Published : 12 May 2020 01:05 PM
Last Updated : 12 May 2020 01:05 PM

காப்பாற்றப்பட்ட காந்தல்; சிவப்புக் கண்டத்தில் நஞ்சநாடு!- நீலகிரியில் நிம்மதி திரும்புவது எப்போது?

நீலகிரியின் காந்தல் பகுதியில் கடைசி கரோனா நோயாளி குணமாகி 14 நாட்கள் கடந்த நிலையில், 44 நாட்களாக அடைக்கப்பட்டிருந்த அந்தப் பகுதி முழுமையாகத் திறக்கப்பட்டிருக்கிறது. அதேசமயம் இங்கிருந்து 10 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள நஞ்சநாடு பகுதியில் 2 பேருக்குக் கரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டிருப்பதால், அப்பகுதி முழுவதும் சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

நீலகிரி மாவட்டத்திலேயே முதன் முதலில் கரோனா பரபரப்புக்கு உள்ளான பகுதி காந்தல். நீலகிரி மாவட்டத்தின் முதல் கரோனா தொற்று 3 பேருக்கு இருப்பதாக இங்கு மார்ச் 27-ம் தேதி கண்டறியப்பட்டது. அடுத்த நாளே காந்தல் பகுதி முழுவதுமாகவே அடைக்கப்பட்டது.

ஊட்டியிலிருந்து 3 கிலோ மீட்டர் தொலைவே உள்ள இந்தக் காந்தல் பகுதியில் சுமார் 35 ஆயிரம் மக்கள் வசிக்கிறார்கள். ஊட்டியின் மாவட்ட ஆட்சியரின் முகாம் அலுவலகம் உட்பட முக்கியப் பிரமுகர்களின் வீடுகளும் இங்கேதான் உள்ளன. நகரின் தூய்மைப் பணியாளர்கள் 350 பேர் காந்தல் பகுதியின் முக்கோணம், திருவள்ளுவர் தெரு உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கிறார்கள்.

இப்படியான சூழலில் இந்தப் பகுதியின் 3 கிலோ மீட்டர் சுற்றளவு தனிமைப்படுத்தப்பட்டு மூடப்பட்டதால், நிலைமையைச் சமாளிக்க மாவட்ட நிர்வாகம் துரித நடவடிக்கைகளை எடுத்தது. ஒவ்வொரு நாளும் மாவட்ட ஆட்சியரே முன்னின்று இங்கு செய்யப்பட வேண்டிய வேலைகள் குறித்து அரசு அலுவலர்கள் மற்றும் ஊழியர்களுக்கு ஆலோசனை வழங்கி வந்தார். அதன் விளைவாக, இங்கே மக்களுக்குப் பொருட்கள் வாங்கித்தர, உணவுப் பொருட்கள், காய்கனிகளைச் சேர்ப்பிக்க என 45 பேர் கொண்ட தன்னார்வலர் குழு உருவாக்கப்பட்டது. இதைப் பற்றி நம் இந்து தமிழ் திசை இணையதளத்தில் விரிவான செய்தி வெளியானது.

இந்த நிலையில், இங்கு கரோனா தொற்றுக்குள்ளான 3 பேரும் குணமாகி வீடு திரும்பி, 14 நாட்கள் ஆகிவிட்டன. இதனால் நேற்று முதல் சகஜமாக இயங்கத் தொடங்கியிருக்கிறது காந்தல். இங்கு 50 சதவீதம் கடைகளைத் திறக்கலாம், வியாபாரத்தில் ஈடுபடலாம் என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்திருக்கிறது.

இதையடுத்து, நேற்று மாலை போலீஸார் இங்கே வந்து மக்கள் சந்திப்பு நடத்தினர். 44 நாட்களாக இப்பகுதி மக்களுக்கு உதவிய நல்லுள்ளங்களுக்கு மனமார நன்றி தெரிவித்தனர். குறிப்பாக, இப்பகுதிக்கு தினம் 1 டன் வீதம் 44 நாட்களாக சுமார் 44 டன் மலை காய்கனிகளை இலவசமாக மக்களுக்கு வழங்கிய நீலகிரி மாவட்ட விவசாயிகள், வியாபாரிகளுக்கும்; மக்களுக்கு வெளியிலிருந்து பொருட்கள் வாங்கி வர, மருத்துவ உதவிகள் பெற்று வர முழுமையாக இயங்கிய 45 தன்னார்வலர்களுக்கும்; அவர்களுக்கு இடையறாது உணவு தயாரித்து வழங்கிய அரசுப் போக்குவரத்துக் கழக ஓட்டுநர் செல்லகுமாருக்கும், உணவுப் பொருட்கள் வழங்கி உதவிய பொதுமக்களுக்கும் இக்கூட்டத்தில் நன்றி தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், இங்கிருந்து 10 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள நஞ்சநாடு பகுதியில் 2 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது இரண்டு நாட்களுக்கு முன்பு உறுதியாகியிருக்கிறது. இதையடுத்து அந்தப் பகுதி சிவப்பு மண்டலமாக்கப்பட்டுள்ளது.

இதுபற்றி காந்தலில் சேவைபுரிந்த தன்னார்வலர்கள் குழுவினரிடம் பேசினோம். “நஞ்சநாடு சுமார் 100 குடும்பங்கள் உள்ள சிறிய பகுதி. ஊட்டியிலிருந்து 10 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. அதனால் பெரிய பாதிப்பு இருக்காது. அங்குள்ள மக்கள் அவர்களுக்குள்ளாகவே சமாளித்துக்கொள்வார்கள். காந்தல்தான் சிக்கலான பகுதி. இங்கே 5 கிலோ மீட்டர் சுற்றளவில் மட்டும் 40 ஆயிரம் பேர் வசிக்கின்றனர். அதனால்தான் இப்பகுதிக்காக நிறையப் பாடுபட வேண்டியிருந்தது.

காந்தலில் அலட்சியமாக இருந்திருந்தால் கோயம்பேடு போல நோய்த்தொற்று வேகமாக நீலகிரி முழுக்கப் பரவியிருக்கும். இதன் ஜனத்தொகையும், நெருக்கமும் அப்படி. எனவேதான் காந்தலில் தொற்று இல்லா நிலை ஆக்கியதில் நிம்மதிப் பெருமூச்சு விட்டுக் கொண்டிருக்கிறது நீலகிரி” என்றனர் அவர்கள்.

நஞ்சநாட்டிலிருந்தும் விரைவில் நல்ல செய்தி வரும் என்று நம்புவோம்!

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x