Last Updated : 08 May, 2020 07:18 PM

Published : 08 May 2020 07:18 PM
Last Updated : 08 May 2020 07:18 PM

ஆளுமை வளர்ப்போம்: கடினமான மனிதர்களைச் சமாளிப்பது எப்படி?

உறவுகளின் மூலம் கட்டப்பட்டிருக்கும் சமூக உயிரினம் மனித இனம். நம்முடைய மகிழ்ச்சியும் வளர்ச்சியும் அந்த உறவுகளைச் சார்ந்திருப்பது இயற்கையே. ஆனால், எல்லா உறவுகளும் மகிழ்ச்சியை நமக்கு அளிப்பதில்லை. சில உறவுகள் சவாலானதாகவும் கடினமானதாகவும் இருக்கும்.

கடினமான மனிதர்களை எதிர்கொள்ளும் சூழ்நிலையில் உண்டாகும் மன அழுத்தமானது எரிச்சலையும் பயத்தையும் ஏற்படுத்தும். இதனால் நிம்மதியற்ற உணர்வுநிலைக்குத் தள்ளப்படுவோம். கொஞ்சம் பொறுமையும் புரிதலும் இருந்தால், எத்தகைய கடினமான மனிதர்களையும் நம்மால் எளிதாகக் கையாள முடியும். அதற்கான வழிமுறைகள் இங்கே.

கடினமான மனிதர்களை எதிர்கொள்ளும்போதெல்லாம் நம்மை நாமே கேட்டுக்கொள்ள வேண்டிய நான்கு கேள்விகளைப் பரிந்துரைக்கிறது, மார்ஷல் ரோசென்பெர்க் எழுதிய ‘அகிம்சை கருத்துப் பரிமாற்றம்’ (Nonviolent Communication) எனும் புத்தகம்.

1. இப்போது என்ன நடந்தது? (எந்த மதிப்பீடுமின்றி உள்ளதை உள்ளவாறு மட்டும் பார்ப்பது)

2. எத்தகைய உணர்ச்சிகள் எனக்குள் எழுந்தன? (பாதிக்கப்பட்டவரின் மனநிலைக்குச் செல்லாமல், நம் உணர்ச்சிக்கும் நம்பிக்கைக்கும் நாமே பொறுப்பேற்பது)

3. நிறைவேறாத அந்தத் தேவை என்ன? (நம் தேவையை மற்றவர்கள் தெரிந்துகொள்வார்கள் என்று ஊகம் செய்யாமல், நம் தேவை எது என்பதைத் தெளிவாக அறிவது)

4. நான் எதைக் கேட்கிறேன்? (நமக்கு என்ன தேவை என்பதைத் தெளிவான வடிவில் கேட்பது)

மாற்ற வேண்டிய பார்வை

உறவைப் பலப்படுத்த இந்தக் கேள்விகள் உதவும். இதையும் மீறிச் சமாளிக்க முடியாத வகையில் கடினமான மனிதராக இருந்தால், அவர்களை எதிர்கொள்ள, கீழே கொடுக்கப்பட்டுள்ள ஏழு வழிமுறைகள் உதவும். சூழ்நிலைக்கு ஏற்ற மாதிரி, இவற்றைத் தனியாகவோ ஒன்றன்பின் ஒன்றாகவோ பயன்படுத்தலாம். மேலும் இந்த வழிமுறைகளின் நோக்கம், அவர்களைப் பற்றிய உங்கள் பார்வையை மாற்றுவது தானே ஒழிய, அவர்களின் நடத்தையை மாற்றுவதல்ல என்பதை மனதில் கொள்வது அவசியம்.

நிறுத்துங்கள்

சிக்கலான மனிதர்களைக் கையாளுவதற்கு S.T.O.P. வழிமுறை அடிப்படையானது. Stop, Take, Observe, Proceed என்கின்ற நான்கு சொற்களின் முதலெழுத்துகளைத் தொகுத்து உருவாக்கப்பட்ட சொல் இது.

Stop - என்ன செய்கிறோமோ அதை அப்படியே நிறுத்துவது.
Take – மூன்று முறை மூச்சை நன்கு ஆழமாக இழுத்துவிடுவது.
Observe – நாம் என்ன உணர்கிறோம் என்பதை உற்றுக் கவனிப்பது.
Proceed – அன்புடனும் பரிவுடனும் செயல்படுவது.
கட்டுப்பாட்டை இழந்து, உணர்ச்சிவசப்பட்ட நிலையில் எதிர்வினை புரியாமல் இருப்பதற்கு இந்த வழிமுறை உதவும்.

பார்வையாளராக மாறுங்கள்

நம்மைக் கட்டுப்படுத்த அவர் அரங்கேற்றும் நாடகத்தை ஊடுருவிப் பார்ப்பது பிரச்சினையைக் கையாளப் பெரிதும் உதவும்.

நம் குழந்தைப் பருவத்தில் கற்றதுதான் இந்த நாடகத்தனம். தேவையானது கிடைக்க வேண்டும் என்பதற்காக இதை நாம் பால்ய பருவத்தில் அடிக்கடி பயன்படுத்தியுள்ளோம். அடம், அழுகை, சின்ன சின்னப் பொய்கள் ஆகியவை இதில் அடங்கும். குழந்தைகளின் இந்தத் தன்மையில் ஒரு வெகுளித்தனம் இருக்கும். ஆகையால், மற்றவர்களால் இதனை மகிழ்ச்சியுடன் எதிர்கொள்ள முடியும்.

நாம் வளர்ந்த பின் இந்த நாடகத்தனத்தை உதறிவிடுவோம். ஆனால் சிலர் மட்டும், வளர்ந்தபின்னும்கூட, தனக்கு வேண்டியதைப் பெற நாடகத்தனத்தைப் பயன்படுத்துகிறார்கள். சிலர் நல்லவிதமாக நடந்துகொண்டு திரித்துப் பேசுவார்கள். சிலர் மோசமாக நடந்துகொண்டு திரித்துப் பேசுவார்கள். சிலர் தனித்து விலகி இருப்பார்கள். சிலர் பாதிக்கப்பட்ட அல்லது பாவப்பட்ட மனிதரைப் போல் இருப்பார்கள்.

சொல்லப்போனால் அவர்கள் மனதால் முதிர்ச்சியற்றவர்கள் என்றுதான் சொல்ல வேண்டும். இந்தப் பார்வையின் அடிப்படையில், சிக்கலான மனிதரின் நாடகத்தனத்தைப் பார்த்தோமென்றால், நம்மால் அவரது முதிர்ச்சியின்மையைப் புரிந்துகொண்டு, அந்த உறவைச் சற்று எளிதாகச் சமாளிக்க முடியும்.

தனிப்பட்ட முறையில் எடுத்துக்கொள்ளாதீர்கள்

சிக்கலான மனிதர்களின் பேச்சும் நடவடிக்கையும் எப்போதும் நம் மீதான தனிநபர் தாக்குதலாகத்தான் தோற்றமளிக்கும். ஆனால், உண்மை அதுவல்ல. அவர்களின் பேச்சும் நடவடிக்கையும் உங்களைப் பற்றியதல்ல. அது அவர்களைப் பற்றியது. உங்கள் மீதான தனிநபர் தாக்குதலாக அதை எடுத்துக்கொண்டு, உணர்ச்சிவசப்பட்டு, அதற்கு எதிர்வினை புரிந்தால், அது பிரச்சினையை அதிகரிப்பதோடு மட்டுமில்லாமல், உங்கள் நிம்மதியையும் குலைக்கும்.

எதிர்வினையாற்றாமல் இருக்க

எதிர்வினை ஆற்றாமல் இருப்பதால், நீங்கள் அடங்கிப்போகும் தன்மையுள்ளவர் என்று அர்த்தமல்ல. உங்கள் கருத்தையும் அந்தச் சூழ்நிலை பற்றிய பார்வையையும் நீங்கள் வெளிக்காட்டாமல், உங்களுக்குள் வைத்துக்கொள்ளலாம். ஏனென்றால் சிக்கலான மனிதர்கள், எப்போதும் ஒரு வரைமுறைக்குள் அடங்க மாட்டார்கள். எனவே, அவர்களிடம் தர்க்கத்தில் ஈடுபடுவது காலவிரயம். உங்கள் புத்திசாலித்தனத்தைப் புறம் தள்ளி வைத்துவிட்டு, எதிர்வினை ஆற்றாமல் இருந்தால், அவர் கொட்ட வேண்டியதைச் சீக்கிரமாகக் கொட்டி முடித்துவிட்டு, வெற்றி பெற்ற திருப்தியில் மனநிறைவு கொள்வார். இதன் மூலம் அந்தச் சூழ்நிலையை உங்கள் கட்டுக்குள் அமைதியான முறையில் வைத்துக்கொள்ளலாம்.

அனுபவம்தான் நம் வாழ்வின் ஆகச் சிறந்த ஆசான். சிக்கலான மனிதர்களைச் சமாளிப்பது எந்த அளவுக்குச் சவால் மிக்கதாக இருக்கிறதோ, அந்த அளவுக்கு நமக்கு அது அனுபவப் படிப்பினையாக மாறும். இந்த அனுபவங்கள், புதுவிதமான மனிதர்களைச் சமாளிப்பதற்கான புது வழிமுறைகளை நமக்குக் கற்றுத்தரும். ஆக, நாம் மேம்பட நம்மை உந்தித்தள்ளுபவர்களாக அவர்களைக் கருதுவோம்!

தொடர்புக்கு: mohamed.hushain@hindutamil.co.in

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x