

மறந்துபோன பாரம்பரிய விளையாட்டுகளை மக்களிடம் கொண்டுசெல்லக் கடந்த காலங்களில் தன்னார்வலர்கள் சிலர் முயற்சி மேற்கொண்டிருக்கின்றனர். ஆனால் அதற்கான பலன் இந்தக் கரோனா ஊரடங்கில்தான் கிடைத்துள்ளது.
பறவைகள் போல் ஆளுக்கொரு திசையில் பறந்துகொண்டிருந்தவர்களை கூட்டினுள் அடைத்துள்ளது கரோனா ஊரடங்கு. இந்த ஊரடங்கில் வீடுகளில் அடைப்பட்டிருக்கும் மக்களுக்கு எல்லா வேலைகளை முடித்தபின்னும் ஏராளமான நேரம் இருந்துகொண்டேதான் உள்ளது. இந்த நேரத்தைச் சரியாகவும் முறையாகவும் பயன்படுத்தக் கைகொடுத்துள்ளது தாயம், பல்லாங்குழி, பரமபதம், ஆடுபுலி ஆட்டம், சொட்டாங்கல் உள்ளிட்ட பாரம்பரிய விளையாட்டுகள்.
“ஈரஞ்சி ஒரு தாயம்”
பல கடுமையான வேலைகளிலிருந்து தங்களை ஆசுவாசப்படுத்திக்கொள்ள தொலைக்காட்சியும் கைப்பேசியும்தான் தீர்வு என்றிருந்தவர்கள் இன்றைக்குத் தாயம் விளையாட்டில் ஒருமுறையாவது ஈரஞ்சி மூணு தாயம் ஒரேசேர விழுந்துவிடாதா எனத் தொடர்ந்து பகடைகளை உருட்டிக் கொண்டிருக்கின்றனர். அத்தியாவசிய பொருட்களை வாங்கும்போது கூடவே தாயப் பகடை இருக்கிறதா எனக் கேட்டுச் செல்கின்றனர் வாடிக்கையாளர்கள்.
பல்லாங்குழி
அதேபோல் பரணிலிருந்த பல்லாங்குழி இன்றைக்குப் பரபரப்பான ஆட்டத்திற்கு நடுவே தன்னுடைய இருப்பை உறுதி செய்துள்ளது. கூட்டலையும் கழித்தலையும் கற்றுத்தரும் பல்லாங்குழி. வாழ்க்கையில் சேமிப்பின் அவசியத்தை உணர்த்தும் எளிய கருவியாகும்.
பாம்பும், ஏணியும் உயரமாக இருந்தாலும் வாழ்க்கையில் முன்னேற எதைத் தேர்ந்தெடுக்கவேண்டும் என்பதை உணர்த்துகிறது பரமபதம். ஏணியில் ஏறினால் முன்னேற்றத்தையும் அதே உயரத்தில் உள்ள பாம்பின் மீது ஏறினால் சறுக்கி வாழ்க்கை தொடங்கிய இடத்திலேயே கொண்டுவந்து விட்டுவிடும் என்ற வாழ்வியல் தத்துவத்தைப் பரமபத விளையாட்டு உணர்த்துகிறது.
குலை குலையா முந்திரிக்கா.. நரியே நரியே சுத்தி வா..
இந்த ஊரடங்கில் எளிதில் சோர்வடைந்துவிடுபவர்கள் குழந்தைகள்தான். கால்களில் சக்கரம் கட்டிக்கொண்டு ஓடியவர்களைக் கண்ணுக்குத் தெரியாத கரோனா முடக்கிப்போட்டுள்ளது. குழந்தைகளுக்கு ஏற்றாற்போல் வீட்டிற்குள்ளேயே விளையாடும் பாரம்பரிய விளையாட்டுகள் ஏராளம்.
கைப்பேசிகளில் மழலையர் பாடல்கள், பொம்மைப் படங்கள், அனிமேஷன் படங்களைப் போட்டுத் தருவதற்கு பதில் பெற்றோர் அல்லது வீட்டிலுள்ள பெரியவர்கள் தங்களுடைய சிறுவயதில் விளையாடிய ‘ஒரு குடம் தண்ணி ஊற்றி ஒரு பூ பூத்ததாம்’, ‘ராஜா, ராணி, மந்திரி, போஸீஸ், திருடன்’, குலை குலையா முந்திரிக்கா நரியே நரியே சுத்தி வா, ‘நாடுபுடி விளையாட்டு, ‘பாண்டியாட்டம்’, ‘பச்சைகுதிரை’ போன்ற விளையாட்டுகளை அவர்களுக்குக் கற்றுக் கொடுத்து தங்களையும் அந்த விளையாட்டுகளில் ஈடுபடுத்திக் கொள்ளலாம்.
குழந்தைகளிடம் கூட்டு மனப்பான்மையையும் விட்டுக்கொடுத்து வாழவும் இந்த விளையாட்டுகள் கற்றுக்கொடுக்கின்றன. இவற்றில் ஒரு சில விளையாட்டுகள் வீட்டின் அளவு மற்றும் நபர்களின் எண்ணிக்கையைப் பொறுத்தே விளையாடப்படுகிறது.
உலகமயமாக்கல் சூழ்நிலையில் எல்லாமே தனக்குதான் என்ற சுயநல மனோபாவம் அதிகரித்துவரும் நிலையில் இதுபோன்ற பாரம்பரிய விளையாட்டுகள் குழு மனப்பான்மையையும் விட்டுக்கொடுத்தல், தோல்வியை எதிர்கொள்ளுதல் போன்ற தன்னம்பிக்கை அளிக்கும் விஷயங்களையும் விளையாட்டின் வழியாகக் கற்றுத் தருகிறது. மேலும் மண்சார்ந்த விளையாட்டுகள் வெறும் பொழுதுபோக்கிற்காக மட்டுமல்லாமல் அறிவியலையும் கணிதத்தையும் கற்றுத் தருகிறது. இதனால் மனவோட்டம் ஒருமுகப்படுத்தப்படுவதால் அறிவுக் கூர்மையும் படைப்பாற்றலும் அதிகரிக்கிறது.
பாரம்பரிய விளையாட்டுகள் எல்லாம் விளையாடியது அந்தக் காலம் எனப் பெருமூச்சுவிட்டு இன்றைய பொழுதை வீணாக்காமல் இந்த ஊரடங்கு நாளில் பாரம்பரிய விளையாட்டுகளை விளையாடி உறவுப் பாலத்தை மேம்படுத்துவோம். ஊரடங்கு முடிந்தாலும் நம் உறவுப் பாலத்தைப் பலப்படுத்தப் பாரம்பரிய விளையாட்டுகளில் தொடர்ந்து கவனம் செலுத்துவோம்.