கிராமம் காப்போம் ;  உறுதிமொழி ஏற்ற  சிறுதாமூர் மக்கள்

கிராமம் காப்போம் ;  உறுதிமொழி ஏற்ற  சிறுதாமூர் மக்கள்
Updated on
2 min read

உறுதியுடன் இருந்தால், நோயிலிருந்தும் நோய்த் தாக்கத்திலிருந்தும் விடுபடலாம் என்பார்கள். சிறுதாமூர் மக்கள், கரோனா வைரஸ் தாக்காமல், மதுவுக்கு அடிமையாகாமல் கிராமங்களைப் பாதுகாப்போம் என அப்படியொரு உறுதிமொழியை எடுத்துக் கொண்டார்கள்.


தினமும் தேசியக் கொடியேற்றி தேசிய கீதம் இசைக்கும் ஒரே இந்திய கிராமம் செங்கல்பட்டு மாவட்டத்தின் கடைக்கோடியில் உள்ள சிறுதாமூர் என்பது தெரியுமா? திட்டமிட்டு உறுதியுடன் இருந்தால், எதையும் சாதிக்கலாம் என்று செங்கல்பட்டை அடுத்த சிறுதாமூர் மக்களும் செனயநேரி மக்களும், ஒற்றுமையுடன் அதேசமயம் தனித்திருந்து உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர்.


‘நம்முடைய ஊரின் வட்டார வளர்ச்சி அலுவலர், வட்டாட்சியர், மருத்துவர்கள், காவல்துறையினர் ஆகியோரின் வழிகாட்டுதலை ஏற்று, அதைப் பின்பற்றுவோம். சமூக இடைவெளியுடன் தனித்திருந்து நம் கிராமத்திற்குள் வைரஸ் தொற்று நுழையாமல் தடுப்போம். மதுவுக்கு அடிமையாகாமல் இருப்போம்’ என உறுதிமொழி ஏற்ற கிராம மக்களை அக்கம்பக்க ஊர்க்காரர்களெல்லாம் பாராட்டினார்கள்.


இந்த ஊர்களில், கட்டுமான வேலை செய்பவர்கள், விவசாயக் கூலித்தொழிலாளர்கள் ஆகியோருக்கு மளிகைப் பொருட்கள் வழங்கப்பட்டது.செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுப்பாக்கம் ஒன்றியத்தில் உள்ள செனயநேரி, சிறுதாமூர் ஆகிய கிராம மக்களுக்கு நிவாரணப் பொருட்களை, சென்னை நங்கநல்லூர் ரோட்டரி ஹால்மார்க் சங்கத்தினர், கோவிலம்பாக்கம் இன்னர்வீல் கிளப் உறுப்பினர்களும் 110 குடும்பங்களுக்கு வழங்கினார்கள். இந்த நிகழ்ச்சியில், மக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்காக, அரசு அங்கீகரித்த ஹோமியோபதி மாத்திரைகளை டாக்டர் செந்தில்குமார் வழங்கினார். ஊர்மக்கள் அனைவருக்கும் முகக்கவசம் வழங்கப்பட்து.
மேலும், சிறுதாமூர் கிராமத்தில் 47 பயனாளிகளுக்கு சென்னை மயிலாப்பூர் ஶீராமகிருஷ்ண மடம் சார்பில், நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டன. அத்துடன் இரண்டு தவணைகளாக நிவாரணப் பொருட்களை 1800 பேருக்கு வழங்கியது பொதுமக்களிடையே பெரும் வரவேற்பையும் பாராட்டையும் பெற்றது.


அச்சிறுப்பாக்கம் காவல்சரக ஆய்வாளர் சரவணன் முன்னிலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அச்சிறுபாக்கம் வட்டார வளர்ச்சி அலுவலர் பிரகாஷ்பாபு கொரோனா விழிப்பு உணர்வு குறித்துப் பேசினார்.


நகரங்களில் மட்டுமின்றி, தொலைவில் உள்ள கிராமங்களுக்கும் ரோட்டரி சங்கத்தினர் நேரில் வந்து மக்களுக்கு செய்துவரும் சமூக நலப்பணிகள் குறித்து ரோட்டரி சென்னை ஹால்மார்க் சங்கத்தின் தலைவர் ராமா பேசினார்.


மக்களுக்கு கொரோனா நோய்த்தொற்று எற்படாமல் இருக்க அரசுத்துறைகள் எடுத்துவரும் நடவடிக்கைகள் குறித்தும், மதுப்பழக்கத்திற்கு அடிமையானவர்கள் மீண்டும் மதுவை நாடாமலிருக்கப் பின்பற்ற வேண்டிய மனத்திடப்பயிற்சி குறித்தும் சிறுதாமுர் ஸ்ரீ ஸ்ரீநிவாசர் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் விஜயகிருஷ்ணன் முதலானோர் விளக்கினார்கள்.


சிறுதாமூர் மற்றும் செனையநேரி கிராமங்களில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் அச்சிறுபாக்கம் வட்டார வளர்ச்சி அலுவலர் பிரகாஷ் பாபு, அச்சிறுபாக்கம் காவல்துறை ஆய்வாளர் சரவணன், உதவி ஆய்வாளர் சண்முகம், ரோட்டரி ஹால்மார்க் சங்கத் தலைவர் ரமா, மீனாட்சிசேஷாத்ரி, சௌரிராஜன், ரகுபதி, சென்னை கோவிலம்பாக்கம் இன்னர்வீல் கிளப் நிர்வாகி ஸ்ரீபிரியா, ராமகிருஷ்ண மடத்தின் சார்பாக ராஜகோபாலன், சிறுதாமூர் ஸ்ரீஸ்ரீநிவாசர் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் கவிஞர் விஜயகிருஷ்ணன், வட்டார வளர்ச்சி அலுவலகச் செயலர் ஏழுமலை, கிராம நிர்வாக அலுவலர் ரத்னவேலு, முருகன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை விஜயகிருஷ்ணன் செய்திருந்தார்.


நகரங்களைக் கடந்து கிராமங்களைத் தேடி வந்து, நிவாரணப் பொருட்களை வழங்கிய மனித நேய மனிதர்களை கிராம மக்கள் அனைவரும் நெகிழ்ந்து பாராட்டினார்கள்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in