Last Updated : 08 May, 2020 05:59 PM

 

Published : 08 May 2020 05:59 PM
Last Updated : 08 May 2020 05:59 PM

அயோத்திதாசர் 175: அத்தியாயம் 4- ஞானம் நிறைந்த பூர்வ மருத்துவர்!

இந்திய மருத்துவ முறைமைக்கு நீண்ட நெடிய வரலாறு இருக்கிறது. செவ்வியல் ஆயுர்வேத மருத்துவமும், மரபான சித்த‌ மருத்துவமும் தனித்தனியாகவும், ஒன்றையொன்று சார்ந்தும் இயங்கின. சித்த மருத்துவர்கள் பெரும்பாலும் குடும்பப் பாரம்பரியப் பின்னணி கொண்டவர்கள். மூலிகைகளை அடையாளம் காண்பதிலும், மருந்துகள் செய்வதிலும், அவற்றைப் பரிசோதிப்பதிலும், நோயைக் குணப்படுத்துவதிலும் அவர்களுக்கு நல்ல தேர்ச்சி உண்டு.

அயோத்திதாசர் அத்தகைய பின்னணியில் இருந்து வந்தவர். இயற்பெயர் காத்தவராயன். அவரது பாட்டனார் கந்தப்பனும், தந்தையார் கந்தசாமியும் பரம்பரை‌ சித்த மருத்துவர்கள். அவரது குடும்பம் ஓலைச்சுவடிகள் வாசிப்பு, நாள்கோள் கணிப்பு, ஜோதிடம், பண்டைய இலக்கியத்திலும் பாண்டித்தியம் கொண்டது. தந்தை கந்தசாமி ம‌யிலாப்பூரில் மருத்துவத் தொழில் செய்ததோடு பச்சைக் கற்பூரம், நீலம், சோப்பு உள்ளிட்டவற்றைத் தயாரித்து விற்பனை செய்தார். இதனால் இளமைக் காலத்திலே காத்தவராயனுக்கு சித்த மருத்துவத்தில் பரிச்சயம் உருவாகிவிட்டது.

தேனாம்பேட்டையில் இலக்கியம், சித்த மருத்துவம், தத்துவம், பன்மொழி ஆகிய‌வற்றில் சிறந்து விளங்கிய வல்லக்காளத்தி கவிராஜ வீ.அயோத்திதாச பண்டிதரிடம் மரபுக் கல்வி கற்க காத்தவராயன் சென்றார். கவிராஜ வீ.அயோத்திதாச பண்டிதர் போகர் எழுநூறு, அகத்தியர் பரிபாஷை இருநூறு, அகத்தியர் சிமிட்டு ரத்தினச் சுருக்கம், பாலவாகடம், புலிப்பாணி வைத்தியம் ஐந்நூறு உள்ளிட்ட மருத்துவ நூல்களை சுவட்டில் இருந்து அச்சுக்குக் கொண்டு வந்த‌வர். அத்தகைய பெருமைமிகு அறிஞ‌ரிடம் மரபான கல்வியும், மருத்துவமும் கற்ற காத்தவராயன் ஆசிரியர் மீதான பற்றின் காரணமாக தனது பெயரை, அயோத்திதாசர் எனவும் மாற்றிக்கொண்டார்.

மேலும், அன்றைய காலகட்டத்தில் பல்துறையில் சிறந்து விளங்கிய காசிமேடு சதாவதாணி வைரக்கண் வேலாயுதம் புலவர், பரங்கிமலை பத்ர தேசிகானந்த அடிகள் ஆகியோரிடமும் கல்வியும், மருத்துவமும் கற்று தேர்ந்தார். பன்மொழிப் புலமையும், பல்துறை வித்தகமும் பெற்றிருந்ததால் 'பண்டிதர்' பட்டம் அயோத்திதாசரைத் தேடி வந்தது.

அயோத்திதாசரின் சமூக அரசியல் செயல்பாடு, பவுத்த அடையாளம் உருவாவத‌ற்கு முன்பே சித்த மருத்துவர் முகம் வெளிவந்தது. அதுவே அவருக்கு சமூக அங்கீகாரத்தையும், பொருளாதார பலத்தையும் கொடுத்தது. அந்த பலத்தை சமூக விடுதலைக்கும், வரலாற்று மீட்புக்கும் பயன்படுத்தினார்.

ஆங்கிலேய அதிகாரிகளுடன் தொடர்புடைய குடும்பம் என்பதால் அயோத்திதாசரின் வாழ்க்கை 1890 வரை சென்னையிலும், நீலகிரியிலும் மாறிமாறிக் கழிந்தது. நீலகிரியில் தங்கியிருந்த‌ 17 ஆண்டுகள், மருத்துவம் பார்த்து, பெயர்பெற்ற மருத்துவராகத் திகழ்ந்தார். இதனால் அந்தக் காலத்திலேயே மாதம் 70 ரூபாய் முதல் 100 ரூபாய் வரை வருமானம் ஈட்டும் அளவுக்கு பிரபலமாக இருந்தார் என ஆங்கிலேய போலீஸாரின் உளவு அறிக்கை சொல்கிறது.

அயோத்திதாசர் நீலகிரியில் 'துளசி மாடம்', 'அத்வைதானந்த சபை' உள்ளிட்டவற்றை நிறுவி, குடில் அமைத்து மருத்துவம் பார்த்தார். துண்டறிக்கைகள், சிறு வெளியீடுகள் வாயிலாக அவரது புகழ் பரவியிருந்தது. சென்னைக்கு இடம்பெயர்ந்த பின்னரும் அவர் பிரபல மருத்துவராக விளங்கியதைத் தமிழ்த்தென்றல் திருவிக தன் நாட்குறிப்பில் குறிப்பிடுகிறார். தான் 9 வயதில் முடக்கு வாதத்தால் முடங்கிக் கிடந்தபோது அயோத்திதாசர் பூரண குணமடையச் செய்ததை, மருத்துவ முறையோடு விவரித்திருக்கிறார்.

அதில், ''முடக்குவாத நோயினால் அவதிப்பட்ட எனக்குப் போலி மருத்துவர் கொடுத்த மருந்தைத் தின்று நோய் முற்றிப் போனது. அப்போது ராயப்பேட்டையை சேர்ந்த சிறந்த மருத்துவர் அயோத்திதாஸ் பண்டித‌ர் சிகிச்சையில் இறங்கினார். முதலில் தினமும் முழங்காலுக்குத் தைலம் பூசினார். ஒரு வாரத்தில் முட்டியில் புண் தோன்றியது. அதைப் பார்த்த பண்டிதர், கொஞ்ச காலம் ஆனாலும் முடக்குவாதத்தைக் குணப்படுத்திவிடலாம் என நம்பிக்கையூட்டினார். மெழுகு, ரசாயனம், பஸ்பம், கிருதம், சூரணம் என வரிசையாக ஓராண்டுக்கு மருந்து கொடுத்தார்.

பலவித மருத்துவ‌ சோதனைகளுக்குப் பிறகு பண்டிதர், இதயம் நன்றாக இருக்கிறது. நாடியும் செம்மையாக ஓடுகிறது. புது மருந்து எடுப்பதற்கு முன் குடலுக்கு ஓய்வு தேவை என ஒரு மாதம் கழித்து புதுமருந்தைக் கொடுத்தார். அது என்ன முருக மருந்தோ தெரியவில்லை. அது செய்த அற்புதத்தால் குணமடைந்தேன். ஒரு மாதம் மீண்டும் தைலம் பூசிய பின் முடங்கிய கைகளும், கால்களும் நீண்டன. உடலும் தேறியது. முடவன் என்ற பெயர் நீங்கி எழுந்து நிற்கத் தொடங்கினேன்'' என்று நன்றியுணர்ச்சியோடு விவரிக்கிறார் திருவிக.

மேலும், அயோத்திதாச‌ரின் சிகிச்சை முறையைப் பற்றி, ''பாம்பு, தேள் கடிபட்டு வருபவர்களுக்கு மருந்து சிகிச்சை அளிக்காமல், தலையை நீவி குணப்படுத்திவிடுவார். பல வகையான வலியால் அழுது துடிப்பவ‌ர்களுக்கு புன்னகைத்துக்கொண்டே சரிப்படுத்திவிடுவார். தீராத மயக்கங்களை எல்லாம் தம் முன்னே நிற்க வைத்து உற்றுநோக்கி குணப்படுத்திவிடுவார். இதையெல்லாம் வைத்து பண்டிதர் பெருமை பேசமாட்டார். சில நாட்கள் பயிற்சி செய்தால் யாருக்கு வேண்டுமானாலும் இந்த சக்தி வரும் என்பார்'' என திருவிக சொல்கிறார்.

அயோத்திதாசர் தன் 'தமிழன்' இதழில் வைத்தியக் குறிப்புகளையும், வெப்ப நோய், பெருவாரிக் காய்ச்சல், நளீர் சுரம், பிளேக் உள்ளிட்ட நோய் பற்றிய செய்திகளையும் தொடர்ந்து வெளியிட்டிருக்கிறார். இந்திய மருத்துவ முறையில் பவுத்தர்களின் பங்களிப்பையும், மூலிகை, உப்பு, ரத்தினங்களிருந்து மருந்து தயாரிக்கப்பட்ட முறையையும் விளக்கி இருக்கிறார். நாடிப் பரீட்சை ( நாடித் துடிப்பைக் கொண்டு நோய் அறிதல்), முகப் பரீட்சை (முக பாவனை பார்த்து நோய் அறிதல்), விழிக்குறி (விழியின் ரத்த நாளங்களில் ஏற்படும் மாற்றத்தைக் கண்டு நோய் அறிதல்), நீர்க்குறி (சிறுநீர் மூலம் நோய் அறிதல்), மலக்குறி (மலத்தைக் கொண்டு நோய்த் தன்மை அறிதல்), சுவாசக்குறி (சுவாசப் பாதையின் மூலம் நோய் நிலை அறிதல்) உள்ளிட்ட சிகிச்சை முறைகளையும் அடுக்கி இருக்கிறார்.

'சூரியோதயம்' இதழை வெளிட்ட திருவேங்கட சாமி பண்டிதர் தேரையர் வைத்தியம், தன்விந்தியர் நிகண்டு, சித்தர் நூல்களைப் பதிப்பித்துள்ளார். இப்போது பதிப்பிக்கப்பட்டுள்ள நீதி, வைத்திய நூல்களில் பாதிக்குப் பாதி ஒடுக்கப்பட்டோரிடம் இருந்து பெறப்பட்டது என்கிறார் அயோத்திதாசர். சுவடிகளில் இருந்து சித்த மருத்துவ நூல்கள் அச்சுக்கு மாற்றி, பதிப்பிக்கப்பட்டபோது அதில் இருந்த குறைகளை தமிழனில் சுட்டிக்காட்டினார்.
பவுத்த தத்துவம், இலக்கியத்துக்கு விளக்கும் போதுகூட மருத்துவக் குறிப்புகளையும், செய்யுள்களில் இருக்கும் மருத்துவக் குறிப்பையும் கூறி தெளிவுபடுத்தினார். இதற்கு அவரின் இலக்கிய, மருத்துவ அறிவுமிகுந்த குடும்பப் பின்னணியே காரணம்.

1914-ல், அயோத்திதாசர் மறைந்த போது திருவிக, ‘ஒன்பதா மாண்டிவனை யுற்ற வுடற்பிணியாந் / துன்பொழித்த தேசிகனே' என வருத்தத்தோடு இரங்கற்பா வடித்தார். தமிழ்த் தென்றலின் வரிகளை வாசிக்கையில் சரகரின், 'ஞானமிக்க மருத்துவன் சாவானையும் வாழ வைப்பான்' என்ற வார்த்தைகள் நினைவுக்கு வருகின்றன.

அயோத்திதாசரின் சித்த மருத்துவப் பங்களிப்பைக் கவுரவிக்கும் விதமாக முன்னாள் மத்திய அமைச்சர் தலித் எழில்மலை, தாம்பரம் தேசியச் சித்த மருத்துவ நிறுவனத்திற்கு அவ‌ரின் பெயரைச் சூட்டினார். தலித் சாகித்ய அகாடமி வாயிலாக பண்டிதரின் நூல்களையும் வெளிக்கொணர்ந்தார். சித்த மருத்துவப் பாடநூலிலும் அயோத்திதாசரின் ‘பாலவாகடம்’ பற்றிய குறிப்பு இடம்பெற்றிருக்கிற‌து.

அயோத்திதாசரின் மருத்துவச் சிந்தனைகளைப் பார்க்கும்போது வியப்பும் விரக்தியும் ஒருசேர ஏற்படுகிறது. அவரது சமூக அரசியல் செயல்பாடு, சிந்தனைகள் விவாதிக்க‌ப்பட்ட அளவுக்கு அவரது மருத்துவச் செயல்பாடு ஆய்வு செய்யப்படவில்லை. அவ்வாறு செய்தால் அயோத்திதாசர் இந்திய மரபு‌ மருத்துவத் துறைக்கும், தமிழ் மருத்துவத்துக்கும் அளித்த பல கொடைகள் தெரியவரும்.

(பண்டிதரைப் படிப்போம்..)

தொடர்புக்கு: இரா.வினோத் - vinoth.r@hindutamil.co.in

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x