Last Updated : 07 May, 2020 03:17 PM

 

Published : 07 May 2020 03:17 PM
Last Updated : 07 May 2020 03:17 PM

அப்போது பி.மாதவன்; இப்போது கவுதம் வாசுதேவ்மேனன் - பாட்டுவரியை படத்தலைப்பாக்கிய இயக்குநர்கள் 

பாடலின் வரியை படத்தலைப்பாக்குவதில் பி.மாதவனுக்கு ஆர்வம் உண்டு. பெரும்பாலான மாதவனின் படங்கள், பாடலின் வரிகளைக் கொண்டிருப்பது சிறப்பு.
டி.ஆர்.ரகுநாத்திடம் உதவி இயக்குநராகவும் இயக்குநர் ஸ்ரீதரிடம் இணை இயக்குநராகவும் பணியாற்றியவர் பி.மாதவன். இவரின் படங்களில் ஸ்ரீதர் ஸ்டைல் இருக்கும்.

’மணியோசை’ என்ற படம்தான் இவர் முதன்முதலாக இயக்கிய படம்.


பின்னர், எம்ஜிஆர் நடித்த ‘தெய்வத்தாய்’ படத்தை இயக்கினார். இந்தப் படத்துக்கு வசனம் கே.பாலசந்தர்.


ஸ்ரீதரிடம் பணியாற்றிக் கொண்டிருக்கும்போதே, மாதவனின் திறமையில் நம்பிக்கை வைத்த சிவாஜிகணேசன், தொடர்ந்து மாதவனின் இயக்கத்தில் பல படங்களில் நடித்தார்.


சிவாஜியை வைத்து ‘நீலவானம்’, ‘ராமன் எத்தனை ராமனடி’, ’மன்னவன் வந்தானடி’, ‘பட்டிக்காடா பட்டணமா’ என்பது உள்ளிட்ட பல படங்களை இயக்கினார்.இவையெல்லாம் பாடல் வரிகள்.


‘’பி.மாதவன் சாருக்கு பாடல்கள் மீது மிகப்பெரிய காதல் உண்டு. எப்போதும் ஏதாவது ஒரு பாடலை முணுமுணுத்துக்கொண்டே இருப்பார். அது யாருடைய படங்களாக இருந்தாலும், அந்தப் படத்தின் பாடல்கள் பிடித்துவிட்டால், அந்தப் பாட்டை வாய்விட்டுப் பாடிக்கொண்டே இருப்பார்’’ என்கிறார்கள் திரையுலகினர்.
‘’எம்.ஜி.ஆரின் ‘மாட்டுக்கார வேலன்’ படத்தில் ‘பட்டிக்காடா பட்டணமா’ என்ற பாடல் வெகு பிரபலம். இந்தப் பாட்டில் மனதைப் பறிகொடுத்த பி.மாதவன், சிவாஜியையும் ஜெயலலிதாவையும் வைத்து படத்தை இயக்கியபோது, ‘பட்டிக்காடா பட்டணமா’ என்றே டைட்டிலை வைத்தார்’’ என்கிறார்கள்.


’ராமன் எத்தனை ராமனடி’ படத்தில் வரும் ‘பொண்ணுக்கு தங்க மனசு’ பாடல் வரியை, பின்னாளில் ஒருபடத்துக்கு அவரே தலைப்பாக வைத்து இயக்கினார். அதேபோல், சிவாஜி நடித்த ‘கெளரவம்’ படத்தில் ‘பாலூட்டி வளர்த்த கிளி’ என்ற பாடல் செம ஹிட். வியட்நாம் வீடு சுந்தரம் இயக்கிய இந்தப் படத்தின் இந்தப் பாடல் வரியை, பின்னாளில் ‘பாலூட்டி வளர்த்த கிளி’ என்றே தலைப்பிட்டு படமெடுத்தார் பி.மாதவன்.


ரஜினி, விஜயகுமார், ஸ்ரீப்ரியாவை வைத்து பி.மாதவன் படம் ஒன்றை இயக்கினார். அந்தப் படத்துக்கு ‘உயர்ந்த மனிதன்’ படத்தின் பாடலின் ஆரம்பத்தைத் தலைப்பாக்கினார். அதுதான் ‘என் கேள்விக்கென்ன பதில்’.


‘’பி.மாதவன் சாரின் இப்படி பாட்டு வரியை படத்துக்கு தலைப்பாக வைப்பதை ரசித்த இயக்குநர்கள் பலர், ‘அடுத்து எந்தப் பாட்டை தலைப்பாக்கப் போறீங்க மாதவன்?’ என்று கேட்பார்கள். என்னுடைய அப்பா முக்தா சீனிவாசன் இப்படித்தான் ஒருநாள், ‘மாது, அடுத்தாப்ல என்ன படம் எடுக்கிறே? எந்தப் பாட்டை டைட்டிலாப் புடிச்சிருக்கே?’ என்று கேட்டார். உடனே மாதவன் சார், ‘மன்னவன் வந்தானடி’ என்று அந்தப் பாட்டை ராகம் போட்டு பாடிக்காட்டினார். அங்கே இருந்தவர்கள், அதை கைதட்டி ரசித்தார்கள்.
இப்படியாக, பி.மாதவன் ‘மாணிக்கத்தொட்டில்’, ‘சின்னக்குயில் பாடுது’ என்றெல்லாம் பாட்டையே தலைப்பாக்கினார்.


இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனனும் பாட்டு வரியை படத்துக்குத் தலைப்பாக வைப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார். ‘காக்க காக்க’ என்று பக்திப் பாடலின் வரியை தலைப்பாக்கினார். ‘பச்சைக்கிளி முத்துச்சரம்’, ‘வேட்டையாடு விளையாடு’, ‘வாரணம் ஆயிரம்’, ‘விண்ணைத்தாண்டி வருவாயா’, ‘உன்னை அறிந்தால்’ என்பதிலிருந்து ‘என்னை அறிந்தால்’ என்றெல்லாம் டைட்டில் வைத்தார் கவுதம் வாசுதேவ் மேனன்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x