Published : 09 May 2020 06:23 PM
Last Updated : 09 May 2020 06:23 PM

மூடினாலும் முடிவுக்கு வராத டாஸ்மாக் முறைகேடுகள்!

பல்வேறு எதிர்ப்புகளுக்கிடையே தமிழகத்தில் மே 7-ல் திறக்கப்பட்ட டாஸ்மாக் மதுக் கடைகள், உயர் நீதிமன்ற உத்தரவு காரணமாய் மறுநாள் மாலையே பூட்டப்பட்டுவிட்டன. அதற்குள்ளாக அடித்துப் பிடித்து மது வாங்கி அருந்திய பல மதுப்பிரியர்கள், குற்றச்செயல்களில் ஈடுபட்டதையும், பல விபத்துகள் நடந்ததையும் தமிழகம் பதைபதைப்புடன் பார்த்தது. மறுபக்கம் மதுக்கடைகள் தொடர்பான குற்றச் செயல்களும் தொடர்ந்து நடந்துகொண்டிருக்கின்றன.

மே 8 இரவு கோவையின் செட்டி வீதி பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையின் கூரை ஓடுகளைப் பிரித்து திருட முயன்றுள்ளார் ஒரு நபர். சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் துரத்த, அவர் தப்பி ஓடிவிட்டார். நீதிமன்ற உத்தரவு வந்து அடுத்த நாள் முதல் மதுக்கடை இயங்காது என்றவுடன் அதே இரவில் இப்படி ஒரு கடைக்குள் ஒருவர் புகுந்து திருட வேண்டிய அவசியம் என்ன என்பதுதான் பலருக்கும் புரியாத சங்கதி.
இதுகுறித்து டாஸ்மாக் ஊழியர்கள் வட்டாரத்தில் விசாரித்தோம்.

“இது ஒரு திருட்டு முயற்சிதான். உயர் நீதிமன்றத் தீர்ப்பு வந்த பின்பு அசலான திருட்டு மட்டுமில்ல, அதிர்ச்சியான கொள்ளையே மதுபானக் கடைகளில் நடந்திருக்கிறது. அதைத் தெரிந்துகொள்ளுங்கள்’’ என விவரித்தனர் டாஸ்மாக் ஊழியர்கள். அவர்கள் சொன்ன தகவல்களின் அடிப்படையில் கீழ்க்கண்ட விஷயங்கள் தொகுக்கப்பட்டுள்ளன.

மார்ச் 24-ம் தேதி பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்ட பின்னணியில் கடைகள் பூட்டப்பட்ட பின்பு சிப்பந்திகள் பலரும் கணக்கு முடித்துவிட்டனர். அதன் பிறகுதான் அரசியல் பின்புலத்துடன், லோடு லோடாக மதுபாட்டில்கள் பெட்டிகளைக் கடைவாரியாகத் தங்கள் இருப்பிடங்களில் கொண்டுபோய் அடுக்கிக்கொண்டனர் பார் முதலாளிகளும், கட்சிப் பிரமுகர்களும். இதனால் மதுக்கடை சிப்பந்திகளால் உடனே கணக்கு கொடுக்க முடியவில்லை. சீக்கிரமே கடை திறந்துவிடும்; அப்போது கணக்கு கொடுத்துவிடலாம் என்று காத்திருந்தார்கள்.

கள்ளச்சந்தைக்குக் கொண்டுசெல்லப்பட்ட குவாட்டர் விலை ரூ.200, ரூ.300 என பாய்ந்து கடைசியில் ரூ.1,300 வரை விற்றது. இதன் பின்னணியில் மதுக்கடைகளின் பூட்டை உடைத்து சமூக விரோதிகள் திருடிச் சென்ற சம்பவங்களும் உள்ளன. இதையடுத்தே இப்படி பாதுகாப்பில்லாத கடைகளில் உள்ள சரக்குகளை குடோனில் கொண்டுவந்து அடுக்க சிப்பந்திகளுக்கு உத்தரவிட்டது டாஸ்மாக் நிர்வாகம்.

அப்படிக் கண்டறியப்பட்ட சில கடைகளிலிருந்து சரக்கு கொண்டுபோய் குடோனில் அடுக்கப்பட, கொடுத்த சரக்குக்கும், அதுவரை விற்றுக் கணக்கு கொடுக்கப்பட்டதற்கும், திரும்ப வைக்கப்பட்ட சரக்குகளுக்குமான கணக்கு பலமாகவே உதைத்தது. பல கடைகளில் இந்த வித்தியாசம் மலைக்கும் மடுவுக்குமாக இருந்ததைக் கண்ட அதிகாரிகள், அந்தந்தச் சிப்பந்தியின் கணக்கில் அந்தச் சரக்குக்கான ஜிஎஸ்டி, அபராதம் எல்லாம் போட்டுவிட்டனர்.

இதில் அரண்டுபோன வேறு பல சிப்பந்திகள், மது பாட்டில்களை குடோனில் கொண்டுபோய் அடுக்கப்போனால் இப்படியொரு விபரீதம் வரும் என்று தெரிந்துகொண்டு, ‘எங்க கடைகள் எல்லாம் பாதுகாப்பாகத்தான் இருக்கு’ என்று அதிகாரிகளிடம் சொல்லி சரக்கையே குடோனுக்குக் கொண்டுவர வில்லையாம். மே 7-ம் தேதி கடை திறக்க உத்தரவு வந்தவுடன், அன்றைக்கு விற்ற சரக்குடன், மார்ச் 24-ம் தேதிக்குப் பின்னர் பதுக்கப்பட்ட, கடத்தப்பட்ட, கள்ளச்சந்தையில் விற்கப்பட்ட மதுபாட்டில் களையும் கணக்கில் சேர்த்துக்கொண்டனராம்.

அந்த வகையில் கோவையில் மட்டும் மே 7-ல், சுமார் ரூ.40 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையானதாகக் கணக்கு. ஆனால், பொதுமுடக்கம் அமலுக்கு வந்ததைத் தொடர்ந்து, கட்சிக்காரர்கள் கணக்கில் எடுத்துச்சென்றதும், இடையில் எடுத்து விற்றதுமாகச் சேர்த்து ரூ.5 கோடிக்கு மேல் இருக்குமாம்.

இப்படிப் பார்த்தால் தமிழகம் முழுக்க 7-ம் தேதி சுமார் ரூ.172 கோடி விற்பனை கணக்கில் வந்தது என்றால், சுமார் ரூ.60 கோடி முதல் ரூ.70 கோடி வரை பழைய கணக்குக்கு டேலி செய்யப்பட்டிருக்கிறது என்கிறார்கள்.

பொதுவாகவே மதுக்கடைகளில் ஒரு குவாட்டர் பாட்டிலுக்கு ரூ.5, ரூ.10 கூடுதலாக வைத்து விற்பதுதான் பெரும்பகுதி சிப்பந்திகளின் வேலை. கடை மூடிய பின்பு மொத்த பெட்டிகளைக் கணக்கிட்டு, அதற்கேற்ப கூடுதல் தொகையைத் தங்கள் பாக்கெட்டில் போட்டுவிட்டு, மீதி அசல் கணக்கை எழுதுவது அவர்களின் வழக்கம். 7-ம் தேதியன்று விற்பனையும் அதிகம். ஏற்கெனவே மார்ச் 24-ல் விட்டுச்சென்ற கணக்கை டேலி பண்ணவும் வேண்டும் என்பதாலேயே அன்று கடை மாலை 5 மணிக்கு மூடப்பட்டும்கூட கணக்கு முடிக்க இரவு 10 மணிக்கு மேலாகிவிட்டதாம்.

இது ஒரு பக்கம். 7-ம் தேதி இந்தக் கணக்கு வழக்குகளை எல்லாம் சரிப்படுத்தி, மறுநாள் வழக்கம்போல் மது விற்றுவிட்டு விட்டு மாலை 5 மணிக்கு கடை பூட்டிய பின்புதான், ‘பொதுமுடக்கம் உள்ள வரை டாஸ்மாக் கடைகளில் மது விற்கக்கூடாது; ஆன்லைனில் மட்டும் விற்கலாம்’ என்ற உயர் நீதிமன்ற உத்தரவு வந்தது. அந்தத் தகவல் டாஸ்மாக் மதுபானக் கடை ஊழியர்களுக்கு முன்னதாகவே ‘பார்’ உரிமையாளர்களுக்குத் தெரிந்துவிட்டதாம். மதுக்கடை சிப்பந்திகள் கணக்கு முடித்து அக்கடா என உட்காரும்போது ‘பார் ’ உரிமையாளர்கள் (கட்சிக்காரர்கள்) கடைக்குள் புகுந்துகொண்டனராம்.

அவர்கள், “இனி 17-ம் தேதி வரைக்கும் கடை திறக்க வாய்ப்பில்லை. இருக்கிற சரக்குப் பெட்டிகளையெல்லாம் எடுத்து எங்களுக்குக் கொடுத்துவிட்டுப் போங்கள்” என்று வற்புறுத்தினார்களாம். ஆளுங்கட்சிப் பிரமுகர்களின் சிபாரிசு போன்களும் தூள் பறந்திருக்கிறது. சிப்பந்திகளுக்கும் வேறு வழியில்லாமல் அவர்கள் கேட்ட மது பாட்டில் பெட்டிகளை எடுத்துக் கொடுத்துவிட்டனர்.

எனினும், ‘ஏற்கெனவே எழுதிய விற்பனைக் கணக்கை அலுவலகத்தில் கொடுத்துவிட்டால் கடந்த மார்ச் 24 முதல் மே 6 வரை நடந்த கதையாகிவிடும். அதிகாரிகள் வந்து திடீர் கணக்கு எடுத்தாலோ, குடோனில் வைக்கச்சொல்லி இடையில் உத்தரவு போட்டாலோ அபராதம், ஜிஎஸ்டி என பெருந்தொகைக்கு நம்ம மாட்டிக்கொள்வோம்’ என்று ஊழியர்கள் உணர்ந்தனர்.

எனவே விற்ற கணக்கைக் கிழித்துப்போட்டுவிட்டு ‘பார்’ உரிமையாளர்களுக்குக் கொடுத்ததையும், கள்ளச்சந்தையில் விற்கப்பட்ட சரக்கையும், கணக்கில் புதிதாக எழுதி அலுவலகத்திற்கு அதை சரண்டர் செய்வதற்கு இரவு 10 மணி ஆகிவிட்டதாம். இதில் எந்த அளவு கள்ளக்கணக்கு உலவியிருக்கிறது என்பதற்கு ஒரு கடையையே உதாரணம் காட்டினார் ஒரு மதுபானக் கடை சிப்பந்தி.

‘‘கோவை வீரகேரளம் பகுதியில் இரண்டு மதுக் கடைகள், சுமார் 50 மீட்டர் இடைவெளியில் உள்ளன. அவற்றில் ஒரு கடையில் நடந்த ஒரு நாள் விற்பனை சுமார் ரூ.19 லட்சம். இன்னொரு கடையில் சுமார் ரூ.6 லட்சம். அருகருகில் உள்ள இரண்டு கடைகளில் எவ்வளவுதான் கூட்டம் இருந்தாலும் ஒன்றுக்கொன்று ரூ.50 ஆயிரம் விற்பனை வித்தியாசப்படலாம். ஆனால், இப்படி ரூ.13 லட்சம் வித்தியாசப்படுமா என்ன?” என்று அர்த்தபுஷ்டியுடன் கேட்கிறார் அந்தச் சிப்பந்தி.

தொடர்ந்து பேசிய அவர், ''மே, 7-ம் தேதி விற்றதில் எப்படி கள்ளச்சந்தைக்கு வந்த மது விற்பனைக் கணக்கும் இடம்பெற்றதோ, அதேபோல் 8-ம் தேதி விற்றதில் இன்று முதல் கள்ளச்சந்தைக்கு வரும் மது விற்பனையின் கணக்கும் அடங்கியிருக்கிறது. போன தடவை ரூ.1,300 வரை சென்ற குவாட்டர் விலை, இந்த முறை அதையும் தாண்டுமோ தெரியவில்லை. அதனால்தான் இதுதான் சமயம் என்று எடுத்த எடுப்பில் மதுக் கடைகளைக் குறிவைக்கிறார்கள் திருடர்கள். ஒரு பெட்டியில் 50 பாட்டில்கள் இருக்கும். அதை எடுத்துப்போய் ஒரு பாட்டில் ரூ.1,000க்கு கள்ளச்சந்தையில் விற்றாலும் ரூ.50 ஆயிரம் தேறுமே. இந்த மதுக்கடையில் திருட முயற்சித்தது ஒன்று அப்படியான திருடனாக இருக்க வேண்டும் அல்லது அந்தப் பகுதியைச் சேர்ந்த ‘பார்’ உரிமையாளர்களின் ஆளாக இருக்க வேண்டும்’’ என்று குறிப்பிட்டார்.

உயர் நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருக்கிறது தமிழக அரசு. அடுத்த உத்தரவு வரும் வரை இன்னும் என்னென்ன கூத்துகள் நடக்குமோ?

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x