

கரோனா ஊரடங்கால், உலகமே முடங்கிக் கிடக்கும் இந்த வேளையில், ‘வேலைக்குப் போனால்தான் சம்பளம்’ என்றிருப்பவர்கள் அதிகம். மாதச்சம்பளக்காரர்களுக்கு இருக்கிற கஷ்டங்கள் ஒருபக்கம், இந்த ஊரடங்கால் எலெக்ட்ரீஷியன்களும் பெயிண்டர்களும் பிளம்பர்களும் படுகிற கஷ்டங்கள் சொல்லிமாளாது.
வீடுகளில் ஏதேனும் எலெக்ட்ரிக்கல் பிரச்சினைகள் என்றாலும் ‘இதையெல்லாம் கரோனா முடிஞ்சதும் பாத்துக்கலாம்’ என்று பலரும் நினைக்க, இதேதேன் பெயிண்டிங் வேலையிலும் பிளம்பிங் வேலையிலும். விளைவு... வேலை இல்லாமல், வேலைக்கு எவரும் அழைக்காமல், பொது முடக்கத்தால் முடங்கித் தவிக்கிறார்கள் இவர்கள்.
எல்லார் வீடுகளிலும் எலெக்ட்ரீஷியன், பெயிண்டர், பிளம்பர் என தேவைக்கு அழைக்க அவர்களின் நம்பர்கள் இருக்கும். உடனே அழைப்பார்கள். அந்த வேலைகள் முடிந்துவிடும். இப்போது, இவர்களின் செல்போன்கள், ‘வேலை அழைப்பு’ இல்லாமல் ஏங்கிக் கொண்டிருக்கின்றன. கரோனா முடக்கத்தால், இவர்களை மறந்தேபோனார்கள் மக்கள்.
சென்னை சூளைமேடு காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட நமசிவாயபுரத்தில், 100க்கும் மேற்பட்ட பெயிண்டர்களும் எலெக்ட்ரீஷியன் குடும்பங்களும் இருக்கின்றன. ’வேலை வாய்ப்புமில்லை, வேலைக்கு யாரும் அழைக்கவுமில்லை. குடும்பத்தை நடத்தவும் தினமும் மூன்று வேளை சாப்பிடவும் மிகுந்த சிரமப்படுகிறோம். எங்களுக்கு உதவுங்கள்’ என்று சென்னை சூளைமேடு காவல் ஆய்வாளர் ஆனந்த் பாபுவிடம் கோரிக்கை விடுத்தார்கள்.
’அட... ஆமாம்ல. இவங்க என்ன செய்வாங்க?’ என்று சிந்தித்த இன்ஸ்பெக்டர் ஆனந்த்பாபு, மின்மினி வென்சர் நிறுவன பொது பங்குதாரர் டாக்டர் நரேந்திர நாராயணன் மற்றும் சக்தி பவுண்டேஷன் அறங்காவலர் கமலா அன்பரசன் ஆகியோரிடம் இவர்களின் கோரிக்கையைப் பகிர்ந்துகொண்டார்.
உடனே நேசக்கரம் நீட்ட கருணையுடனும் அன்புடனும் சம்மதித்தார்கள்.
அதன்படி சூளைமேடு நெடும்பாதையில் அமைந்துள்ள ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நுங்கம்பாக்கம் காவல்நிலைய உதவி ஆணையர் முத்துவேல் பாண்டியன் தலைமையில் எல்லோரும் கூடினார்கள். அந்தப் பகுதியில் வசித்துவரும் பெயிண்டர்கள், எலெக்ட்ரீஷியன்கள் முதலானவர்களை அழைத்து, ரூ 1500/- மதிப்புள்ள 10 கிலோ அரிசி மற்றும் மளிகைப் பொருட்கள் அடங்கிய பைகளை அனைவருக்கும் வழங்கினார்கள்.
மொத்தம் ரூ 1,50,000/- மதிப்பிலான நிவாரணப் பொருட்கள், சுமார் 100 குடும்பங்களுக்கு வழங்கப்பட்டன.
மின்மினி வென்சர் நிறுவன பொது பங்குதாரர் டாக்டர் நரேந்திர நாராயணன், சக்தி பவுண்டேஷன் அறங்காவலர் கமலா அன்பரசன், சூளைமேடு காவல் நிலைய ஆய்வாளர் ஆனந்த் பாபு, உதவி ஆய்வாளர் ராமகிருஷ்ணன் மற்றும் காவலர்களின் இந்தச் சேவைக்கு, அந்தப் பகுதி மக்கள், கண்ணீரும் புன்னகையுமாக தங்கள் நன்றியை வெளிப்படுத்தினார்கள்.
அந்த எலெக்ட்ரீஷியன் குடும்பத்தார் முகங்களில் நூறுவாட்ஸ் பல்பின் பிரகாசம். பெயிண்டர்களின் குடும்பத்தார் முகங்கள், இந்த உதவிகளால் பளிச்சென்றாகின.