Last Updated : 10 May, 2020 01:15 PM

 

Published : 10 May 2020 01:15 PM
Last Updated : 10 May 2020 01:15 PM

மதுரையில் விலைவாசி உயர போலீஸாரே காரணம்: பலசரக்கு வணிகர்கள் சங்கம் குற்றச்சாட்டு 

மதுரையில் அத்தியாவசியப் பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்திருக்கிறது. அரிசி, மிளகாய் வத்தல், மாவுப் பொருட்கள், சீனி, ரவை, எண்ணெய் என்று உணவுப் பொருட்கள் மட்டுமின்றி, சோப்பு, பிஸ்கட் வகைகளும் கூட எம்ஆர்பிக்கு விலைக்கும் மேலாகவே விற்பனை செய்யப்படுகிறது. ஒட்டுமொத்த நகருக்கும் உணவுப்பொருட்களை விநியோகிக்கிற, விற்கிற முக்கியமான பகுதியான கீழமாசிவீதியில் கடைகளைத் திறப்பதற்கு போலீஸார் காட்டுகிற கெடுபிடிகள்தான் இதற்குக் காரணம் என்கிறார்கள் வியாபாரிகள். சில கடைகளில் போலீஸார் இனாமாக பொருட்கள் கேட்டு மிரட்டுவதாகவும், தர மறுத்தால் சீல் வைப்பது போன்ற தொந்தரவுகளில் ஈடுபடுவதாகவும் புகார்கள் உள்ளன.

இவை எந்த அளவுக்கு உண்மை என்று அறிவதற்காக மதுரை மாநகர் பலசரக்கு நவதானியம் வணிகர்கள் சங்க தலைவர் எஸ்.கே.மோகனிடம் பேசினோம். அவர் கூறியதாவது:

"மதுரைக்கு சரக்கு எல்லாம் வழக்கம் போல வந்திடுது. பொருட்களை ஏற்ற, இறக்க, விற்க கலெக்டரும், போலீஸ் கமிஷனரும் பெர்மிஷன் கொடுத்திருக்காங்க. ஆனா கீழே இருக்கிற போலீஸ்காரங்க தொல்லைதான் தாங்க முடியல. கீழமாசி வீதிக்கு மொத்த சரக்கு வருது. இங்கிருக்கிற கச்சாத்து (மொத்த) கடைகள்ல இருந்துதான அவனியாபுரம், வில்லாபுரம், முனிச்சாலை, டி.கல்லுப்பட்டி, பேரையூர், உசிலை, ஸ்ரீவில்லி, ராஜபாளையம், செங்கோட்டை, தென்காசி, சிவகங்கை, ராமநாதபுரம், காரைக்குடி, மானாமதுரை, கமுதி, அருப்புக்கோட்டைன்னு எல்லா ஊருக்கும் சரக்குப் போகணும்? ஆனா, அப்படி வாங்க வர்ற யாவாரிங்கள பாடாப் படுத்துது போலீஸ். அவங்களுக்கு தட்டுப்பாடில்லாம பொருள் கிடைச்சாத்தான சில்லறை யாவாரிகளுக்கு சரக்கு கிடைக்கும்?

போன்ல ஆர்டர் எடுத்து நீங்களே கொண்டுபோய் கொடுங்க. பஜாருக்குள்ள வந்து யாரும் வாங்கக்கூடாதுன்னு விரட்டியடிக்காய்ங்க போலீஸ்காரங்க. அதெப்படிங்க காசு வாங்காம சரக்கு அனுப்ப முடியும்னு சொன்னா புரியுறதில்ல அவங்களுக்கு. சில்லறை யாவாரிங்கள விரட்டுனாக்கூட பரவால்ல, ஹோல்சேல் வியாபாரிங்களையும் விரட்டுறாங்க. கமுதியில இருந்து ஒரு யாவாரி 12 லட்ச ரூபாயோட கார்ல வந்தா, அவரை விரட்டுறாங்க. சார் சரக்கு வாங்க வந்தேன்னு சொன்னா, ஒரு குட்டியானையை வாடகைக்கு எடுத்துக்கிட்டு அதுல வாய்யாங்கிறாங்க. வியாபாரமும் ஒரு சேவைத் தொழில்தான். சும்மா யாவாரிங்களோட தன்மானத்தோட விளையாடுனா யாருங்க வருவாங்க. அப்புறம் பொருள் தட்டுப்பாடு ஏற்படத்தான செய்யும்?

இப்பெல்லாம் மதுரையைச் சுத்தியிருக்கிற யாவாரிங்க எல்லாம், இந்த கெடுபிடிக்குப் பயந்து விருதுநகருக்குப் போயிடுறாங்க. அங்க எந்தக் கெடுபிடியும் இல்ல. மதுரையிலதான் எல்லா அநியாயமும். மதுரையைச் சுற்றி மதுரை மாநகர்லதான் விலைவாசி அதிகமா இருக்குதுன்னு பேசுறாங்க. போலீஸகாரங்க பண்ற கூத்தால எங்களுக்குத்தான் கெட்ட பேரு. இதுவரைக்கும் மதுரையில முப்பது பலசரக்கு கடைக்கு மேல சீல் வெச்சிருக்காங்க. கேட்டா சமூக இடைவெளியைப் பின்பற்றலயாம். எந்த டாஸ்மாக் கடைக்காவது இந்த போலீஸ்காரங்க சீல் வெச்சாங்களா?

நாளை (திங்கள்கிழமை) காலையில இருந்து சாயந்திரம் 7 மணி வரைக்கும் பலசரக்கு கடைகள் செயல்படலாம்னு முதல் அமைச்சர் அறிவிச்சிருக்காரு. மதுரை கீழமாசி வீதி, சுவாமி சன்னதி, தாசில்தார் பள்ளிவாசல் தெரு, சித்திரக்கார வீதியில இருக்கிற 150 மொத்த கடைகளையும் ஒழுங்கா செயல்பட விடணும். மதுரையில சரக்கு வாகனங்கள், யாவாரிகள் மீதான கெடுபிடியை போலீஸ்காரர்கள் குறைச்சாத்தான் எல்லாம் பழைய நிலைக்குத் திரும்பும்."

இவ்வாறு எஸ்.கே.மோகன் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x