Published : 07 May 2020 18:16 pm

Updated : 07 May 2020 18:16 pm

 

Published : 07 May 2020 06:16 PM
Last Updated : 07 May 2020 06:16 PM

அயோத்திதாசர் 175: அத்தியாயம் 3- பவுத்தம் நோக்கிய லட்சியப் பயணம்!

iyothee-thassar-tamil-buddhist-movement

பவுத்தம் எவ்வளவு பழையதாக இருந்தாலும் காலந்தோறும் புதியவர்களை ஈர்த்துக் கொண்டே இருக்கிறது. அதன் அன்பு, அமைதி, அறிவு செறிந்த வாழ்வியலும், புத்தரின் போதனையும் பெரிய பெரிய‌ அறிஞர்களை எல்லாம் வசீகரித்திருக்கிறது. மதத்தைக் கடுமையாக விமர்சித்த கார்ல் மார்க்ஸ்கூட பவுத்தத்தின் மீது ஈர்ப்பு கொண்டிருந்தார் என சீன இடதுசாரி ஆய்வாள‌ர் அட்ரியன் சான் வைல்ஸ் குறிப்பிடுகிறார். இந்தியாவில் பாபாசாகேப் அம்பேத்கர் 20 ஆண்டுகளுக்கும் மேலாக அதை ஆய்வு செய்து, இறுதியில் பவுத்தத்தைத் தழுவிக் கொண்டார்.

தமிழகத்தில் பவுத்த சமயத்திற்கு மிக நீண்ட வரலாறு இருக்கிறது. கி.மு. 3-ம் நூற்றாண்டிலேயே பவுத்தம் தமிழகத்துக்கு வந்துவிட்டது. சந்திரகுப்த மௌரியர், பேரரசர் அசோகர் மற்றும் உறவினர் மகேந்திரர் அடங்கிய பவுத்தத் துறவிகள் அதைப் பரப்பியுள்ளனர். அசோகர் காலத்துக் கல்வெட்டுகளும், மணிமேகலை, சிலப்பதிகாரம், மதுரைக்காஞ்சி ஆகிய பவுத்த இலக்கியங்களும் அதற்கு ஆதாரமாக இருப்பதாக மயிலை சீனி.வேங்கடசாமி கூறுகிறார்.


நாள்கோள் கணித்து சுவடிகளை வாசிக்கும் குடும்பத்தைச் சேர்ந்த அயோத்திதாசர் தொடக்கத்தில் அத்வைதத்தைக் கடைப்பிடித்தார். அதில் அவருக்குக் கேள்விகள் எழுந்த சமயத்தில் 'நாரதீய புராண சங்கைத் தெளிவு' எனும் அரிய சுவடி கிடைத்தது. அதுவே அயோத்திதாசரின் பவுத்தம் நோக்கிய பயணத்துக்குத் திறவுகோலாக அமைந்த‌து. 570 பாக்களைக் கொண்ட அச்சுவடி தமிழகத்தின் சாதி, பேத விவரங்களையும், பவுத்தர்கள் எப்படி தீண்டத்தகாதவர்களாக ஆனார்கள் என்பதையும் விளக்கியது.

இவ்வேளையில் பவுத்தத்தில் ஈடுபாடு கொண்டிருந்த தியோசபிகல் சொசைட்டியின் கர்னல் ஹெச்.எஸ்.ஆல்காட், பிளவாட்ஸ்கி ஆகியோரின் அறிமுகம் அயோத்திதாசருக்குக் கிடைத்தது. அவர்களுடனான தொடர் உரையாடல் பவுத்தத்தை மேலும் புரிந்துகொள்ள அவருக்கு உதவியது. ‌10 ஆண்டுகளுக்கும் மேலான‌‌ ஆய்வு, சிலைகள், கல்வெட்டுகள், தமிழ் இலக்கியங்கள், வழக்காறுகள் உள்ளிட்டவற்றில் பெற்ற அறிவின் மூலம் பவுத்தத்தைக் கண்டுணர்ந்தார் தாசர்.

இந்தியாவில் பவுத்தம் அழிந்து போகவில்லை. அது மக்கள் மத்தியில் வெவ்வேறு வடிவங்களில் இன்னமும் வாழ்வதாக விளக்கினார். பவுத்தம் நன்மையையும், சமத்துவத்தையும், சகோதரத்தையும் வலியுறுத்துகிறது. சாதி பேதம் நிறைந்த சமூக அமைப்பைக் களையவும், சாதி, பேதமற்ற திராவிடர்களுக்கு நீதி கிடைக்கவும் அதுவே விடுதலைக்கான கருவி என அயோத்திதாசர் நம்பினார்.

எனவே, தன்னைப் பின்தொடரும் பட்டியலின மற்றும் சாதி, பேதமற்ற திராவிடர்களுடன் பவுத்தத்தைத் தழுவ முடிவெடுத்தார். இதுகுறித்து, 1890-களில் சமூக செயல்பாட்டில் இருந்த ஆளுமைகளுடன் தொடர் ஆலோசனையில் ஈடுபட்டார் தாசர். சென்னையில் ஒடுக்கப்பட்டோர் நலனில் அக்கறை கொண்டு பஞ்சமர் பள்ளிகளை நடத்திய கர்னல் ஹெச்.எஸ்.ஆல்காட்டைச் சந்தித்து பவுத்தம் தழுவ உதவுமாறு கோரினார்.

அயோத்திதாசர் குழுவினருக்கும், ஆல்காட்டுக்கும் இடையே நடந்த தொடர் சந்திப்புகள் குறித்து அயோத்திதாசர் தமிழன் பத்திரிகையில் குறிப்பிட்டு இருக்கிறார். ஆல்காட்டும் தனது டைரி குறிப்புகளில் தேதிவாரியாக அந்தச் சம்பவங்களை விவரித்திருக்கிறார். இதுகுறித்து ஆய்வாளர் ஞான அலாய்சியஸ் தன் ' Iyothee Thassar & Tamil Buddhist Movement' என்ற‌ நூலில் விரிவாகப் பதிவு செய்திருக்கிறார்.

1898-ல், நடந்த சந்திப்பு குறித்து ஆல்காட், ''மருத்துவர் அயோத்திதாசரும், அவரது குழுவினரும் என்னைச் சந்தித்து நாங்கள் பூர்வ பவுத்தர்கள். இம்மண்ணின் பூர்வகுடிகளான நாங்கள் எங்களின் முன்னோரின் வழியில் செல்ல விரும்புகிறோம். எங்களுக்குப் பவுத்த சங்கம் அமைக்க உதவினால் பல நூற்றுக்கணக்கானோர் பவுத்தம் திரும்புவார்கள் எனக் கோரினர்'' என்கிறார்.

இதையடுத்து ஆல்காட் இலங்கையின் மளிகண்ட விகாரையின் தலைமை பவுத்த பிக்கு சுமங்களா மஹாநயகாவுக்கு கடிதம் எழுதினார். அதன்பேரில் அவர் இலங்கையில் இருந்து தர்மபாலா, குணரத்ன ஆகிய இரு பிக்குகளை அயோத்திதாசருடன் ஆலோசனை நடத்த அனுப்பி வைத்தார். ஆல்காட், இலங்கை பிக்கு குழுவினருடன் அயோத்திதாசர் தரப்பு பவுத்தம் தழுவுவது குறிது கலந்தாலோசனைகளை நடத்தியது. அதன் முடிவில் 1898 ஜூன் 4-ம் தேதி அயோத்திதாசர் தனது குழுவினருடன் சேர்ந்து அடையாறில் 'திராவிட பவுத்த சங்கம்' என்ற அமைப்பைத் தொடங்கினார். அமெரிக்காவின் ஆல்காட், இலங்கையின் பிக்குகள் நிறைய ஆலோசனைகள் வழங்கியபோதும், அயோத்திதாசர் தன் பவுத்த அமைப்புக்கு திராவிட அடையாளத்தையே வழங்கினார்.

தன்னைப் பிடித்திருந்த சனாதான சமயத்தில் இருந்து வெளியேறி, விடுதலை கொடுக்கும் சமயத்தைத் தழுவ அயோத்திதாசர் அதீத ஈடுபாடு காட்டினார். அதனால் ஆல்காட் பவுத்தத் தழுவலுக்கானப் பயணப் பணிகளை முடுக்கிவிட்டார். உடனடியாக நூற்றுக்கணக்கானோரை இலங்கைக்கு அழைத்து செல்வதில் சிக்கல் ஏற்பட்டது. எனவே, அயோத்திதாசரையும், ஆல்காட் பஞ்சமர் பள்ளி ஆசிரியருமான பி.கிருஷ்ணசாமியையும் தேர்வு செய்து இலங்கைக்கு அனுப்ப முடிவெடுக்கப்பட்டது.

1898-ம் ஆண்டு ஜூலை 1-ம் தேதி இருவரும் ஆல்காட் உடன் சென்னையில் இருந்து கிளம்பினர். மறுநாள் தூத்துக்குடியில் இருந்து கப்பல் புறப்பட ஜூலை 3-ம் தேதி கொழும்பு அடைந்த‌னர். அன்றைய தினமே மளிகண்ட விகாரையின் தலைமை பவுத்த பிக்கு சுமங்களா மஹாநயகாவை தர்மபாலாவுடன் சந்தித்து பவுத்தம் தழுவல் குறித்துப் பேசினர். அப்போது சுமங்களா, இந்திய சமூகத்தில் சாதியின் பெயரால் கீழ்நிலைக்கு ஆளாக்கப்பட்டோர், பவுத்தமேற்றால் சுயமரியாதை மிகுந்த சுதந்திர மனிதனாக வாழலாம் என போதனைகளை வழங்கினார். பின்னர் தன் கையாலேயே அயோத்திதாசருக்கு அவர் தீட்சை வழங்க, அவரும் உத்வேகத்தோடு பஞ்சசீலம் சொல்லி பவுத்தம் தழுவினார். இந்தச் சம்பவம்தான் இந்தியாவில் மீண்டும் பவுத்தம் மறுமலர்ச்சி அடையவும், அம்பேத்கர் மூலம் புத்துணர்ச்சி பெறவும் அச்சாரமாக அமைந்த‌து.

அசோகருக்குப் பின் புத்தரின் மண்ணில் இருந்து வந்த இரு கருமைநிற மனிதர்களின் பவுத்தமேற்பு அங்கு கூடியிருந்த சிங்களர்களுக்கு மிகுந்த உற்சாகத்தைக் கொடுத்தது. இந்தக் களிப்பில் அயோத்திதாசரை அரவணைத்த அவர்கள் கேலானி, மல்வத்த, அஸ்கிரிய ஆகிய புத்த கோயில்க‌ளுக்கு அழைத்துச் சென்று சுற்றிக் காட்டினர். ரமண்ணா நிகயா உள்ளிட்ட தலைமைப் பிக்குகளை சந்திக்க வைத்தும், சுவையான உணவைப் பரிமாறியும் உபசரித்தனர். சென்னை திரும்பும் முன் கொப்பொகடுவாவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பெருங்கூட்டத்தில் அயோத்திதாசரையும், ஆல்காட்டையும் உரையாற்ற வைத்தனர்.

இந்தியக் கூட்டங்களில் உரையாற்ற அனுதி மறுக்கப்பட்டிருந்த அயோத்திதாசருக்கு இலங்கையில் பவுத்தக் கூட்டங்களில் கிடைத்த வாய்ப்பு மிகுந்த உற்சாகத்தை கொடுத்திருக்கும். பாலி, சமஸ்கிருதம் உள்ளிட்ட பன்மொழிப் புலமை பெற்ற அவரின் உரை, சிங்களரை வியக்க வைத்திருக்கும். புத்த ஒளியைப் பெற்ற மகிழ்ச்சியில் அயோத்திதாசர் ஜூலை 8-ம் தேதி பி.ஐ.ஸ்டீமர் கப்பல் மூலம் தூத்துக்குடி வந்தடைந்தார். ஆழ்கடலின் தட்பவெப்பமும், உப்புக் காற்றும் அவரது உடலுக்கு சோர்வை உண்டாக்கினாலும், லட்சியப் பயணத்தை நிறைவு செய்த களிப்பில் மிதந்தார் என ஆல்காட் குறிப்பிடுகிறார்.

இலங்கையில் தேரவாத பவுத்தம் ஏற்ற அயோத்திதாசர், இந்தியாவில் அதில் இருந்து விலகி தமிழ் பவுத்தத்தை முன்னெடுத்தார். இது யாருமே எதிர்பாராத திருப்புமுனை முடிவு. அயோத்திதாசரின் பவுத்தம் சமூக பகுத்தறிவு, சமத்துவம் மூலம் பன்முகப் பண்பாடுகளையும் மதித்து உள்வாங்குவதாக இருந்தது. இந்தியாவில் பவுத்த மறுமலர்ச்சிக்கு வித்திட்ட‌ அது, சாதி பேதமற்ற திராவிடர்களுக்குச் சொந்த‌மானது. பிற பவுத்த வகைகளில் இருந்து மாறுபட்ட அயோத்திதாசரின் பவுத்தம், அவரை மறந்த சாதியற்ற, சாதியுள்ள தமிழர்களுக்கு இன்னமும் பெருமையைத் தேடிக்கொடுத்துக் கொண்டிருக்கிறது.

(பண்டிதரைப் படிப்போம்...)

தொடர்புக்கு: இரா.வினோத்
vinoth.r@hindutamil.co.in


தவறவிடாதீர்!

Iyothee ThassarTamil Buddhist Movementஅயோத்திதாசர்அயோத்திதாசர் 175அயோத்தி தாசர்பவுத்தம்புத்தம்லட்சியப் பயணம்

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x