Last Updated : 11 May, 2020 11:58 AM

Published : 11 May 2020 11:58 AM
Last Updated : 11 May 2020 11:58 AM

தொற்று நோய்களில் இருந்து பாதுகாக்க கிருமி நாசினி மரங்களை வளர்க்கலாம்: வேளாண் பேராசிரியர் ஆலோசனை

மதுரை

தொற்று நோய்களில் இருந்து பாதுகாக்க இயற்கையாகவே கிருமி நாசினியாக செயல்படும் மரங்கள், தாவரங்களை வளர்த்து எதிர்கால சந்ததியினருக்கு பரிசாகக் கொடுக்கலாம் என மதுரை வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய போராசிரியர் சி.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் கரோனா பரவலைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது. அதில் முக்கியமானது சாலைகள், தெருக்களில் கிருமி நாசினி மருந்துகளை தெளிப்பது.

மக்கள் அடிக்கடி கைகளை கிருமி நாசினியால் கழுவ வேண்டும், அடிக்கடி தொடும் பொருட்களையும் கிருமி நாசினியால் சுத்தம் செய்ய வேண்டும் என அரசுகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.

இந்நிலையில் வேதிப்பொருள் கலந்த கிருமி நாசினிகளுக்குப் பதிலாக இயற்கையாகவே கிருமி நாசினி தன்மை கொண்ட வேம்பு, வில்வம், மா, நுணா, புங்கம், நொச்சி போன்ற மரங்களை அதிகளவில் வளர்த்து வருங்கால சந்ததியினருக்கு பரிசாக கொடுக்கலாம் என மதுரை வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய பேராசிரியர் சி.சுவாமிநாதன், ஆராய்ச்சி மாணவி பா.நிவேதாதேவி ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து அவர்கள் கூறியதாவது:

மருத்துவத்துறையில் பார்மால்டிஹைட், குளுடரால்டிஹைட், ஆல்கஹால், ப்ளீச் எனப்படும் சோடியம் ஹைப்போ குளோரைட், குளோரின் டை ஆக்சைடு ஆகிய கிருமி நாசினிகள் பயன்படுத்தப்படுகின்றன.

இந்த கிருமி நாசினிகள் நீரை சுத்தம் செய்யவும், பல்வேறு பரப்புகளை தூய்மைப்படுத்தவும் பயன்படுத்தப்படுகிறது. இருப்பினும் ஒவ்வாமை, தோல் நோயை ஏற்படுத்துதல், எளிதில் தீப்பிடிக்கும் தன்மை போன்ற பாதகங்களும் உள்ளன.

ஆனால் பக்கவிளைவுகள் இல்லாத இயற்கையான கிருமி நாசினிகள் நம்மை சுற்றியுள்ள மரங்களில் கொட்டிக் கிடக்கின்றன. அதில் வேம்பு கிருமி நாசினிகளின் முதன்மை மரமாகும். தொற்று நோயான காலரா, அம்மை நோய்களின் போது வேம்பு பல்வேறு வகைகளில் பயன்படுகிறது.
கலாச்சாரம், பாரம்பரியத்துடன் தொடர்பு கொண்ட வேம்பின் பட்டைகள், இலைகள், பரு, கொப்பளம், வைரஸ், பூஞ்சை, காளான் போன்ற கிருமிகளை கொல்கின்றன.

வேப்ப மரத்தின் கொழுந்தை தினமும் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் நீரழிவு நோய், தொற்று நோய் கட்டுப்படும். இருமல் மூச்சிறைப்பையும் சரி செய்கிறது.

புங்கம்:

மூங்கிலுக்கு அடுத்து ஆக்சிஜன் அதிகளவில் உற்பத்தி செய்வது புங்கம் மரம். இதன் விதை, எண்ணெய், பூ, இலை, தண்டுப்பட்டையில் இருந்து பிரித்தெடுக்கப்படும் வேதிப்பொருட்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கிறது. புங்க இலை வயிற்றுப் புண்ணை குணப்படுத்துகிறது.

மா மரம்:

மாவிலையின் வாசம் நோய் கிருமிகளை கொன்று நோய் தொற்றிலிருந்து பாதுகாக்கும். இதனாலேயே திருவிழா மற்றும் வீடுகளில் நடைபெறும் விழாக்களில் மாவிலை தோரணங்கள் கட்டுகின்றனர். மாங்கொழுந்தை மென்று சாப்பிட்டால் தொண்டை புண், வலி குணமாகும். மாமரத்தின் பட்டையிலிருந்து எடுக்கப்படும் சாறு அஜீரனக் கோளாறு மற்றும் வயிற்றுப் போக்கிற்கு நல்ல தீர்வாகிறது. சிறுநீர்ப் பாதை, நுரையீரல் மூளை, இருதயத்தை வலுப்படுத்தும் தன்மை மாம் பழத்துக்கு உண்டு.

வில்வம்:

சிவாலயங்களில் ஸ்தல விருட்சமாக இருக்கும் வில்வத்தில் மருத்துவ குணம் அதிகம் உள்ளது. வில்வ மரத்தின் நிழல், காற்றில் மருத்துவ சக்தி நிறைந்திருக்கிறது. வில்வ மரத்தின் இலையை பொடித்து உண்டால் நாள்பட்ட ஒவ்வாமை, ஆஸ்துமா, உடல் அரிப்பு, காசநோய் தொற்று அண்டாது. வில்வ மர பழத்தின் துவர்ப்பு அல்சருக்கு சிறந்த மருந்து. வில்வ இலையின் கொழுந்தை தினமும் சாப்பிட்டால் புற்றுநோய் வராது.

நுணா (மொரிண்டா):

சீமை கருவேல மரத்துக்கு அடுத்து கரிசல் நிலங்களில் தன்னிச்சையாக வளரும் மரம் நுணா. இந்த மரத்தை எரிப்பதால் வரும் புகை சிறந்த கிருமி நாசினியாகும். புற்றுநோய் செல்களை அழிக்கும்.

நொச்சி:
நொச்சியை சர்வரோக நிவாரணி என்றழைக்கின்றனர். இதன் இலைகளின் உள்ள நுண்ணுயிர் எதிர்ப்பு தன்மையால் கொதி நீரில் இலையை போட்டு ஆவி பிடித்தால் மூக்கடைப்பில் தொடங்கி ஜலதோஷம், சளித்தொல்லை நீங்கும். நொச்சி விதை, கனி தோல் வியாதிகள், நரம்பு கோளாறுகளை சரி செய்கிறது.

இதனால் இயற்கையாகவே கிருமி நாசினியாக செயல்பட்டு விலை மதிப்புமிக்க சுவாசக் காற்றை வழங்கும் மரங்களை அட்சய பாத்திரமாக கருதி வளர்த்து வருங்கால சந்ததியினருக்கு பரிசாக கொடுக்கலாம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x