Last Updated : 13 May, 2020 11:29 AM

 

Published : 13 May 2020 11:29 AM
Last Updated : 13 May 2020 11:29 AM

’இசை -இளையராஜா (அறிமுகம்)’ ; ’மச்சானைப் பாத்தீங்களா’,  ‘அன்னக்கிளி’ 44 ; இளையராஜா 44

தமிழ் சினிமாவின் இசையை, அ.மு., - அ.பி. என்று, அதாவது அன்னக்கிளிக்கு முன்பு, அன்னக்கிளிக்கு பின்பு என்று பிரித்துப் பார்ப்பதுதான் சாமான்ய இசை ரசிகனின் அளவுகோல். அந்தப் படத்தின் மூலமாக வந்தது, தமிழ் சினிமா இசையின் புதிய திறவுகோல்.


அன்னக்கிளிக்கு முன்பு வரை, நம்மூர் டீக்கடைகளில் கூட ஹிந்திப்பாடல்களே முழங்கிக் கொண்டிருந்தன. அந்த ஹிந்திப் பாடல்களை ரயிலேற்றி, மும்பைக்கே அனுப்பி விட்டு, நம்மூரின் இசையை நாம் கேட்கச் செய்த வகையில், அன்னக்கிளி, சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த படமாகத் திகழ்கிறது. சரித்திரம் படைத்த இசையின் சொந்தக்காரர் இளையராஜா!

’அன்னக்கிளி’... மிக மிக எளிமையான சாதாரணமான, எல்லோருக்கும் புரிந்த, தெரிந்த கிராமத்துக் கதைதான். அன்னக்கிளியாக சுஜாதா, மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார். வாத்தியார் தியாகுவாக சிவகுமார், படாபட் ஜெயலட்சுமி, சுஜாதாவின் முறைமாமனாக ஸ்ரீகாந்த், செந்தாமரை, தேங்காய் சீனிவாசன் என அவரவரும் அவரவருக்கான முத்திரைகளை வெகு அழகாகப் பதித்திருப்பார்கள்.

ஊருக்குப் புதிதாக வரும் வாத்தியார் சிவகுமாருக்கு, பல விஷயங்களில் வாத்தியாராக இருந்து கற்றுத் தரும் சுஜாதா... இந்த இருவருக்குள்ளும் இருக்கிற காதலை இருவருமே சொல்லிக்கொள்ளவில்லை. அதற்குள் நாட்டாமையின் மகளுக்கும் சிவகுமாருக்கும் திருமணமாகிவிடுகிறது. ‘சொல்லித்தொலைச்சா என்னவாம்’ என்று ஏங்கச் செய்து, தவிக்கவிட்டு, கதறடித்திருப்பதில்தான் திரைக்கதையின் வெற்றியே அடங்கியிருக்கிறது. தேவராஜ் - மோகன் எனும் இரட்டையரின் இயக்கம், மிகச் சிறப்பு. அதிலும் கண்ணகி படமும் மதுரை எரிப்பும் டூரிங் தியேட்டர் எரிவதும் என பின்னப்பட்ட க்ளைமாக்ள் ஏற்படுத்திய தாக்கம் கொஞ்சநஞ்சமல்ல! குறிப்பாக, முழுக்க முழுக்க கிராமத்தில் படமாக்கியிருப்பதும் அந்த லொகேஷனும் கொள்ளை அழகு.


கிராமத்தில், யார் வீட்டில் என்ன விசேஷமென்றாலும் ‘கூப்பிடு அன்னக்கிளியை’ என்பார்கள். அவரும் தன் வீட்டு விசேஷம் போல், எல்லா வேலைகளையும் இழுத்துப் போட்டுக்கொண்டு செய்வார். அன்னக்கிளியின் ஒரே சந்தோஷம், பாட்டுதான்.

அங்கே கூவுகிற குயில்களையும் குருவிகளையும் துணைக்குச் சேர்த்துக்கொண்டு, அவர் பாடுகிற பாடல்கள்தான், அன்னக்கிளி கதாபாத்திரத்தை, நமக்குள் சிம்மாசனமிட்டு உட்கார வைத்தது. படத்தையும்தான்!

’அவள் ஒரு தொடர்கதை’க்குப் பிறகு, ‘அவர்கள்’ படத்துக்குப் பிறகு, அதேபோல் கனமானதொரு கதைக்களமும் கேரக்டரும் சுஜாதாவுக்கு. அங்கே நகர வாழ்க்கையில் கவிதாவாக வாழ்ந்தவர், அனுவாக வாழ்ந்தவர்... இங்கே ’அன்னக்கிளி’யில் கிராமத்தில் புகுந்து புறப்பட்டிருப்பார்.

1976ம் வருடம் மே மாதம் வெளியான அன்னக்கிளி, கோடையின் மிகப்பெரிய விருந்தாயிற்று. அடிக்கிற வெயிலுக்கு படத்தின் இசையே நிழலாக அமைந்து, ரசிகர்களுக்கு மிகச்சிறந்த இளைப்பாறலைக் கொடுத்தது.

’இசை - இளையராஜா (அறிமுகம்),’ என்று டைட்டில் கார்டில் போடும்போது, பெரிய பரபரப்பெல்லாம் வரவேற்பெல்லாம் படம் வெளியான போது இல்லைதான். ஆனால் படம் 75 நாள், நூறாவது நாள் என தாண்டுகிற போதெல்லாம், இளையராஜா பெயர் டைட்டிலில் வரும்போது, கூட்டம் விசிலடித்து வரவேற்றது. கைதட்டி ஆர்ப்பரித்தது.

பஞ்சு அருணாசலத்தின் எஸ்.பி.டி பிலிம்ஸ் தயாரிப்பில் வந்தது அன்னக்கிளி. புதிய இசையை சினிமாவுக்குள் கொண்டு வர வேண்டும் என்று விரும்பியவர் முதலில் விஜயபாஸ்கரை தன் படங்களில் பயன்படுத்தி வந்தார். ’மயங்கிறாள் ஒரு மாது’ படமெல்லாம் பாடல்கள் ஹிட்டாகி, எப்போதும் முணுமுணுக்கும் பாடல்களின் வரிசையில் இடம்பிடித்தன. ஆனாலும் ஒரு தேடல் பஞ்சு அருணாசலத்துக்குள் இருந்தது. அதன் விளைவுதான்... அன்னக்கிளியும் இளையராஜாவும்!

ஆனால் ஆர்.செல்வராஜின் கதை ஓகே செய்யப்பட்டு, இளையராஜாவுக்கு பெயரும் அட்வான்ஸூம் கொடுத்த பிறகு, விஜயபாஸ்கர் தரப்பில் இருந்து தயாரிப்பாளருக்கு, ‘என்னங்க இது, நல்ல காம்பினேஷன். ஏன் மாத்துனீங்க’ என்கிற கேள்விகள். பஞ்சு அருணாசலத்தின் சகோதரர்கள், ‘தேவையா இது. விஜயபாஸ்கரே பண்ணட்டும்’ என்று தயாரிப்பாளர்களுக்குள்ளேயே கருத்து வேறுபாடுகள்; மாறுபாடுகள். ஆனால் பஞ்சு சார் உறுதியாக இருந்தார். ‘இளையராஜாதான்’ என்று அடித்துச் சொன்னார். அப்படித்தான் அன்னக்கிளி மூலமாக, தமிழ் கூறும் திரையுலகிற்கு இளையராஜா கிடைத்தார்.

எல்லாப் பாடல்களும் கம்போஸ் செய்து, ஓகே செய்யப்பட்டு, ரிக்கார்டிங் நாளும் வந்தது. ‘ரெடி...’ என்று எண்களைச் சொல்லி முடிக்கவும், பதிவுக்கான பட்டனை அழுத்தவும் மின்சாரம் கட்டாகவும் சரியாக நிகழ்ந்தது. எல்லோரும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டனர்.

அதன் பிறகு, கரண்ட் வந்ததும் மீண்டும் ரிக்கார்டிங் தொடங்கி நடைபெற்றது. பதிவானதைப் போட்டுப் பார்க்கலாம் என்று ரீவைண்ட் செய்து பார்த்தால், டேப் சுற்றிக்கொண்டே இருந்தது. ஆனால் இசையோ பாட்டோ வரவில்லை. அதாவது எதுவுமே பதிவாகவில்லை. ஆனால் பஞ்சு சார் ஆறுதல் சொல்லி, அந்தத் தடைகளையெல்லாம் பொருட்படுத்தாமல், இயங்கச் செய்தார். பாடல்களை எடுத்துக் கொண்டு ஷூட்டிங் சென்று, ஒரே அழுத்தில் படத்தை எடுத்தார்கள்.

கதையை உள்வாங்கி, சிவகுமாரின் நடிப்பும் அவரின் முகபாவமும் இயலாமையும் நம்மைக் கலங்கடிக்கும். ‘மச்சானைப் பாத்தீங்களா’ பாட்டுக்கு தியேட்டரே எழுந்து நின்று ஆட்டம் போட்டது. இடைவேளைக்குப் பிறகு, சுஜாதாவின் நடிப்புடன் தியாகமும் சேர்ந்துகொள்ள, அந்த அன்னக்கிளிதான் மனதில் நிறைந்திருப்பாள். ஸ்ரீகாந்தின் கேரக்டரும் அவரின் மென்மையான மனம் கொண்ட கதாபாத்திரமும் மிகச்சிறந்த நடிப்பை அவரிடமிருந்து தந்தன.

அந்த டூரிங் டாக்கீஸ் க்ளைமாக்ஸ், ரசிகர்களை பதைபதைக்க வைத்தது. தேங்காய் சீனிவாசனை வில்லனாகவும் ஏற்றுக்கொண்டார்கள் ரசிகர்கள். ஆர்.செல்வராஜின் கதைக்கு, தெளிவான திரைக்கதை அமைத்து, எளிமையான வசனங்களையும் இனிமையான பாடல்களையும் தந்திருப்பார் பஞ்சு அருணாசலம்.

தமிழின் கிராமத்துக் கதைக்கு, பட்டிதொட்டியில் இசைக்கப்படுகிற வாத்தியங்களையும் குயில்களையும் குருவிகளையும் கருவியாக்கி, இசையை, படம் முழுவதும் விரவிவிட்டிருக்கும் இளையராஜாதான்... அன்னக்கிளியின் நாயகன்!

‘அன்னக்கிளியே உன்னைத் தேடுதே’, ‘மச்சானைப் பாத்தீங்களா’, ‘சொந்தமில்லை பந்தமில்லை’, ’அடி ராக்காயி மூக்காயி...’ என ஒவ்வொரு பாடலும், அன்னக்கிளிக்கு வலு சேர்த்தன. மிகக்குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட அன்னக்கிளி, மிகப்பெரிய வசூலைப் படைத்தது.

இளையராஜாவுக்கு, பஞ்சு அருணாசலம் கிடைத்தார். பஞ்சுவின் மூலம் அன்னக்கிளி வாயிலாக, நமக்கு இளையராஜா கிடைத்தார். ஆகவே, ராஜா இருக்கும் வரை, இசை இருக்கும் வரை... நம் மனதுக்குள் ‘அன்னக்கிளி’யும் பறந்துகொண்டே இருக்கும்.


1976-ம் ஆண்டு மே 14-ம் தேதி ‘அன்னக்கிளி’ வெளியான நாள். இளையராஜா நமக்குக் கிடைத்து நாளையுடன் 44 ஆண்டுகளாகின்றன.


இளையராஜாவை வாழ்த்துவோம்!

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x