Published : 08 May 2020 01:48 PM
Last Updated : 08 May 2020 01:48 PM

கரோனா இறுக்கத்தைப் போக்கிய நிலாச்சோறு: அனுபவித்துச் சொல்லும் அனுசுயா வெங்கடேசன்

குடும்பமே ஒன்றாய்க் கூடி அமர்ந்து உண்ணும்போது அந்த இடத்துக்கே ஒரு தனிக் களையும், உண்ணும் உணவுக்குத் தனிச் சுவையும் வந்துவிடுகிறது. சித்ரா பௌர்ணமிக்காக நேற்று இரவு தனது வீட்டு மொட்டை மாடியில் நிலாச்சோற்றை ருசித்த தருணத்தை இப்படித்தான் கண்ணீர் துளிர்க்கச் சொல்கிறார் காரைக்குடியைச் சேர்ந்த இல்லத்தரசி அனுசுயா வெங்கடேசன்.

சித்ரா பௌர்ணமிக்கு நிலாச்சோறு உண்பது என்பது தென் மாவட்ட மக்களுக்கு நெகிழ்ச்சியான தருணங்களை விதைத்துவிட்டுப் போகும் ஒரு நிகழ்வு. குறிப்பாக, வைகையைக் கொண்டாடும் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டத்துக்காரர்களைக் கேட்டால் இதன் அருமையை அனுபவித்துச் சொல்வார்கள். சித்ரா பௌர்ணமி அன்று காலையில் அழகர் ஆற்றில் இறங்கி ஆர்ப்பாட்டம் காட்டிவிட்டுப் போய்விடுவார். அன்று இரவு, அவர் இறங்கிய அதே வைகை ஆற்று மணலில் நம்மவர்களின் நிலாச்சோறு நிகழ்விழா அவரவரின் வசதிக்கேற்பக் களைகட்டும்.

கம்பஞ்சோற்றைக் கூடக் கட்டி வந்து கைமணக்க, வாய்மணக்க, களித்துச் சுவைத்து கதை கதையாய் பேசிக் கலையும் கிராமத்து மக்கள் இன்றைக்கும் இங்கே உண்டு. நிலாச்சோறு உண்டு உறவுகளின் உன்னதம் உணரும் குடும்பங்கள் ஏராளம். இவர்கள் எல்லாம் ஆற்றின் மணலில் உட்கார்ந்து தன்னைச் சாட்சியாக வைத்துச் சொல்லிவிட்டுப் போகும் சுகமான சுமைகளை எல்லாம் அசைபோடுவதற்குள் அந்த முழு நிலவுக்கு அடுத்த சித்திரை வந்துவிடும்.

ஆனால் இந்த ஆண்டு, கடவுளுக்கே கட்டுப்பாடுகளை விதித்திருக்கும் கரோனா, வைகைக்குள் கதை சொல்லும் நிலாச்சோறு வைபவத்துக்கும் வாய்தா வழங்கி விட்டது. இருந்தாலும், இன்னும் ஒரு வருடத்துக்கு அதைத் தள்ளிப்போட விரும்பாத குடும்பங்கள், இந்த முறை தங்கள் வீட்டிலும் தோட்டங்களிலும் நிலாச்சோறு வைபவத்தைக் கொண்டாடி இருக்கிறார்கள்.

இதுகுறித்துப் பேசிய இல்லத்தரசி அனுசுயா வெங்கடேசன், “அப்பா, பெரியப்பா, சித்தப்பாக்கள், அத்தை என எங்களது குடும்பம் கொஞ்சம் பெரிது. அத்தனை பேருமே ஒரே காம்பவுண்டுக்குள் எங்களின் வசதிக்காக தனித் தனி வீடுகளில் இருக்கிறோம். எங்காவது செல்வதாக இருந்தால் எங்கள் குடும்பத்தைச் சேர்ந்த 25 பேரும் ஒன்றாகத்தான் கிளம்புவோம். மற்றவர்களுக்கு வருடத்தில் ஒரு நாள் நிலாச்சோறு என்றால் நாங்கள் வெளியில் கிளம்பினாலே எங்களுக்கு நிலாச்சோறுதான்.

கரோனா கட்டுப்பாடுகளால் கோடையில் எங்களால் எங்கேயும் நகரமுடியவில்லை. அதனால் பிள்ளைகள் உள்பட வீட்டில் அத்தனை பேருமே ஒருவித மன இறுக்கத்துடனேயே நாட்களை நகர்த்திக் கொண்டிருந்தோம். எங்களின் இறுக்கத்தைப் போக்கும் விதமாக நேற்றைய சித்ரா பௌர்ணமி நாள் அமைந்துவிட்டது.

‘இன்னிக்கு நம்ம வீட்டு மொட்டை மாடியிலேயே நிலாச்சோறு சாப்பிட்டா என்ன...’ன்னு எங்க குடும்பத்து வாட்ஸ் அப் குழுவில் நேற்று மாலை ஒரு மெசேஜ் போட்டேன். இதுக்காகவே காத்திருந்தது போல அத்தனை பேரும் நான், நீ எனக் கிளம்பி விட்டார்கள். யார் யார் என்ன மெனுவைத் தயார் செய்வது என வாட்ஸ் அப்பில் விவாதங்கள் நடந்து கொண்டிருக்கும் போதே சிலர் களத்தில் இறங்கியும் விட்டார்கள். ஏழு வீட்டிலும் மெனுக்கள் தயாராகி இரவு 8 மணிக்கு மொட்டை மாடிக்கு வந்துவிட்டோம்.

கரோனா தொற்றைக் கவனத்தில் கொண்டு வேறு யாரையும் நாங்கள் இந்த நிகழ்வுக்கு அழைக்கவில்லை. எங்கள் குடும்பத்து ஆட்களே ஒன்றாக அமர்ந்து நிலாச் சோறு எடுத்துக் கொண்டோம். சாப்பாடு முடிந்ததும் கொஞ்ச நேரம் அதன் அருமை, பெருமைகள் பற்றிப் பேச்சு ஓடியது. அப்படியே, கடந்த காலங்களில் கொடைக்கானல் உள்ளிட்ட இடங்களுக்கு மொபைல் கிச்சன் சகிதம் டூர் போய் வந்த அனுபவத்தை அசை போட்டோம். இதெல்லாம் வளரும் தலைமுறையான எங்கள் வீட்டு குட்டீஸ்களுக்குப் போர் அடித்திருக்கும் போலிருக்கிறது. ‘வாங்க பாட்டுக்குப் பாட்டு விளையாடலாம்’ என்று கிளம்பிவிட்டார்கள்.

அனுசுயா

நாங்களும் சம்மதித்தோம். நிறைந்த நிலவொளியில் ஒன்றரை மணிநேரம், வயது வித்தியாசம் இல்லாமல் அத்தனை பேரும் பாட்டுப் பாடி அசத்தினார்கள். அப்போதும் குட்டீஸ்களுக்கு அலுப்புத் தட்டவில்லை. நேரம் கடந்துவிட்டது என்பதால் நாங்கள்தான் ஆட்டையைக் கலைத்தோம். ரொம்ப நாளைக்குப் பிறகு எங்கள் குடும்பத்து உறுப்பினர்கள் அத்தனை பேருக்கும் கவலைகளை மறந்த பொழுதாக நேற்றைய பொழுது நகர்ந்தது. ‘அம்மா நாளைக்கும் இதே மாதிரி மாடிக்கு வந்து சாப்டலாம்மா’ன்னு எனது நான்கு வயது மகன் ஸ்ரீஷ் சொன்னபோது அதை நான் ஆத்மார்த்தமாக உணர்ந்தேன்.

இனி, ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி நாளில் குடும்பத்தினர் அத்தனை பேரும் இப்படி ஒன்றாக உட்கார்ந்து நிலாச் சோறு சாப்பிடுவது என்ற தீர்மானத்தை வாசித்தபடியே நாங்கள் அத்தனை பேரும் மாடிப்படிகளில் இறங்கினோம்” என்று சொன்னார்.

விழித்திரு, தனித்திரு என்று நம்மைத் துரத்தினாலும் இப்படியான நல்ல விஷயங்களையும் போகிற போக்கில் நமக்கு ஞாபகப்படுத்திவிட்டுத்தான் போகிறது கரோனா!

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x