Published : 07 May 2020 11:56 AM
Last Updated : 07 May 2020 11:56 AM

‘தாகம் தீர்க்க’ தயாரான டாஸ்மாக் கடைகள்: சர்வே எடுக்க அலைந்து திரியும் போலீஸார்

பொதுமுடக்கம் முழுமையாக முடிவுக்கு வருவதற்கு முன்னதாகவே, தமிழகத்தின் பல பகுதிகளில் இன்று டாஸ்மாக் மதுக்கடைகள் திறக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், டாஸ்மாக் வாசலில் காத்திருக்கிறார்கள் தமிழகக் ‘குடி’மகன்கள். இன்னொரு பக்கம் மதுக்கடைத் திறப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து சில கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றன.

இவர்களுக்கு நடுவே 42 நாள் ஊரடங்கில் வீதிக்கு வரும் மக்களை லத்தி சுழற்றி வீட்டுக்குத் துரத்திய போலீஸார், இப்போது எந்தெந்த டாஸ்மாக் கடை பதற்றமானது, எங்கு மக்கள் எதிர்ப்பு கிளம்பும் என்பது பற்றி சர்வே எடுத்து தலைமைக்கு அனுப்பிக் கொண்டிருக்கிறார்கள். இது கோவை மாவட்டத்தில் மிகத் தீவிரமாக நடந்து வருகிறது.

கோவை மாவட்டத்தில் 254 டாஸ்மாக் மதுக்கடைகள் உள்ளன. பொதுமுடக்கம் தளர்த்தப்பட்டிருக்கும் நிலையில், சென்னையைத் தவிர பல இடங்களில் மதுபானக் கடைகள் திறக்கப்பட்டுள்ளன. இதையொட்டி, தீபாவளி போன்ற பண்டிகைக் காலம் போல் மாவட்ட அளவில் மதுபான கடைகளுக்குத் தேவைக்கும் அதிகமான மது பாட்டில்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. நேற்று (மே 6) ஒருநாள் மட்டும் சுமார் 60 கோடி ரூபாய் மதிப்புள்ள சரக்குகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக டாஸ்மாக் அலுவலர்கள் தெரிவிக்கின்றனர். அதைத் தொடர்ந்து ஒவ்வொரு டாஸ்மாக் கடை வாசலிலும் வாடிக்கையாளர்கள் எப்படி முறையாக நின்று வாங்க வேண்டும் என்றும் விதிமுறைகளை ஊழியர்களுக்கு வகுத்துத் தந்துள்ளனர். இது குறித்த தகவல்கள் போலீஸாருக்கும் கொடுக்கப்பட்டுள்ளன.

அதாவது ஒரு டாஸ்மாக் கடை முன்னர் 50 முதல் 100 பேர் வரிசையில் நிற்கும் வகையில் பேரிகார்டு (இரும்பிலான தடுப்புகள்) அமைக்கப்படும். கூட்டத்தைக் கட்டுப்படுத்த ஒவ்வொரு கடை முன்பும் 5 போலீஸார் மற்றும் சில தன்னார்வ அலுவலர்கள் காவலில் இருப்பர். காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே கடை திறக்கப்பட்டிருக்கும். கடைகளின் முன் விலைப் பட்டியல் வைக்கப்படும்.

யாராவது வரிசையைப் பின்பற்றாமல் முண்டியடித்துச் செல்ல முயன்றால் அவர் உடனடியாக வெளியேற்றப்படுவார்.‌ அவருக்கு மதுபானம் வழங்கப்படமாட்டாது. மதுபானக் கடைகளில் தனிமனித இடைவெளி கட்டாயம். கடைகளை மூடச் சொல்லி, மது விற்கக் கூடாது என யாராவது எதிர்ப்பு காட்டினால் போலீஸார் மூலமாக நடவடிக்கை எடுக்கப்படும். கட்டுப்படுத்துதல் மண்டலம் பகுதியில் உள்ள மதுபானக் கடைகள் திறக்கப்பட மாட்டாது. மதுபானக் கடைகளில் கூடுதல் ஊழியர்களை நியமித்து விற்பனையைத் துரிதப்படுத்தவும் திட்டமிட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள். மறுபக்கம், டாஸ்மாக் கடைகளை, போலீஸார் தொடர்ந்து நோட்டம் விட்டு வருகின்றனர்.

குறிப்பாக, ‘உங்கள் பகுதியில் இருக்கும் டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கை எவ்வளவு? கடைகள் அமைந்திருக்கும் இடங்கள் என்னென்ன? மதுக் கடை திறக்கப்படுவதற்குப் பொதுமக்களின் எதிர்ப்பு எப்படி இருக்கிறது? தடுப்புகள் போடுவதில் பிரச்சினை ஏதும் உண்டா? அங்குள்ள அரசியல் கட்சிகள் நிலைப்பாடு, எதிர்ப்பு தெரிவிக்கும் முக்கியப் பிரமுகர்கள், பதற்றமான டாஸ்மாக் கடைகள் பற்றியெல்லாம் ஆய்வு செய்து தலைமைக்கு அனுப்பவும்’ என்று ஒவ்வொரு போலீஸ் ஸ்டேஷனுக்கு உள்ளிட்ட உளவுப் பிரிவு போலீஸாருக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

ஒரு ஸ்டேஷனுக்கு ஓரிரு உளவுப் போலீஸாரே இருப்பது வழக்கம். இந்நிலையில், ஒரு ஸ்டேஷன் லிமிட்டில் ஐந்தாறு டாஸ்மாக் கடைகள் வரும் பகுதிகளைச் சேர்ந்த போலீஸார் இந்தத் தகவல்களைச் சேகரிக்க படாதபாடு படுவதைக் காண முடிகிறது.

இந்தப் பெருந்தொற்றுக் காலத்திலும் 'குடி'மகன்களின் தாகத்தைப் போக்க, அரசு இயந்திரம் அதி சிரத்தையாக இயங்குவது சமூக ஆர்வலர்களைக் கவலையில் ஆழ்த்தியிருக்கிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x