நலம் தரும் மூலிகைக் கவசம்

நலம் தரும் மூலிகைக் கவசம்
Updated on
1 min read

கரோனா தொற்றிலிருந்து தற்காத்துக்கொள்ள வெளியே செல்லும்போது முகக்கவசம் அணிவது அவசியம் என்பதால் தட்டுப்பாட்டைச் சமாளிக்கும் வகையில் மகளிர் சுயஉதவிக் குழுவினரும் தன்னார்வலர்களும் முகக்கவசம் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருக்கின்றனர். அந்த வகையில் 15 ஆண்டுகளாக இயற்கை நெசவில் ஈடுபட்டுவரும் சேகர், மூலிகைக் கவசத் தயாரிப்பில் இறங்கியிருக்கிறார்.

சென்னை பல்லாவரத்தை அடுத்த அனகாபுத்தூரைச் சேர்ந்த இவர், செயற்கையாகத் தயாரிக்கப்படும் முகக்கவசங்களை விடக் கையால் நெய்யப்படும் கவசங்கள் கூடுதல் நன்மை தரும் என்பதால் இந்தப் பணியில் இறங்கியதாகச் சொல்கிறார். பருத்தி நூலில் வேப்பிலை, மஞ்சள், துளசி, கடுக்காய், படிகாரம் ஆகியவற்றைச் சேர்த்து மூலிகைச் சாயமேற்றி அந்தத் துணியை முகக் கவசமாக நெய்கிறார்கள்.

ஊரடங்கால் ஒரு மாதத்துக்கும் மேலாக நெசவுத்தொழில் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், பெண்களை உறுப்பினர்களாகக்கொண்டு செயல்பட்டுவரும் ‘அனகாபுத்தூர் இயற்கை நெசவுக் குழுமம்’ சார்பில் இந்தக் கவசங்கள் தயாராகின்றன.

“இந்த முகக் கவசங்களைத் துவைத்துப் பயன்படுத்தலாம். ஓரடுக்கு, ஈரடுக்கு, மூன்றடுக்கு என மூன்று வகையான முகக் கவசங்களை நெய்கிறோம். இவற்றுக்கு முறையே ரூ. 20, 40, 75 என விலை நிர்ணயித்திருக்கிறோம். தற்போது பூனேவைச் சேர்ந்த பள்ளியில் இருந்தும் ஆந்திர மாநிலத்தில் இருந்தும் முகக்கவசங்களுக்கு ஆர்டர் கொடுத்திருக்கிறார்கள். ஊரடங்கால் வேலையும் வருமானமும் இன்றி முடங்கிக்கிடக்கும் பெண்களுக்கு, இந்தக் கவசத் தயாரிப்புப் பணி ஓரளவுக்கு உதவியாக இருக்கும்” என்கிறார் சேகர்.

தொடர்புக்கு: 70109 15622

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in