

குடும்பம் எனும் கட்டமைப்பின் மேன்மையையும் அதில் உள்ள சின்னச்சின்ன சிக்கல்பிடுங்கல்களையு கதையாகவும் களமாகவும் எடுத்துக் கொண்டு அவற்றை மட்டுமே படங்களாக, பாடங்களாக நமக்குத் தந்த இயக்குநர்களில் மிக முக்கியமானவர் விசு. இவர் இயக்கிய பல படங்கள், குடும்பத்தின் உன்னதங்களைச் சொல்லியிருக்கின்றன என்றாலும் இவரின் ‘சம்சாரம் அது மின்சாரம்’ ஏற்படுத்திய தாக்கமும் அதன் விஸ்வரூப வெற்றியும் அளவிடமுடியாதது.
1986-ம் ஆண்டு, ஜுலை மாதம் 18-ம் தேதி வெளியானது ‘சம்சாரம் அது மின்சாரம்’. இந்த வருடம் இந்தப் படம் வெளியாகி 34 ஆண்டுகள். 33-வது ஆண்டில், நடிகரும் இயக்குநருமான விசுவை, வீடியோ பேட்டிக்காக சந்தித்தோம்.
விசுவும் மனம் திறந்து பல விஷயங்களை, ‘சம்சாரம் அது மின்சாரம்’ அனுபவங்களை நம்மிடம் பகிர்ந்துகொண்டார்.
மக்களின் மனங்களில் தனியிடம் பிடித்த விசு இப்போது நம்மிடையே இல்லை. ஆனாலும் ‘சம்சாரம் அது மின்சாரம்’ மாதிரியான படங்கள் மூலம் இப்போதும் எப்போதும் நம்மிடையே வாழ்ந்துகொண்டிருக்கிறார் அவர்.
விசுவின் ‘சம்சாரம் அது மின்சாரம்’ அனுபவங்கள்... வீடியோ பேட்டியின் எழுத்தாக்கம் இது.
‘’வணக்கம் சார். படம் வெளியாகி 33 வருடங்களாகிவிட்டன என்பதும் படம் வெளியான நாள் இன்றுதான் என்பதும் (அன்று அவரைப் பேட்டி எடுத்த நாள்தான் படம் வெளியான நாள்) நீங்கள் சொல்லித்தான் எனக்குத் தெரிகிறது. மிக்க நன்றி.
’’ ’சம்சாரம் அது மின்சாரம்’ படம் அப்போது மட்டுமல்ல... இப்போதும் யாராலும் மறக்கமுடியாது. எப்போதும் எத்தனை வருடங்களானாலும் மறக்கமுடியாது. சிவாஜி சார் இருந்தவரைக்கும் குடும்பக் கதைகள் வந்துகொண்டிருந்தன. இப்போது அப்படியான படங்கள் வருவதில்லை.
‘சம்சாரம் அது மின்சாரம்’ என்று சொன்னதும் உடனே எனக்கு நினைவுக்கு வரும் விஷயம் என்ன தெரியுமா? அந்தப் படத்தின் மெயின் கேரக்டர்தான் ஞாபகத்துக்கு வருது. அதுதான் வெற்றிக்கு அறிகுறி. லட்சுமி? விசு? மனோரமா? இவர்களெல்லாம் இல்லை. படத்தின் வெற்றிக்கு மிக முக்கியக் காரணம்...அந்த வீடு. அந்தமாதிரி ஒரு வீடு கிடைக்கவே கிடைக்காது. அப்படியொரு வீடு, செட் போடவே முடியாது.
இந்தப் படத்தின் கதையைச் சொன்னதுமே ஏவிஎம்.சரவணன் சார் ... ‘இந்தப் படத்துல ஹீரோ... வீடுதான் போலருக்கே’ன்னுதான் சொன்னார். ’ஆமாம் சார்’னேன். ஏன்னா, 75 சதவிகித கதை, அந்த வீட்டுக்குள்ளேதான் நடக்குது.
அதுமட்டுமில்லாம சரவணன் சார் அவரோட தம்பிகிட்ட சிரிச்சிக்கிட்டே சொன்னார்... ‘வழக்கமா ஹீரோவுக்குன்னு நாம நிறைய செலவு பண்ணுவோம். இந்தப் படத்துக்கு வீட்டுக்காக செலவு பண்ணுவோம்’னு சொன்னார்! அப்புறம் எங்கிட்ட, ‘கால்ஷீட்டையெல்லாம் மூணு மாசம் கழிச்சு வாங்குங்க’ன்னு சொன்னார்.
சொல்லிட்டு அண்ணனும் தம்பியும் கிளம்பி என்னை இருக்கவைச்சிட்டு எங்கேயோ போனாங்க. எனக்குத் தெரியல. கொஞ்சநேரம் கழிச்சு ‘நீங்க வாங்க’ன்னு என்னைக் கூட்டிட்டுப் போனாங்க. ஏவிஎம் ஸ்டூடியோலயே, ஒதுக்குப்புறமான இடம் அது. அந்த இடத்தைக் காட்டி, ‘இங்கேதான் நம்ம படத்துக்காக வீடு கட்டப்போறோம்’னு சொன்னாங்க. நான் அதிர்ச்சியாயிட்டேன்.
‘என்னது... வீடு கட்டப்போறீங்களா? அப்போ, படம் எடுக்க ரெண்டுவருஷமாயிருமே’ன்னு சொன்னேன். ’மூணு மாசம் போறும். அதுக்குள்ளே வீடு கட்டிடலாம்’னு சரவணன் சார் சொன்னார்.
அந்த வீட்டை கட்டிமுடிக்கவேண்டிய பொறுப்பை குகன்கிட்ட ஒப்படைச்சாங்க. அப்போ அவர் இளைஞர். அந்த வீட்ல எந்த ஜன்னல்லேருந்து வேணும்னாலும் ஷாட் வைக்கலாம். அந்த வீட்ல இருந்து எங்கே வேணாலும் டிராலி ஷாட் வைக்கலாம். எந்த இடத்துல வேணாலும் மினி கிரேன் யூஸ் பண்ணலாம். கட்டச் சொன்னவர் சரவணன் சார். கட்டியவர் குகன்.
இன்னொன்னும் சொல்றேன்... ‘சம்சாரம் அது மின்சாரம்’ படம் வந்த பிறகு, என்னோட மார்க்கெட்லயும் ஏற்ற இறக்கம் இருந்துச்சு. லட்சுமியோட மார்க்கெட்லயும் ஏற்ற இறக்கம் இருந்துச்சு. எல்லாரோட மார்க்கெட்லயும் ஏற்ற இறக்கம் இருந்துச்சு. ஆனா அந்த வீட்டோட மார்க்கெட் மட்டும் ஏறிகிட்டே இருந்துச்சு.
‘சம்சாரம் அது மின்சாரம்’ படத்தின் மூலமா கிடைச்ச லாபத்தை விட, இந்த வீட்டு மூலமா அவங்களுக்கு கிடைச்ச லாபம் ரொம்பவே அதிகம். இதுக்கு முதல் காரணம் குகன். அடுத்து சரவணன் சார், பாலு சார்.
’சம்சாரம் அது மின்சாரம்’ படத்துக்கான பட்ஜெட் பதிமூணரை லட்ச ரூபாய். ஃபர்ஸ்ட் காப்பி. அதாவது ஃபர்ஸ்ட் காப்பின்னா, எல்லாத்தையும் சேர்த்துதான்! சரவணன் சார் அந்த வீடு கொடுப்பார்; நெகடீவ் தருவார். இந்த ரெண்டையும் வைச்சுப் படம் பண்ணனும். ஒருவேளை, அவுட்டோர், வீடு, நெகட்டீவ் செலவையும் சேர்த்தா, பதினாறு, பதினேழு லட்ச ரூபாய் ஆகியிருக்கும்.
’சம்சாரம் அது மின்சாரம்’ படத்தை 41 நாள்ல எடுத்துமுடிச்சோம். அதுக்கு ஆர்ட்டிஸ்ட்டுகளோட கோ ஆபரேஷன்தான் காரணம்'' என்று விவரித்தார் விசு.
- நினைவுகள் தொடரும்
விசுவின் முழுமையான வீடியோ பேட்டியைக் காண :