Last Updated : 10 May, 2020 12:18 PM

 

Published : 10 May 2020 12:18 PM
Last Updated : 10 May 2020 12:18 PM

அயோத்திதாசர் 175- அத்தியாயம் 5: கள்ளுக்கடை கணக்கையும் கடவுள்கடை கணக்கையும் கேட்போமா?

1909 டிசம்பர் 1-ம் தேதி வெளியான 'தமிழன்' இதழில் அயோத்திதாசர் சிறு கட்டுரை எழுதி இருக்கிறார். அதன் தலைப்பு, 'கள்ளுக்கடை கறி தோசைப் பலனையும் கடவுள் கடை கைம்பெண்கள் சொத்தையும் கணக்கெடுப்போமாக’. இதை படிக்கும் போது அயோத்திதாசரின் எழுத்துக்கு சாவே இல்லை என்று சொல்ல தோன்றுகிறது.

டாஸ்மாக் வசூல் சாதனையையும், அசுர வேகத்தில் வளரும் கார்ப்பரேட் சாமியார்களின் சொத்துக்களையும் காணும் இந்த தலைமுறை கேட்க வேண்டிய கேள்வியை பண்டிதர் 111 ஆண்டுகளுக்கு முன்னால் கேட்டிருக்கிறார். ஜனநாயகமும் கருத்துரிமையும் வளர்ந்துவிட்ட இன்றைய சூழலிலே மது ஆலை உரிமையாளர்களின் சொத்துக்கணக்கையும், கார்ப்பரேட் கோயில்களின் சொத்துக்கணக்கையும் கேட்க முடிவதில்லை. அடிமை இந்தியாவில், அரசும் மதமும் கைக்கோத்து கோலோச்சிய காலத்தில் அயோத்திதாசர் இந்த கேள்வியை கேட்டிருக்கிறார் என்றால், அவருக்கு எவ்வளவு துணிச்சல் இருந்திருக்கும்?

எப்படி கேட்கிறார் பாருங்கள்...

''கள்ளுக் கடை வைத்திருப்பவன் தன் கையில் இருக்கும் காசைக் கொடுத்து கள் வாங்கி விற்கிறான். அதில் வரும் லாபத்தில் செழிக்கிறான். கறி தோசை விற்பவளும் காசு கொடுத்து பொருள் வாங்கி கறி தோசை சமைத்து விற்கிறாள். வரும் லாபத்தில் வாழ்கிறாள். கள் என்பது மனதை மயக்கும் போதை பொருள். பஞ்ச பாதகங்களில் ஒன்று. அதை வாங்கி குடிப்பவன் இல்லாவிட்டால், அதனை விற்பவனும் இருக்க மாட்டான். மது அருந்துவது பஞ்ச பாதங்கங்க‌ளில் ஒன்று என்று அறியாமல் குடிப்பவன் களியாட்டம் போடுகிறான். பெண்டாட்டி பிள்ளைகள் பசியால் தவித்து பாழாகின்றன.

ஆனாலும் காசு கிடைத்தவுடன் நேராக‌ கள்ளுக் கடைக்கு போகிறான். போதை ஏறி தப்பு செய்து சிறைக்கு போய் அங்கே கஷ்டப்படுகிறான். வெளியே வந்து கஷ்டப்பட்டாலும், 'குடிப்பவன் குடியை விடுவதை பார்ப்பது என்பது குதிரைக்கு கொம்பை' பார்ப்பதற்கு ஒப்பானது. இப்படிப்பட்ட‌ குடிக்காரனுக்காக கள்ளுக்கடை காரனும், கறி தோசை விற்பவளும் காத்திருக்கிறார்கள். குடிப்பவர் ஒழிந்துவிட்டால் விற்பவர்கள் இருக்க மாட்டார்கள். ஒரு பொருளை வாங்குவோர் இல்லாவிட்டால் விற்போர் இருக்க மாட்டார்களே.

ஆனால் கடவுள் கடை வைத்திருப்பவர்கள், தாங்கள் கடவுள் எனும் பொருளை காணாமல் இருந்தாலும் பஞ்ச பாதகங்களில் ஒன்றான பொய்யைச் சொல்லி ஏமாற்றுகிறார்கள். 'எங்கள் தேவனே தேவன், மோட்சத்திற்கு நேரில் கொண்டு போய் விட்டு விடுவார். கடவுளை நேருக்கு நேர் பார்த்து ரசிக்கலாம். அதனால் எங்கள் உண்டியலில் போடும் பணத்தை மட்டும் நிறுத்திவிடாதீர்கள்.

எங்கள் கடைகளான கோயிலுக்கு பிரார்த்தனை செய்ய வருபவர்கள் முடிகளையும், வேல்களையும், கண் மலர்களையும், இரும்பிலும் தகரத்திலும் செய்யாதீர்கள். வெள்ளியாலும், தங்கத்தாலும் செய்து கொண்டு வந்தால் தான் உங்கள் பிரார்த்தனை நிறைவேறும். நாங்களும் அதை உருக்கி விற்று கல்லா கட்டுவோம்.

கள்ளுக் கடைக்கு கைக்காசு போட வேண்டும். கடவுள் கடைக்கு கைக்காசு போட வேண்டியதில்லை. இந்த க‌டையை பெரிதாக்க வேண்டுமாயின் சொத்துள்ள கைம்பெண்கள் எங்கு இருக்கிறார்கள் என்பதை கண்டறிய வேண்டும். அவர்களை அணுகி, 'நீங்க தான் பக்திசாலி என கேள்விப்பட்டேன். நீங்க நேராக மோட்சத்துக்குப் போய் விடுவீர்கள். நீங்களே பரலோக‌ மண்டபம் கட்டிவிட்டால் அங்கு போய் அதே மண்டபத்தில் தங்கி சுகபோகமாக‌ வாழ்வீர்கள். இந்த உலகத்தில் இருக்கும் சொத்துக்கள் யாவும் நாளைக்கு அழிந்து போகும். ஆனால், நீங்கள் செய்த தர்மம் மோட்சத்தில் உங்களுக்கு இடம் வாங்கி கொடுக்கும்' என பஞ்ச பாதக பொய்யை சொல்லி கைம்பெண்கள் சொத்துக்கள் யாவற்றையும் அபகரித்து விடுவார்கள். அவள் குடும்பத்தாருக்கு உதவிபுரிய விடாமல் தடுத்து, மொத்தத்தையும் தங்களின் மதக் கடைக் கணக்கில் சேர்த்து விடுவார்கள். அடுத்தடுத்து அவர்களின் கடவுள் வியாபாரமும் விறுவிறுப்பாக‌ நடக்கும்.

தங்களுடைய சொத்துக்களை யாரேனும் மறந்தாவது மடங்களுக்கோ, கோயில்களுக்கோ எழுதி கொடுப்பார்களா? ஒருக்காலும் அப்படி எழுதமாட்டார்கள். ஆனால், கைம்பெண்களுக்கு மோட்சம் காத்திருக்கிறது என பொய்ச்சொல்லி வியாபாரம் செய்து விடுவார்கள். பெண்களுக்குக் கல்வி கொடுக்காமல் தடுத்து வைத்ததே இப்படி ஏமாற்றுவதற்கு தான். இதன் உண்மையான நிலையை அறிய, கோயிலுக்கு சொத்து எழுதி வைத்த பெண்கள் படித்தவர்களா படிக்காதவர்களா என அவர்களின் பத்திரங்களை வாங்கிப் பார்த்தே தெரிந்துகொள்ளலாம்.

இப்படி மக்களை ஏமாற்றும் மதுவையும், மத பொய்யையும் அகற்றாமல் இருப்பது பெரும் பாதகம் ஆகும். கள்ளுக் கடை அறிவை மயக்கிக் கெடுக்கும் பாதகமாகும். கடவுள் கடை கேட்காததையும், பார்க்காததையும் பொய்யாகச் சொல்லி பொருள் பறிக்கும் பாதகமாகும்'' என விவரிக்கிறார் அயோத்திதாசர்.

அயோத்திதாசர் 'கடவுளை' வைத்து தொழில் செய்பவர்களை மதுக்கடை நடத்துபவருடன் மிகப் பொருத்தமாக ஒப்பிட்டு, கேள்வி எழுப்புகிறார். ஒரு சிறு கட்டுரையில் மதுவின் கேட்டையும், மூட நம்பிக்கையையும் விளக்கி வாசகர்களின் மனதில் பகுத்தறிவு விதை போட்டு விடுகிறார். கடவுளின் பெயரால் இழைக்கப்பட்ட அநீதியையும், மதத்தின் பெயரால் நடந்த அக்கிரமங்களையும், சாஸ்திரங்களின் மூடப்பழக்க வழக்கங்களையும் தொடர்ந்து தன் எழுத்துக்களில் அம்பலப்படுத்தி இருக்கிறார் தாசர். இதனாலே அவருக்கு பின்னால் வ‌ந்த பெரியார் 'என் பகுத்தறிவு பிரச்சாரத்துக்கும், முற்போக்கு கருத்து களுக்கும் காரணமாக இருந்தவர் அயோத்திதாசர்' என பல இடங்களில் குறிப்பிடுகிறார்.

அதேபோல, மதுவுக்கு எதிராகவும் தொடர்ந்து எழுதியிருக்கிறார். வைத்தியர் குடும்பத்தில் பிறந்த மருத்துவரான அயோத்திதாச‌ருக்கு மதுவின் கேடு நன்றாகவே தெரிந்திருக்கிறது. அதிலும் பஞ்சசீலங்களில் ஒன்றான 'மது உண்ணாமை'யை ஏற்ற‌ பவுத்தத்தை தழுவிய அவர், மது அருந்துவதை பெருங்குற்றமாகவே கருதினார். தன் வாழ்நாளின் இறுதி காலக்கட்டத்தில் தமிழனில் திரிக்குறளுக்கு (திருக்குறள் என அவர் குறிப்பிடுவதில்லை) உரை எழுத தொடங்கினார். 55 அதிகாரங்களுக்கு மட்டுமே உரை எழுதப்பட்டதில் 'கள்ளுண்ணாமை'யும் ஒன்று. அந்த அதிகாரத்துக்கு அயோத்திதாசர் எழுதிய பதவுரை, பொழிப்புரை, கருத்துரை, விரித்துரையை வாசிக்கும் போது, அதன் மீதான அவரின் உள்ளார்ந்த எண்ணம் ஒளிர்கிறது.

மதுவிலக்கு குறித்து எழுதியதோடு நில்லாமல் அதற்கு எதிரான செயல்பாட்டிலும் பிரதிபலித்திருக்கிறார் தாசர். சென்னையில் அக்காலக்கட்ட‌த்தில் நடந்த மது விலக்கு தொடர்பான கூட்டத்தில் பங்கேற்று இருக்கிறார். இதுகுறித்த செய்தி ஆய்வாளர் ஜெ.பாலசுப்பிரமணியம் தொகுத்த முத்துவீர நாவலரின் 'பூலோகவியாஸன்' இதழ் தொகுப்பில் பதிவாகி இருக்கிறது.

அதாவது 1909-ல் சென்னையில், மதுவின் தீமை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவதற்காக தமிழில் 'மதுவிலக்கு தூதன்' என்ற தமிழ் பத்திரிகையும், ஆங்கிலத்தில் 'Temperance Herald' என்ற இதழும் வெளிவந்திருக்கிறது. தமிழுக்கு எல்.டி. ஸ்டீவன், ஆங்கிலத்துக்கு டி.ஏ. சுந்தரம் ஆசிரியர்களாக இருந்தனர். இந்த இதழ்களின் சார்பில் ஜார்ஜ் டவுனில் 'மது விலக்கு சங்கம்' என்ற அமைப்பும் செயல்பட்டது.

அந்த அமைப்பின் சார்பில் 1909 ஜூலை 31-ம் தேதி சென்னை டேனிஷ் மிஷன் வாசகர் அரங்கத்தில் எம்.ஜி.கோல்ட் ஸ்மித் தேசிகர் தலைமையில் கூட்டம் நடந்தது. அதில் தமிழன் ஆசிரியர் பண்டிதர் அயோத்திதாசரும், எம்.எஸ். இராமசாமி நாய்க்கரும் தமிழில் உரையாற்றினர். எஸ்.அஜீன் உதீன் சாயுபு ஆங்கிலத்தில் உரையாற்றினார் என குறிப்பிடப்பட்டுள்ளது. அயோத்திதாசரின் சமூக செயல்பாடு தொடர்பான தகவல்கள் பெரிதாக கிடைக்காத நிலையில், இந்த ஒரு குறிப்பு கூடுதல் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ள‌து.

தாசர் மறைந்த பிறகு கோலார் தங்கவயலில் இருந்து வெளிவந்த தமிழன் இதழில் (13.4.1932) மதுவின் தீமை குறித்தும், புத்தரின் மது விலக்கு கொள்கை குறித்தும் கட்டுரை எழுதப்பட்டிருக்கிறது. இது அயோத்திதாசர் வழிமரபினர் கைக்கொண்டிருந்த மது பழக்கத்துக்கு எதிரான தொடர் எதிர்ப்புணர்வை வெளிப்படுத்தும் விதமாக அமைந்துள்ள‌து.

(பண்டிதரை படிப்போம்...)

தொடர்புக்கு: இரா.வினோத்

vinoth.r@hindutamil.co.in

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x