Last Updated : 13 May, 2020 02:58 PM

 

Published : 13 May 2020 02:58 PM
Last Updated : 13 May 2020 02:58 PM

அயோத்திதாசர் 175: அத்தியாயம் 6- கொள்ளை நோய் காலமும்; குறையாத‌ சாதியமும் ‌

அயோத்திதாசரை சித்த மருத்துவ‌ர், பத்திரிகையாளர், பவுத்தர் என்ற ஒரு குறிப்பிட்ட வரையறைக்குள் அடக்கிவிட‌ முடியாது. அவர் பல துறைகளிலும் உயர்ந்து, படர்ந்து விரிந்திருக்கிறார். அவரது காலத்தில் எல்லாப் பிரச்சினைகளுக்கும் முகங்கொடுத்து, ஆழமான‌‌ கருத்துக்களைப் பகிர்ந்திருக்கிறார். பேசுவ‌தோடு நில்லாமல் ஆலோசனை, விமர்சனம், அரசுக்கு விண்ணப்பம் என தொடர்ந்து செயல்பட்டும் இருக்கிறார். இதனால் ஆய்வாளர்கள் சூட்டிய 'நவீன இந்தியாவின் மாபெரும் சிந்தனையாளர்' எனும் அடைமொழி அயோத்திதாசருக்கு கச்சிதமாகப் பொருந்தியது.

19-ம் நூற்றாண்டின் மத்தியில் தொடங்கி 20-ம் நூற்றாண்டின் தொடக்கம் வரை, தொழில்நுட்பம் வளர்ந்திராத காலத்தில் வாழ்ந்தவர் அயோத்திதாசர். அவ‌ரின் தனிப்பட்ட வாழ்க்கை, சமூகச் செயல்பாடு, சிந்தனைகள் குறித்த பெரும்பாலான தகவல்கள் இன்னும் கிடைக்கவில்லை. ஆனால், அவரது வாழ்வின் கடைசி 7 ஆண்டுகளின் பதிவுகள் 'தமிழன்' இதழ் மூலம் ஓரளவுக்கு கிடைத்திருக்கிறது. அதில் சாதி ஒழிப்பு, இட ஒதுக்கீட்டுப் பிரச்சினை, இந்தி எதிர்ப்பு, பெண் விடுதலை, பகுத்தறிவு, பவுத்தம் போன்ற தீவிர சமூகப் பிரச்சினைகள் குறித்து விரிவாக விவாதித்திருப்பதைக் காண முடிகிறது.

அதே வேளையில் அயோத்திதாசர்,‌‌ 1907-ம் ஆண்டு முதல் 1914-ம் ஆண்டு வரை தமிழகத்தைத் தாக்கிய நோய்களைப் பற்றியும், அவை சார்ந்த பிரச்சினைகளைப் பற்றியும் தொடர்ந்து பதிவு செய்துள்ளார். மனிதனால் உருவாக்கப்பட்ட சமூக நோய்களை எதிர்த்த அதே வேளையில், மனிதனை அழிக்க வந்த கிருமி நோய்களில் இருந்து சமூகத்தைக் காக்கவும் முயன்றார். சித்த மருத்துவராகவும் ச‌மூக மருத்துவராகவும் செயல்பட்ட அயோத்திதாசரின் இந்த‌ப் பார்வை, நூற்றாண்டைக் கடந்தும், சமகால கரோனா காலத்தோடு பொருந்திப் போகிறது.

1910-களில் தமிழகத்தைப் பெரும் பஞ்சமும், அடுக்கடுக்கான நோய்களும் வேகமாக வாட்டின. அதிலும் பிளேக் நோயின் தாக்கம் கடுமையாக இருந்தது. அதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, நோயாளிகளுக்கான சிகிச்சை, உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து தமிழனில் 'சேலத்தில் பிளேக், செங்கல்பட்டில் பிளேக்' என ஊர் வாரியாக செய்தி வெளியிட‌ப்பட்டது. இந்த நெருக்கடியான காலத்திலும், சாதிக் கொடுமைகள் நிலவியதை அயோத்திதாசரின் எழுத்துகள் படம்பிடித்துக் காட்டுகின்றன. அதிலும், சாதிப் பாகுபாட்டின் காரணமாக சுத்தமான நீரைப் பெரும்பான்மை மக்கள் பயன்படுத்த முடியாத நிலை, சுகாதாரமற்ற சூழல், நோய்க் காலத்திலும் வெளிப்பட்ட சாதிக் கொடுமை, அதிகாரிகளின் அலட்சியம் ஆகியவற்றின் காரணமாகவே கொள்ளை நோய் (பெருவாரி காய்ச்சல்) பரவியது என்கிறார் அயோத்திதாசர்.

1911-ம் ஆண்டு நவம்பர் 8-ம் தேதி வெளியான தமிழன் இதழில், 'கணம் தங்கிய பிரிட்டிஷ் ஆட்சியர் கண்ணோக்க (கவனிக்க) வேண்டும்’ என்ற கட்டுரையை எழுதி இருக்கிறார். அதில் தமிழகத்தில் பெரும்பான்மையான பொதுக் குளம், கிணறுகளில் ஏழைகள் நீர் எடுத்துக் குடிக்க முடியாத நிலை நிலவுகிறது. ஆதிக்க சாதியினர் சுத்தமான நீரைக் குடிக்கவிடாமல் தடுக்கிறார்கள். இதனால் பாண்டியன் என்பவர் தங்களுக்கெனத் தனிக் கிணறு வெட்ட முயற்சித்துள்ளார். மற்றவர்களின் பிரச்சினைகளைப் பேச அவர்கள் தரப்பின் பிரதிநிதி சட்டப்பேரவைக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளன‌ர். அதேபோல, ஏழைகளின் பிரச்சினையைப் பேச இவர்கள் மத்தியில் இருந்தே ஒருவரை சட்டப்பேரவைக்குப் பிரதிநிதியாக‌ நியமிக்க வேண்டும் என அயோத்திதாசர் வலியுறுத்துகிறார். அவரின் இந்தக் கருத்தே இன்றைய தனித் தொகுதிகளுக்கான ஆரம்பகால‌ வித்துகளில் ஒன்று.

1911 அக்டோபர் 4-ம் தேதி வெளியான தமிழனில்,' பஞ்சமும் பெருவாரிக் காய்ச்சலும் ( கொள்ளை நோய்) பிளேக்கும் உண்டாவதற்குக் காரணம் என்ன?’ என்ற கட்டுரையை அயோத்திதாசர் எழுதினார். அதில், இந்தியாவை பிரிட்டீஷார் கைப்பற்றிய போதே இந்தியர்கள் தங்கள் சாதி, மதப் பிரச்சினைகளை எல்லாம் வீட்டுக்குளே வைத்துக்கொள்ள வேண்டும். வாசலைத் தாண்டி அவை தலைநீட்ட‌க் கூடாது என எச்சரித்தனர். ஆனால், ஆதிக்க சாதியினர் பிரிட்டீஷாரை எதிர்த்துக்கொண்டே, அவர்களின் அரசு வேலைகளில் புகுந்துவிட்டனர். அதன் மூலம் கிடைத்த அதிகாரத்தையும் பணத்தையும் கொண்டு தம்மைச் சுற்றியுள்ள ஏழை மக்களுக்கு எதுவும் செய்யாமல் இருக்கிறார்கள். இதனால் பஞ்சமும் கொள்ளை நோயும் பிளேக்கும் பரவிக்கொண்டிருக்கிறது. இந்த அரசு துரோகிகள் (அதிகாரத் துஷ்பிரயோகம் செய்பவர்கள்), குரு துரோகிகள் (கற்ற கல்விக்கு எதிரானவர்கள்), குடித் துரோகிகள் (மக்களுக்கு எதிரானவர்கள்) மென்மேலும் பெருகுவதாலே பஞ்சமும், பெருவாரிக் காய்ச்சலும் (கொள்ளை நோய்), பிளேக்கும் நாளுக்கு நாள் பெருகிக்கொண்டே போகிறது என சாடினார் அயோத்திதாசர்.

இதேபோல 1913-ம் ஆண்டு ஆகஸ்ட் 6-ம் தேதி வெளியான தமிழன் இதழில், 'சென்னையில் நளிர் (குளிர்) சுரம்’ என்ற கட்டுரையை எழுதினார். அதில் அயோத்திதாசர், சென்னையில் பெய்த மழை வெள்ளம் குளம் குட்டைகளில் தேங்கியுள்ளது. அந்த அசுத்த நீரை அள்ளிப் பருகியதாலே இந்த‌ குளிர் சுரமும், வயிற்று வலியும், பொறுக்க முடியாத மண்டைக் குடைச்சலும் ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் பெரும் வாதைக்கு ஆளாகி இருக்கிறார்கள்’ என்று எழுதினார். இதற்கெல்லாம் அசுத்த நீரை மட்டுமே குற்றம் சொல்லாத அயோத்திதாசர், ‘உணவுப் பொருட்களில் தேவையற்றதைக் கலப்படம் செய்வதாலும், பழைய, கெட்டுப்போன உணவுகளைக் கடைகளில் விற்பதாலும் இந்நோய் ஏற்படுகிறது. இதை தட்டிக்கேட்கும் மக்களைக் கடைக்காரர்கள் ஒன்று சேர்ந்து தாக்குகிறார்கள்.

கிராமப்புறங்களில் இருக்கும் ஆதிக்க‌ சாதியினர், சாதி பேதமில்லாத ஏழை மக்களை நல்ல தண்ணீர் மொண்டு குடிக்க விடாமல் தடுக்கிறார்கள். நகரத்தில் இருக்கும் ஆதிக்க சாதியினர் சாதிப் பாகுபாட்டின் காரணமாக, ஏழை மக்களுக்கு பாழான பொருளை விற்றுப் பணத்தைச் சம்பாதிக்கிறார்கள். இவர்களுக்கு ஜீவகாருண்யம் என்பது க‌னவிலும் கிடையாது. இத்தகையோர் மீது அரசு நடவடிக்கை எடுத்து, ஏழை மக்களையும் உழைப்பாளிகளையும் ஈடேற்றல் வேண்டும். இம்மக்கள் சுகமடைவதே அரசுக்கு நல்லது. இல்லாவிடில் இந்த வியாதி மற்றவருக்கும் பரவி, தேசத்தையே கலங்க வைக்கும். அதே வேளையில், கடைச் சரக்கில் கலப்பு சேர்ப்போர் மீது சுகாதார அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என சுட்டிக்காட்டினார். உணவே மருந்து என்பதை உணர்ந்தே அயோத்திதாசர் நூறாண்டுகளுக்கு முன்பே அதில் கலப்படம் செய்யப்படுவதை வன்மையாகக் கண்டித்திருக்கிறார்.

விருதுநகரில் அசுத்தமான நீர் அருந்தி ஏராளமான ஒடுக்கப்பட்டோர் விஷபேதியால் மடிந்த செய்தியறிந்து அயோத்திதாசர் கோபம் கொண்டார். அது தொடர்பாக அவர் எழுதிய கட்டுரையில், ‘விருதுப்பட்டியில் வாழும் பெரிய சாதி என்போரே, உங்களுக்கு இர‌க்கம் வரவில்லையா? கல் நெஞ்சம் மாறவில்லையா? ஒடுக்கப்பட்டோர் உங்களைப் போன்ற சக மனிதர்கள் அல்லவா? அவர்களை ஏன் பொதுக் கிணறு, குளங்களில் நீர் எடுக்க விடாமல் தடுக்கின்றீர்கள்? அசுத்த நீரைக் குடித்த ஏழைக்குடிகள் மடிகின்றார்களே! மிருகங்களுக்கு நீர் கொடுக்கும் நீங்கள், இந்த மக்களுக்குக் கொடுக்காதது ஏன்? இப்படிப்பட்ட கல் நெஞ்சக்காரர்களுக்குச் சுதந்திரம் தேவையா?’ என சரமாரியாகக் கேள்வி கேட்டார். அதேபோல 1914, ஏப்ரல் 29 இதழில், 'புலியும் பசுவும் ஒரு துறையில் இறங்கி நீரருந்திய தன்ம (தர்ம) தேசம், மனிதனோடு மனிதன் இறங்கி நீரருந்துவதற்கு இடமில்லா அதன்ம (அதர்ம) தேசமாகி விட்டதே' என்றும் அயோத்திதாசர் சாடினார்.

கொள்ளை நோயும் சமூக நோயும் பீடித்திருந்த தமிழகத்தை பெரும் பஞ்சமும் மேலும் ஆட்டுவித்தது. அது பற்றிய பதிவுகளையும் அயோத்திதாசர் தொடர்ந்து தமிழனில் பதிவு செய்தார். 1912 அக்டோபடர் 23-ம் தேதி வெளியான இதழில், 'பஞ்சம்! பஞ்சம்!! பஞ்சம்!!!' என்ற பெயரில் நீண்ட கட்டுரை ஒன்றை எழுதினார். அதில், ‘சுதந்திரம், சுதேசி, தேசப்பற்று எனப் பெருங்கூச்சலிட்டு பெருங்கூட்டங்களைக் கூட்டினர். வீதிவீதியாய் பணம் வசூலித்தார்கள். இப்போது ஏழை மக்கள் பஞ்சத்தில் தவிக்கும்போது அந்த துயரைத் துடைக்க ஒருவரும் வரவில்லை. இவர்களின் தேசப்பற்று என்பதே சுயநலம் சார்ந்தது. பஞ்ச காலத்திலே ஏழை மக்களைக் கவனிக்காதவர்கள் மற்ற காலத்தில் கனவிலும் கவனிக்க மாட்டார்கள்’ என்றார். அயோத்திதாசரின் இந்த அவதானிப்பு இன்றைய காலகட்டத்திலும் ஆட்சியாளர்களின் செயல்பாட்டுடன் பொருந்திப்போகிறது.

ஞான.அலாய்சியஸ் தொகுத்த 'அயோத்திதாசர் சிந்தனைகள்' தொகுதி ஒன்றில் தமிழர்களின் பிரதான உணவான அரிசி விலை உயர்வு குறித்த பதிவுகள் நிறைய இடங்களில் இடம்பெற்றுள்ள‌ன. அயோத்திதாசர் பஞ்சம், விவசாயம், சுயராஜ்ஜியம் பற்றி பேசும்போது மட்டுமல்லாமல், 'அரிசி ரூபாயிற்கு 4 படியா? (நவம்பர் 18, 1907)', 'அரிசி ரூபாயிற்கு நாலு படியே! அரிசி ரூபாயிற்கு நாலு படியே? (செப்டம்பர் 11, 1912)' ஆகிய தலைப்புகளில் நீண்ட கட்டுரைகளை எழுதினார்.

அதில், ’ஞானமும் கல்வியும் நாழி அரிசியில் என்பது பழமொழி. மண் வைத்துச் சுவர் எழுப்புவதைப் போல, உடலைச் சோறுதான் கட்டியெழுப்பி இருக்கிறது. அந்த அரிசியோ ஒரு ரூபாயிற்கு நான்குபடி விற்கின்றார்கள். பிரிட்டீஷ் அரசாங்கத்தில் ஒரு மாதத்துக்கு ரூ.200 முதல் 4 ஆயிரம் வரை வாங்குவோருக்கு அரிசி விலை உயர்வு பற்றி என்ன கவலை இருக்கப்போகிறது? சென்னை நகராட்சி எல்லைக்குள் ரூபாய்க்கு நாலுபடி அரிசி என‌ விற்றாலும் அதில் தவிடு, மண், சாம்பல், பலவகை அரிசிக் கலப்பு உள்ளது. இதனால் ஏழை மக்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாகி இருக்கிறார்கள். உழுது பயிரிடும் உழைப்பாளிகள் யாவரையும் மனிதர்களாக மதிக்காமல் அரை வயிற்றுக் கஞ்சியும் கொடுக்காமல், சுத்த நீரைப் புழங்க விடாமல் தடுத்ததாலே தென்னிந்திய உழைப்பாளிகள் பெரும்பாலோர் ஊரை விட்டு வெளியேறினார்கள்’ எனத் தமிழர்கள் புலம்பெயர்ந்ததன் காரணத்தையும் பதிவு செய்கிறார் அயோத்திதாசர்.

நோய், பஞ்சம், விலைவாசி ஏற்றம் உள்ளிட்ட அடுக்கடுக்கான நெருக்கடியில் சிக்கும் சமூகம், எப்படி வாழ வேண்டும் என்று அயோத்திதாசர் அறிவுரை சொல்கிறார். அதாவது, ‘மனிதனை மனிதனாக மதிக்காதவன் மிருகத்துக்கும் கீழானவன். ஏனென்றால் மாட்டுக் கூட்டத்தில் சிவப்பு, க‌றுப்பு, வெளுப்பு நிற மாடுகள் எல்லாம் ஒற்றுமையாக வாழ்கின்றன. அவை ஒருபோதும் யானைக் கூட்டத்திலும், குதிரைக் கூட்டத்திலும் கலப்பதில்லை. மனிதனை மனிதனாக மதிக்காதோர் வாழும் தேசத்தில் விவசாயம், விஞ்ஞானம், நாகரிகம் எதுவும் வளர்ச்சி அடையாது. உள்ளதும் நாசமாகத்தான் போகும் என்பது சத்தியம். ஆதலின் ஒரு மனிதன் நலமோடு வாழ வேண்டுமாயின், அவன் பிறர் சுகத்தைப் பேணுதல் வேண்டும்’ என்கிறார் அயோத்திதாசர்.

கரோனா காலத்தில் வீதிகளில் அலைமோதும் கூட்டத்தைப் பார்க்கும்போது, அயோத்திதாசரின் வார்த்தைகளுக்குக் கூடுதல் அர்த்தம் கிடைக்கிறது. 'ஒரு மனிதன் நலமோடு வாழ வேண்டுமாயின், அவன் பிறர் சுகத்தைப் பேணுதல் வேண்டும்!'

(பண்டிதரைப் படிப்போம்...)
இரா.வினோத் - vinoth.r@hindutamil.co.in

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x