

வண்ணமயமான வாழ்வில் வந்து சேர்ந்திருக்கும் கண்ணுக்குத் தெரியாத கரோனா வைரஸ் நமது வாழ்வைப் புரட்டிப் போட்டிருக்கிறது. கரோனா வைரஸ் என்பதன் விபரீதத்தைப் புரிந்துகொண்டு அதனுடன் வாழப் பழகிக்கொள்ள வேண்டும் என்று வாழ்க்கை நம்மைக் கட்டாயப்படுத்துகிறது. இந்த யதார்த்தத்தைப் பெரியவர்களைப் போலக் குழந்தைகளும் உணர வேண்டும் என்பதை உணர்த்தும் வகையில் ‘லேர்ன் டூ லிவ் வித் கரோனா’ என்னும் அனிமேஷன் குறும்படம் குழந்தைகளுக்காகக் குழந்தைகளால் உருவாக்கப்பட்டுள்ளது.
ஆறுவயதே நிரம்பிய காயாம்பூ என்னும் சிறுமியின் ஓவியங்களையும், பத்து வயதான அபிநந்தன் என்னும் சிறுவனின் தமிழ்க் குரலையும் ஜீவனாகக் கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது இதன் தனிச்சிறப்பு. ஆனந்த விகடன் வார இதழில் வெளியான கலைடாஸ்கோப் தொடர் வழியே பரவலான அறிமுகம் பெற்ற ஓவியர் சந்தோஷ் நாராயணின் குழந்தைகள் இவர்கள். பின்னணியில் தமிழ்க் குரல் வழிநடத்தினாலும் ஆங்கில சப்டைட்டில் மூலம் ஆங்கிலம் மட்டுமே தெரிந்த குழந்தைகளும் படத்தைப் பார்த்துப் புரிந்துகொள்ள முடியும்.
பெர்லின் திரைப்பட விழாவில் "அம்மா அண்ட் அப்பா" படம் மூலமாகக் கவனம்பெற்ற திரைப்பட இயக்குநர்களான ஜெயகிருஷ்ணன் - ஃப்ரான்ஸிஸ்கா ஷுனன்பியார்கர் இணையர் குழந்தைகளுக்கான இந்த அனிமேஷன்குறும்படத்தை உருவாக்கியுள்ளனர். மே 15 அன்று “உலகக்குடும்ப நாள்” கொண்டாடப்படுவதை ஒட்டி இந்தக் குறும்படம் இன்று வெளியிடப்பட்டிருக்கிறது. நடிகரும் ஓவியருமான சிவகுமாரின் இளைய மகனான நடிகர் கார்த்தி இந்தப் படத்தை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.
தொடர்ந்துஜெயகிருஷ்ணன் -ஃப்ரான்ஸிஸ்கா இயக்கத்தில் “ஆடு”என்கிற அனிமேஷன் படத்தின் ஓவிய உருவாக்கத்திலும் இவர்கள் பங்களிக்க இருக்கிறார்கள்.
“அருவி” திரைப்படத்தில்கவனம் பெற்ற இசையமைப்பாளரான வேதாந்த் பரத்வாஜ் இக்குறும்படத்துக்கு இசை அமைத்துள்ளார்.
எளிய மொழி, புத்துணர்வான ஓவியங்கள் வழியே கரோனா குறித்த மருத்துவ உண்மைகளையும் அதை எதிர்கொள்ள வேண்டிய வழிமுறைகளையும் தெளிவுற உணர்த்தும் இந்தக் குறும்படம் குழந்தைகளை மட்டுமல்ல பெரியவர்களையும் கவரும் வகையில் அமைந்துள்ளது.
இந்த அனிமேஷன் குறும்படத்தைக் காண: