

சிவகங்கை மாவட்டத்தில் கரோனா தடுப்பில் ஈடுபட்டுள்ள போலீஸாரின் குழந்தைகளுக்கு தனியார் பள்ளிகள் கல்வி கட்டணத்தில் சலுகைகள் அறிவித்துள்ளன.
கரோனா வைரஸ் தொற்றை தடுக்க தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
இதையடுத்து தேவையின்றி வாகனங்களில் சுற்றுவோரைத் தடுத்தல், நிவாரண உதவிகள் வழங்கல் உள்ளிட்ட கரோனா தடுப்பு பணிகளில் போலீஸார் ஈடுபட்டு வருகின்றனர்.
அவர்களது சேவையை ஊக்கப்படுத்தும் வகையில் சிவகங்கை மாவட்டத்தில் பணிபுரியும் போலீஸாரின் குழந்தைகளுக்கு கல்வி கட்டணத்தில் சில தனியார் பள்ளிகள் சலுகைகள் அறிவித்துள்ளன. அதன்படி 12 முதல் 50 சதவீதம் வரை தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளன.
அதிலும் சில பள்ளிகள் காவல்துறை பதவிகள் வாரியாகவும் சலுகைகள் வழங்குகின்றன.
எஸ்ஐ மற்றும் அதற்கு மேல் உள்ள பதவிகளில் இருப்போரின் குழந்தைகளுக்கு 30 சதவீதம், காவலர் முதல் சிறப்பு எஸ்ஐயின் குழந்தைகளுக்கு 40 முதல் 50 சதவீதம், ஒரே குடும்பத்தில் மூன்று குழந்தைகள் படித்தால் 50 சதவீதம் கட்டண சலுகை அறிவித்துள்ளன.
இதையடுத்து கல்விக் கட்டணம் செலுத்துவதற்கு முன்பு சிவகங்கை மாவட்ட காவல்துறையில் பணிபுரிவதற்கான சான்று பெற்று பயன்பெறலாம் என மாவட்ட எஸ்பி ரோஹித்நாதன் அனைத்து காவல்நிலையங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.