுச்சு காலம்.


ஆனா இப்போ கார்ப்பரேட் கம்பெனி வந்துருச்சு. வேறவிதமா ஆயிருச்சு.


ஷங்கர் இப்படி பிரமாண்டமா படம் எடுக்கிறார்னா, அதுக்கு உண்டான கட்டமைப்பு பிரமாதமா இருக்கு. இல்லேன்னா, அவரால படமெடுக்க முடியாது. ஷங்கரோட லக்... அவருக்கு முதல் படத்துலேருந்தே நல்ல புரொட்யூசர் கிடைச்சாங்க. நல்ல ரைட்டர்ஸைக் கொடுத்தாங்க. நல்ல கேமிராமேனைக் கொடுத்தாங்க. ஷங்கரோட ‘விஷன்’ பிரமாண்டம். அவருக்கு எல்லாமே பக்கபலமாச்சு.


இன்னிக்கி, சினிமாவே வேற விதமாயிருச்சு. ‘நடிக்கலியா சார்’னு கேக்கறாங்க. ‘நடிக்கமாட்டோம்னா சொல்றோம். நடிக்கறதுக்குத் தயாராத்தான் இருக்கோம். ’அரசி’ சீரியல்ல நான் நல்லா நடிச்சிருக்கேன்னு எல்லாரும் சொன்னாங்க. ஆனா சீரியல்ல தொடர்ந்து பல பேர் கூப்பிட்டாங்க. நான் வேணாம்னுட்டேன்.


சீரியல்ல என்ன விஷயம்னா... திடீர்னு தூக்கி வைப்பாங்க. அப்புறம் திடீர்னு காணாமப் போயிருவாங்க. அப்புறம்... உயிரைக் கொடுத்து நடிச்சிருப்போம். ஒரு சின்ன பாராட்டு கூட கிடைக்காது. ஓகே அடுத்த ஷாட், அடுத்த ஷாட்னு ஓடிக்கிட்டே இருக்கணும். அது நமக்குத் தேவையில்லை.


நாம நடிகன். நல்ல கேரக்டர் அமைஞ்சா நடிக்கத் தயார். இவங்க என்ன செய்வாங்க... வெள்ளை சட்டையும் வேட்டியும் கொடுத்து அப்பா கேரக்டர்னு உக்காரவைப்பாங்க. ‘இவ என் பொண்ணு, கண்கலங்காம பாத்துக்கோங்க தம்பி’ன்னு ஹீரோகிட்ட சொல்லணும். போதும்... உதிரி கேரக்டர் பண்ணினதெல்லாம் போதும்.


நம்ம நண்பர் கூப்புடுறாரு... அப்படின்னு சின்னச்சின்ன கேரக்டர்லாம் பண்ணியாச்சு. நம்மளை ஏமாற்றப்பட்டு பண்ணிருக்கோம், நாமளே ஏமாந்து பண்ணிருக்கோம்’’ என்று சிரித்துக்கொண்டே சொல்கிறார் சிவசந்திரன்.


- நினைவுகள் தொடரும்


- சிவசந்திரனின் முழுமையான வீடியோ பேட்டியைக் காண:

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x