

’’அதுக்குப் பிறகு படிப்படியா முன்னுக்கு வந்தார் ரஜினி. அப்படி முன்னுக்கு வந்த ரஜினியோட ஹிஸ்ட்ரிதான் எல்லாருக்குமே தெரியுமே!’’ என்று சொல்லி நெகிழ்ச்சியும் மகிழ்ச்சியுமாகக் குறிப்பிட்டார் சிவசந்திரன்.
எதையும் சாதாரணமாகச் சொல்வதில்லை சிவசந்திரன். ஆழமாகச் சிந்தித்துச் சொல்கிறார். விருப்பு வெறுப்பின்றி தகவல்களைப் பரிமாறுகிறார்.
நடிகரும் இயக்குநருமான சிவசந்திரன், ‘இந்து தமிழ் திசை’யின் 'RewindWithRamji' நிகழ்ச்சிக்காக, மனம் திறந்து பேட்டியளித்தார்.
அந்த நீண்ட வீடியோ பேட்டியின் எழுத்தாக்கம் இது :
சிவசந்திரன் பேட்டி தொடர்கிறது.
‘’இதற்குப் பிறகு ரஜினியை அடிக்கடி சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. ரஜினியுடன் சேர்ந்தும் நடித்தேன். அந்தக்காலகட்டங்களில் நாங்கள் பேசிக்கொண்டிருக்கும்போது, ‘நான் சத்ருகன் சின்ஹா மாதிரி வரணும் சிவா’ என்று அடிக்கடி சொல்லுவார் ரஜினி. அதற்கு ‘சினிமாவே வேணாம்னு போயிடலாம்னு இருக்கேன்’னு நான் சொல்லுவேன். ‘நீ படிச்சவன். ஏதாவது பண்ணி மேலே வந்துருவே. எனக்கு வேற வழி இல்லியே சிவா’ன்னு ரஜினி சொன்னார்.
அதுபோலவே, கடவுளோட அருளும் ரஜினியோட ஹார்ட் ஒர்க்கும் தமிழ்நாட்டு ஜனங்களோட மகத்தான ஆதரவும் ரஜினியை மிகப்பெரிய சூப்பர் ஸ்டாராக்கியிருக்கு. இவ்ளோ பெரிய உயரத்துல வைச்சுக் கொண்டாடிருக்கிற தமிழ் மக்களுக்கு, ரஜினி நன்றிக்கடன்பட்டிருக்காரு. ரஜினி எதுபண்ணினாலும் தமிழ்நாட்டு மக்களுக்கு நல்லது செய்யணும்.
எம்ஜிஆர், சிவாஜி, ஜெய்சங்கர் இவங்களாம் இருந்த காலகட்டத்துல, இந்த தமிழ் திரையுலகத்தில வித்தியாசமான உச்சரிப்போட, வித்தியாசமான முகத்தோட வந்தவரை, அப்படியே தூக்கி உசரத்துல உக்காரவைச்சாங்க. இன்னிக்கி வரைக்கும் அதே உயரத்துலதான் வைச்சிருக்காங்க. ரஜினியை இறக்கியே வைக்கலை. ரஜினிக்கு என்னதான் கடவுள் அருள் இருந்தாலும் ஜனங்க இன்னமும் அவரைக் கொண்டாடிட்டிருக்காங்க.
இதையெல்லாம் உணர்ந்து ரஜினி, இந்த மக்களுக்கு ஏதாவது செய்யணும். அவர்கிட்ட இது வேணும் அதுவேணும்னு நாம நிக்கப் போகறதில்ல. ரஜினி மக்களுக்கு செய்யட்டும். ரஜினியின் பிறப்பில் ஒரு காரணம் இருக்கு. காரியம் இருக்கு. அவரோட பர்த்ல ஒரு பர்ப்பஸ் இருக்கு. அதை நிறைவேத்தணும்.
ரஜினி சம்பாதிச்சது, ரஜினிக்குப் பேர் வந்தது, புகழ் வந்ததெல்லாம் ரஜினியோட கடுமையான உழைப்பு. அப்படி கடுமையா உழைக்கறதுக்குக் காரணம் இந்த மக்கள். அவங்களுக்கு ரஜினி ஏதாவது செய்யணும்.
ரஜினியை நல்லா அனலைஸ் பண்ணிருக்கேன். ரிசர்ச் பண்ணிருக்கேன். அதாவது, அம்பு வில்லுலேருந்து கிளம்பிட்ட பிறகு அந்த அம்பு, திரும்பிப் பாக்கணும்னு என்ன அவசியம் இருக்கு? ஒரு டார்கெட்டை நோக்கி ரஜினி போயிக்கிட்டிருக்கார். அப்படிப் போகும்போது ஏன் திரும்பிப் பாக்கணும்? உயரத்துல ஏறுறவங்க யாருமே, கீழே குனிஞ்சு ஏறுன இடத்தைப் பாத்ததா சரித்திரமே இல்லை.
நெப்போலியன் சரித்திரத்திலேருந்து எல்லாரோட சரித்திரத்தையும் எடுத்துக்கிட்டா, இப்படித்தான் இருக்கும்.
நாம என்ன நினைக்கணும். ஒருகாலத்துல ஒண்ணா இருந்தோம். சேர்ந்து பழகினோம். ரயில் ஸ்நேகம் போல இருந்தோம். இப்ப என்ன பண்ணனும்... மனசார வாழ்த்தணும். ரஜினியை, இனிய நண்பனை நானும் அப்படித்தான் வாழ்த்தறேன்’’ என்று மனப்பூர்வமாகவும் மானசீகமாகவும் சொல்கிறார் சிவசந்திரன்.
- நினைவுகள் தொடரும்
சிவசந்திரனின் முழுமையான வீடியோ பேட்டியைக் காண :