Published : 09 May 2020 04:40 PM
Last Updated : 09 May 2020 04:40 PM

வறுமையுடன் போராடும் 62 லட்சம் கட்டுமானத் தொழிலாளர்கள்: நலவாரியத்தில் இல்லாததால் தவிப்பு- தீர்வு என்ன?

மதுரை

நலவாரியத்தில் பதிவை புதுப்பிக்காத, பதியாத 62 லட்சத்து 86 ஆயிரத்து 118 கட்டுமானத்தொழிலாளர்கள் அரசு நிவாரணம் கிடைக்காமல் வறுமையுடன் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.

வாழ்க்கையின் அடிமட்டத்தில் இருப்பவர்கள் கட்டுமானத்தொழிலாளர்கள். இவர்கள் அன்றாடம் வேலைக்கு சென்றாலே வீடுகளிலே அடுப்பு எரியும். ‘கரோனா’ ஊரடங்கால் கட்டுமானத்தொழில் முடங்கியதால் கடந்த 2 மாதமாக இவர்கள் வீடுகளில் வருமானம் இல்லாமல் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கின்றனர்.

யானை பசிக்கு சோளப்பொறி போல அரசு இவர்களுக்கு முதற்கட்டமாக ரூ.1,000, இரண்டாம் கட்டமாக ரூ.1,000 நிவாரணம் அறிவித்தது. இதில், முதல் தவனை நிவாரணத்தொகையே இன்னும் பெரும்பான்மை தொழிலாளர்களுக்கு அவர்கள் வங்கி கணக்கில் செலுத்தப்படவில்லை.

அதுவும், மதுரையில் இந்த நிவாரணம்பெரும்பாலான தொழிலாளர்களுக்கு இன்னும் வழங்கவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. நலவாரியத்தில் உறுப்பினர் அட்டையை புதுப்பித்த தொழிலாளர்களுக்கு மட்டுமே, அது சொற்பமானவர்களே இந்த நிவாரணம் கிடைத்துள்ளதாக கட்டுமாத்தொழிலாளர்கள் சங்க நிர்வாகிகள் ஆதங்கம் அடைந்துள்ளனர்.

இதுகுறித்து தமிழ்மாநில கட்டிடத்தொழிலாளர்கள் சங்கம் மதுரை மாவட்ட கண்காணிப்புக்குழு உறுப்பினர் இரா.கணேசன் கூறியதாவது;

அரசு அனுமதி வழங்கினாலும் இன்னும் கட்டுமானத்தொழில் தொடங்கவில்லை. மிக அரிதாக சில இடங்களில் அரசு டெண்டர்களை கான்டிராக்டர் எடுத்த பணிகள் மட்டுமே நடக்கிறது.

அதனால், வருமானம் இல்லாமல் கட்டுமானத்தொழிலாளர்கள் பசி, பட்டினியுடன் குழந்கைதளுடன் வீடுகளில் வறுமையுடன் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.

அரசு அறிவித்த நிவாரண உதவி, நலவாரியத்தில் பதிவு பெற்ற தொழிலாளர்களுக்கு மட்டும் வழங்கப்படுகிறது. தமிழகத்தில் 75 லட்சத்திற்கு மேல் தொழிலாளர்கள் உள்ளார்கள். இதில், நல வாரியத்தில் பதிவு பெற்றவர்கள் 30 லட்சம் பேர் மட்டுமே உள்ளனர். இதிலும் வெறும் 12 லட்சத்து 13 ஆயிரத்து 882 பேருக்கு மட்டுமே அரசு அறிவித்த நிவாரணம் செல்கிறது.

பதிவை புதுப்பிக்காத கட்டுமானத்தொழிலாளர்களை இந்த பயனாளிகள் பட்டியலில் இருந்து கழித்துவிட்டார்கள். அதனால், 62 லட்சத்து 86 ஆயிரத்து 118 கட்டுமானத்தொழிலாளர்கள் அரசு அறிவித்த நிவாரணம் பெற முடியவில்லை. அரசு கவனத்தில் கொண்டு நலவாரியத்தில் உறுப்பினராக சேர்ந்து தற்போது புதுப்பிக்காவிட்டாலும் அவர்களுக்கும் நிவாரணம் கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், ’’ என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x