மக்களுக்கு சேவையாற்ற இதுதான் நல்ல சமயம்!-  ஒன்றியக்குழு துணைத் தலைவரின் உருக்கம்

மக்களுக்கு சேவையாற்ற இதுதான் நல்ல சமயம்!-  ஒன்றியக்குழு துணைத் தலைவரின் உருக்கம்
Updated on
2 min read

தமிழக உள்ளாட்சிகளில் போதிய நிதி ஆதாரம் இல்லாததால், புதிதாக பொற்றுப்பேற்றுள்ள உள்ளாட்சி பிரதிநிதிகள் இந்த கரோனா காலத்தில் மக்களுக்கு சேவையாற்ற முடியாமல் கையைச் பிசைந்து நிற்கிறார்கள். எனினும் ஓரளவுக்கு வசதியும் தொண்டுள்ளமும் கொண்ட பிரதிநிதிகள் சிலர் ஆங்காங்கே மக்களை நெருங்கி அவர்களுக்குத் தேவையானதைச் செய்துவருகிறார்கள். அந்த ஒரு சிலரில் பானுசேகர் அசத்தல் ரகம்.

நாகை மாவட்டம் கொள்ளிடம் ஒன்றியக்குழு துணைத் தலைவராக இருக்கும் பானுசேகர், முற்பகலில் கரோனாவுக்கு எதிரான களப்பணி, பிற்பகலில் தன் வார்டு மக்களுக்கு தேவையான நிவாரண உதவிகளை வழங்குதல் என்று பம்பரமாய் சுழல்கிறார். தங்களது ஒன்றியத்துக்குட்பட்ட கிராமங்களுக்கு ஒன்றியக் குழு தலைவர் ஜெயப்பிரகாஷோடு சென்று கரோனா தடுப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறார் பானுசேகர். அதிகாரிகளை துணைக்கு வைத்துக்கொண்டு கிராமங்களை வலம்வருகிறார். மதியம் வரை இந்தப் பணிகளை மேற்கொள்ளும் இவர் மாலையில், தன்னை ஒன்றியக்குழு உறுப்பினராக தேர்வுசெய்த கோபாலசமுத்திரம் பகுதி மக்களை நேரில் சந்தித்து தனது சொந்த செலவில் நிவாரணப் பொருட்களை வழங்கி வருகிறார். தனது வார்டுக்குள் வரும் சுமார் 1,900 குடும்பங்களுக்கும் தானே நேரில் சென்று நிவாரணப் பொருட்களை வழங்கி முடித்துவிட்டார் பானுசேகர்.

கொள்ளிடத்தில் இருக்கும் அவரது அலுவலகத்தில் காய்கனிகள், மளிகைப் பொருட்கள் வந்து இறங்கிக் கொண்டேயிருக்கிறது. ஆட்கள் அவற்றைப் பிரித்து பைகளில் போட்டுக் கொண்டேயிருக்கிறார்கள். மாலையானதும் அவை டிராக்டரில் ஏற்றப்பட்டு மக்களுக்கு விநியோகிக்கப்படுகிறது.

’’ஓட்டுக் கேட்கும்போது வீடு வீடாகச் சென்று அனைத்து மக்களையும் சந்தித்து ஓட்டுக் கேட்டோம். மக்களும் வாக்களித்தார்கள். இப்போது மக்களுக்கு ஒரு துன்பம் வந்திருக்கும்போது அவர்கள் அனைவரையும் நேரில் சென்று சந்திப்பதுதானே அவர்களுக்கு நாம் செய்யும் நன்றிக்கடனாக இருக்கும். சந்திப்பது மட்டுமில்லாமல் இயன்றைதை செய்வோம் என்று முடிவெடுத்து உடனடியாக களத்தில் இறங்கி விட்டேன்.

என்னுடைய வார்டில் கூலித்தொழிலாளர்கள் அதிகம் வசிக்கிறார்கள். அதில் 1,000 குடும்பங்களுக்கு அரிசி, மளிகைப் பொருட்கள், காய்கனிகள் கொடுத்தோம். அவர்களுக்கு அடுத்த நிலையில் இருப்பவர்களுக்கு அரிசி தவிர்த்த மற்ற பொருட்களைக் கொடுத்தோம்” என்கிறார் பானுசேகர்.

தனது வார்டு மக்களுக்கு உதவுவதோடு மட்டும் இவர் நின்றுவிடவில்லை. ஆலாலசுந்தரம், பனங்குடி உள்ளிட்ட ஒன்றியத்தின் பிற பகுதிகளுக்கும் தன்னால் முடிந்த நிவாரணப் பொருட்களை வழங்கியிருக்கிறார். தங்களது செங்கல் சூளை மற்றும் நிலத்தில் வேலை பார்க்கும் தொழிலாளர்கள் அனைவருக்கும் இதேபோல் நிவாரண பொருட்களையும் ஆயிரம் ரூபாயும் கொடுத்திருக்கிறார் பானுசேகர்.

“இத்தனையும் வாக்கு வங்கி அரசியலுக்குள் தானே வரும்?” என்று அவரிடம் சிரித்துக்கொண்டே கேட்டேன்.

“ஐந்து ஆண்டுகள் கழித்து வரப்போகும் தேர்தலை மனதில் வைத்து இதைச் செய்யவில்லை. அப்போது என்ன செய்தால் மக்களிடம் வாக்குகளை பெற முடியும் என்பதை அறிந்து வைத்திருக்கிறேன். அது தனி. இது வேறு பணி. மக்களுக்கு சேவையாற்ற இதுதான் நல்ல சமயம். இதைவிட்டால் வேறு வாய்ப்பு நமக்கு கிடைக்கப் போவதில்லை. அதனால் மக்களுக்கு எதையாவது செய்ய வேண்டும் என்ற நினைப்பு உள்ளவர்கள் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி சிறு துரும்பையாவது கிள்ளிப்போட வேண்டும்” என்று அடக்கமாகச் சொன்னார் பானுசேகர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in