Last Updated : 10 May, 2020 12:17 PM

 

Published : 10 May 2020 12:17 PM
Last Updated : 10 May 2020 12:17 PM

கோவிட்-19: உடனடித் தகவலுக்கு உதவும் தளங்கள்

கோவிட்-19 இந்தியாவில் அச்சுறுத்தும் வகையில் பரவிவருகிறது. இந்தப் பின்னணியில், நம் ஊரில், மாநிலத்தில், நாட்டில் இன்றைக்கு எத்தனை பேர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள், அவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்று தெரிந்துகொள்ளும் ஆர்வம் இயல்பாகவே எல்லோருக்கும் இருக்கிறது. தொடக்கத்தில் கிரிக்கெட் ஸ்கோர் பார்ப்பதைப் போல் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையை பலரும் பொழுதுபோக்காகப் பார்த்துக்கொண்டிருந்த நிலை மாறி, இப்போதெல்லாம் அச்சத்துடனே கோவிட்-19 அன்றாட எண்ணிக்கை பார்க்கப்படுகிறது.

கோவிட்-19 எப்படி பாதித்துவருகிறது என்பது குறித்த சமீபத்திய, துல்லியமான தகவல்களைத் தெரிந்துகொள்ள எல்லோரும் விரும்புகிறார்கள். அரசு அறிவிக்கும் நோயாளர் எண்ணிக்கையை உடனுக்குடனும், அத்துடன் முந்தைய நாள், முந்தைய மாத நிலவரத்துடனும் எப்படி ஒப்பிட்டுப் புரிந்துகொள்வது என்ற கேள்வி பலருக்கும் வரலாம். அந்த வகையில் சில இணையதளங்கள் கைகொடுக்கின்றன. இந்தத் தளங்களில் பல மக்களிடையே திரட்டப்பட்ட நிதி மூலம் உருவாக்கப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு கொள்ளைநோய் காலத்தில் புரளி, தவறான நோயாளர் எண்ணிக்கையால் மக்கள் தேவையற்ற பீதிக்கு ஆளாகக்கூடும். இதுபோன்ற தன்னார்வத் தளங்கள் அதை நிச்சயமாகப் போக்குகின்றன.

அரசுக் கொள்கை வகுப்பாளர்கள்-அரசுப் பதவிகளில் முடிவெடுக்கும் அதிகாரம் படைத்தவர்கள் அடுத்தடுத்த முடிவுகளை எடுப்பதிலும், மருத்துவர்கள் உள்ளிட்ட தொழில்முறையாளர்கள் நோயைப் புரிந்துகொள்ளவும், அக்கறை மிகுந்த தன்னார்வலர்கள் சமூகத்துக்கு மேற்கொள்ளும் உதவிகளைத் திட்டமிடவும் இது போன்ற தன்னார்வத் தளங்கள் உதவுகின்றன. எதிர்காலத்தில் கோவிட்-19 பாதிப்பு, அதிலிருந்து மீண்ட விதம் குறித்த மருத்துவ, சமூகவியல் ஆராய்ச்சிகளுக்கும் இந்தத் தளங்கள் உதவும் என்பதில் சந்தேகமில்லை.

அதேநேரம் அரசு அமைப்புகள் தொடர்ச்சியாகவும் வெளிப்படையாகவும் தகவல்களை மக்களுக்குப் பகிர்ந்துகொள்ளும்போது மட்டுமே இதுபோன்ற தன்னார்வத் தளங்கள் தரவுகளை உரிய நேரத்தில், உரிய முறையில் தொகுத்துத் தர முடியும். மேற்குவங்கத்தில் கோவிட்-19 பாதிப்பால் இறந்தவர்கள் பலர், அந்த நோயால் இறந்தவர்கள் என்று பதிவுசெய்யப்படவில்லை. அதற்கு பதிலாக ஏற்கெனவே அவர்களுக்கு இருந்த வாழ்க்கை முறை சார்ந்த நோயால் இறந்ததாகப் பதிவுசெய்த தவறு நிகழ்ந்தது. இதுபோல் குழப்பமான தகவல்கள் பதியப்படும்போது மக்கள், மருத்துவர்களால் கொள்ளைநோயை கையாள முடியாமல் போய்விடும், மக்களிடையே நோயைப் புரிந்துகொள்வதில் குறைபாடு ஏற்படும் என்பதை மறந்துவிடக் கூடாது.

கோவிட்-19 நோயாளர் எண்ணிக்கை குறித்து உடனுக்குடன் தகவல்தரும் முக்கியத் தன்னார்வத் தளங்கள்:

covid19india.org

புத்தாயிரத்தின் இளைஞர்கள் என்று தங்களை அழைத்துக்கொள்ளும் அநாமதேயக் குழு இந்தத் தளத்தை நடத்துகிறது. மார்ச் 15-ம் தேதியில் இருந்து செயல்பட்டுவரும் இந்தத் தளத்தில் தேசிய, மாநிலம்வாரி வரைபடங்கள், புள்ளிவிவர அட்டவணை போன்றவற்றின் மூலம் எண்ணிக்கை, தகவல்கள் விளக்கப்படுகின்றன. தேசிய அளவில் தமிழகத்தின் நிலை, மாநில அளவில் மாவட்டங்களில் ஏற்பட்ட பாதிப்பு உள்ளிட்ட தகவல்களை இந்தத் தளம் தெளிவாகத் தருகிறது.

covindia.com

ஹைதராபாத்தைச் சேர்ந்த தரவு அறிவியலாளரும் பொறியியல் கல்லூரிப் பேராசிரியருமான அச்சல் அகர்வால், ஹைதராபாத் பொறியியல் மாணவர் என்.எஸ். ராகவ் ஆகியோர் இணைந்து உருவாக்கிய தளம். மார்ச் 14-ம் தேதியில் இருந்து செயல்பட்டுவரும் இந்தத் தளத்தில் தரவுகள் வெறும் எண்களாகத் தரப்படாமல், எளிதில் புரியும் வகையில் விளக்கமாகத் தரப்பட்டுள்ளன.

againstcovid19.com/india

சிங்கப்பூரைச் சேர்ந்த அப்கோடு அகாடமியை உருவாக்கிய ஷி பெங் லீ நிறுவிய தளம் இது. மார்ச் 31-ம் தேதியில் இருந்து செயல்பட்டுவரும் இந்தத் தளம் தரவுகளை படிநிலை வரிசையில் (hierarchy) பராமரிக்கும் அதேநேரம், ஆழமான புரிதலைத் தரும் வகையிலும் தரவுகள் தொகுக்கப்பட்டுள்ளன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x